Published:Updated:

இந்திய அரசு பரிசளித்த மகாத்மா காந்தி சிலை... அமெரிக்காவின் டேவிஸ் நகரில் சேதம்! - என்ன நடந்தது?

காந்தி சிலை சேதம்
காந்தி சிலை சேதம்

காந்தி சிலை இங்கு நிறுவப்பட்ட சமயத்திலேயே காலிஸ்தான் ஆதரவாளர்களும், இந்தியர்களுக்கான சிறுபான்மையினர் அமைப்பு ஒன்றும் `இங்கு காந்தி சிலை வைக்கக் கூடாது' என ஆர்ப்பாட்டம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்திய அரசாங்கம், நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக கலிஃபோர்னியாவிலுள்ள டேவிஸ் நகராட்சி நிர்வாகத்துக்கு மகாத்மா காந்தி சிலை ஒன்றைப் பரிசளித்தது. ஆறடி உயரம், 294 கிலோ எடையுடைய வெண்கலச் சிலை டேவிஸ் நகரத்தின் பூங்கா ஒன்றில் நிறுவப்பட்டது. தற்போது அந்தச் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

காந்தி சிலை, டேவிஸ் நகரம்
காந்தி சிலை, டேவிஸ் நகரம்

கடந்த ஜனவரி 27-ம் தேதி, அதிகாலையில் வேலைக்கு வந்த பூங்கா ஊழியர், காந்தி சிலை சேதமடைந்திருந்ததைப் பார்த்ததாகவும், உடனே உள்ளூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

சேதமடைந்த சிலை பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் சரிசெய்யப்பட்டு மீண்டும் நிறுவப்படவிருப்பதாகவும் டேவிஸ் நகராட்சி தகவல் தெரிவித்திருக்கிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறியும் பணியில் உள்ளூர் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்திய வெளியுறவுத்துறை இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறது.

இந்தச் சிலை நிறுவப்பட்ட சமயத்திலேயே சிலர் `இங்கு காந்தி சிலை வைக்கக் கூடாது' என ஆர்ப்பாட்டம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. காலிஸ்தான் ஆதரவாளர்களும், இந்தியர்களுக்கான சிறுபான்மையினர் அமைப்பு ஒன்றும் இந்தப் போராட்டத்தை நடத்தியதாகத் தெரிகிறது.

சேதமடைந்த காந்தி சிலை
சேதமடைந்த காந்தி சிலை
Twitter/@JournoPranay
Vikatan

சிலையின் கால் பகுதியும், தலைப் பகுதியும் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் புகைப்படத்தைத் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, `இன்று நல்ல நாள்' என்று காலிஸ்தான் ஆதரவாளர்கள் பதிவிட்டிருக்கின்றனர்.

டேவிஸ் நகரத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கும் சம்பவம் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான செய்திகள் அவரது நினைவுநாளிலேயே வெளியாகியிருப்பது இந்தியர்கள் அனைவரையுமே கலகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு