Published:Updated:

கொரோனா பாதிப்பில் 5-வது இடம்; உயிரிழப்பில் 10-வது இடம் - உலக நாடுகளைப் பிரமிப்பில் ஆழ்த்திய ஜெர்மனி

ஜெர்மனி
ஜெர்மனி ( AP )

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் ஜெர்மனி, பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. மொத்த உலகத்திலும் இதுவரை 3,08,594 பேர் பாதிக்கப்பட்டு, 13,069 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் சீனா, இரண்டாவது இடத்தில் இத்தாலி, மூன்றாவதாக அமெரிக்கா, நான்காவது இடத்தில் ஸ்பெயின் ஐந்தாவது இடத்தில் ஜெர்மனி ஆகியவை உள்ளன.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

அதிக மக்கள் உயிரிழந்தவர்களின் பட்டியலில், முதலாவதாக இத்தாலியும் இரண்டாவது இடத்தில் சீனா, மூன்றாவது இடத்தில் இரான், நான்காவதாக ஸ்பெயின் மற்றும் ஐந்தாவது இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த இரண்டு பட்டியலின் ஒப்பீட்டில், ஜெர்மனியின் நடவடிக்கை உலக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் ஜெர்மனி 5-வது இடத்திலும் உயிரிழப்புகள் பட்டியலில் 10-வது இடத்திலும் உள்ளது.

ஜெர்மனியின் தற்போதைய நிலவரப்படி, அங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,364 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆகவும் உள்ளது. மற்ற நாடுகளில் 3000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் அங்கு சராசரியாக 150 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், ஜெர்மனியில் 22,000 பேருக்கு 84 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளது அந்நாட்டின் சிறந்த மருத்துவத்தை உலகுக்குக் காட்டியுள்ளது. பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனா வைரஸால் ஏற்படும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த திணறிவரும் நிலையில், ஜெர்மனியின் நடவடிக்கை மற்ற நாடுகளை ஆச்சர்யப்படவைத்துள்ளது.

ஜெர்மனி
ஜெர்மனி
AP

ஜெர்மனியின் இந்த நிலைகுறித்து விளக்கம் அளித்துள்ள ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள், ‘பிரிட்டன் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில், உயிர் காக்கும் மருத்துவக் கருவிகளுடன் 4,000 படுக்கைகள் உள்ளன . பிரான்சில் 7000 படுக்கைகள் உள்ளன. இத்தாலியில் 5000 படுக்கைகள் மட்டுமே உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரும் பிரச்னையாக இருப்பது சுவாசக் கோளாறு. எனவே, பிற நாட்டில் அவசர சிகிச்சைப் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் அங்கு ‘ரேஷன்’ முறையில் சிகிச்சை அளிப்பதால், உயிர் பிழைக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

ஜெர்மனியைப் பொறுத்தவரை அங்கு 25,000 உயிர் காக்கும் சிகிச்சைக் கருவிகளுடன்கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதனால் அந்நாடு முழுவதும் வைராஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக எளிதாக சிகிச்சையளிக்க முடியும். இது மட்டுமில்லாது, அந்நாட்டில் அரசு ஆய்வகங்கள் மட்டுமின்றி தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா வைரஸைக் கண்டறியும் சோதனைகள் நடைபெறுகின்றன.

ஜெர்மனி
ஜெர்மனி
AP

அந்நாட்டில், நாள் ஒன்றுக்கு 12,000 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. காய்ச்சல் வந்தவுடனேயே ரத்தப் பரிசோதனை செய்யப்படுவதால், ஆரம்பகட்டத்திலேயே நோயாளிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதனால் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் பொதுமக்கள் வெளியில் செல்வது கட்டுப்படுத்தப்பட்டு, பிறநாட்டினர் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு