Published:Updated:

முன்பு மகிந்த ராஜபக்‌சேவின் வலது கை; இப்போது இலங்கை அதிபர் - யார் இந்த கோத்தபய ராஜபக்‌சே?

இலங்கையில் நடந்து வரும் அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்‌சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்‌சே புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கோத்தபய ராஜபக்‌சே
கோத்தபய ராஜபக்‌சே ( Twitter/@GotabayaR )

இலங்கையின் 8-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கோத்தபய ராஜபக்‌சே. இவர் இலங்கை ராணுவப்படையின் லெப்டினன்ட் கர்னலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பரம்பரை அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1949-ம் ஆண்டு தெற்கு இலங்கை, மடாரா மாவட்டத்தில் உள்ள பலடுவா பகுதியில் பிறந்துள்ளார்.

கோத்தபய ராஜபக்‌சே
கோத்தபய ராஜபக்‌சே
Twitter/@GotabayaR

தந்தை டி.ஏ ராஜபக்‌சே, அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இரண்டு முறை இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்‌சே. டி.ஏ ராஜபக்‌சேவுக்கு மொத்தம் ஒன்பது பிள்ளைகள் அதில் ஐந்தாவதாகப் பிறந்தவர்தான் கோத்தபய ராஜபக்‌சே. அரசியல் குடும்பம் என்பதால் அனைவரும் அரசியலில் முழுக் கவனம் செலுத்தும்போது, இவர் இலங்கை ராணுவத்தில் இணைந்து பணியாற்றி 1992-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

`தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்!'- இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபக்‌சே

பின்னர் 2005-ம் ஆண்டு இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்‌சே பதவியேற்றபோது, கோத்தபய ராஜபக்‌சே இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் தன் சகோதரர் மகிந்த ராஜபக்‌சேவின் உற்ற நண்பராகவும், வலது கை போலவும் இவர் செயல்பட்டார். பின்னர் 2015-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த தோல்வியடைந்த பிறகு கோத்தபயவும் பதவியிழந்தார்.

கோத்தபய ராஜபக்‌சே
கோத்தபய ராஜபக்‌சே
Twitter/@GotabayaR

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது அரசு படையிலிருந்த கோத்தபய, விடுதலை புலிகளுக்கு எதிராகச் செயல்பட்டதாக இவர் மீது பல்வேறு போர்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் அதே போரின் போது நடந்த தற்கொலைப் படை தாக்குதலிலிருந்து கோத்தபய உயிர் தப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் தேர்தல்... அந்தரத்தில் தமிழர்கள்!

2015-ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அதிபராக மைத்திரிய பால சிறிசேனா பதவியேற்றார். இதற்கிடையில் ஈழப் போரும் முற்றிலும் ஓய்ந்தது. இந்தக் காலகட்டத்தில் தீவிர அரசியலில் கவனம் செலுத்திய கோத்தபய ராஜபக்‌சே, இலங்கையில் நேற்று நடந்த 8-வது அதிபர் தேர்தலில் இலங்கை பொதுசன முன்னணி கட்சி சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.

கோத்தபய ராஜபக்‌சே
கோத்தபய ராஜபக்‌சே
Twitter/@GotabayaR

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்‌சேவுக்கும் புதிய ஜனநாயக முன்னணி கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இன்று காலை தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான யாழ்ப்பாணம், முல்லைத் தீவு, கிளி நொச்சி போன்ற பல பகுதிகளில் சஜித் மொத்த வாக்குகளையும் அள்ளினார். அதன் பின்னர் சிங்களர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் முடிவுகள் அப்படியே தலைகீழாக மாறின.

முன்னதாக ஒரு லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்ற சஜித் பின்னுக்குத் தள்ளப்பட்டார். அதேநேரம் பின்னால் இருந்த கோத்தபய, சஜித்தை விட 1.5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து கோத்தபயவே முன்னிலையிலிருந்து வந்தார். கோத்தபய ஐம்பது சதவிகித வாக்குகள் பெற்றபிறகு, தான் தோல்வியடைந்ததை ஒப்புக்கொண்டதாக அறிவித்துவிட்டார் சஜித் பிரேமதாசா.

கோத்தபய ராஜபக்‌சே
கோத்தபய ராஜபக்‌சே
Twitter/@GotabayaR

சஜித் தன் தோல்வியை ஒப்புக்கொண்டிருந்தாலும் இன்னும் அங்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முழுமையான வாக்கு எண்ணிக்கை நிறைவந்த பிறகுதான் அதிகாரபூர்வமாக இலங்கை அதிபர் அறிவிக்கப்படுவார்.