Published:Updated:

வலுக்கும் எதிர்ப்புகள்: மாலத்தீவிலிருந்து தப்பிய கோத்தபய... சிங்கப்பூரில் எத்தனை நாள்கள்?!

கோத்தபய ராஜபக்‌சே

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌சே மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றிருக்கும் நிலையில், அங்கிருந்து எங்கே செல்லப்போகிறார்?

வலுக்கும் எதிர்ப்புகள்: மாலத்தீவிலிருந்து தப்பிய கோத்தபய... சிங்கப்பூரில் எத்தனை நாள்கள்?!

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌சே மாலத்தீவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்றிருக்கும் நிலையில், அங்கிருந்து எங்கே செல்லப்போகிறார்?

Published:Updated:
கோத்தபய ராஜபக்‌சே

இலங்கைப் போராட்டம்:

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக, கடந்த மாதம் இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இலங்கையின் புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கே தேர்வுசெய்யப்பட்டார். இருந்தபோதிலும், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலகச் சொல்லி பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்திவந்தனர்.

இலங்கைப் போராட்டம்
இலங்கைப் போராட்டம்
AP

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் தனது மாளிகையிலிருந்து ராணுவத் தலைமை அலுவலகத்துக்குத் தப்பித்துச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையையும், பிரதமர் அலுவலகத்தையும் கைப்பற்றினர். மேலும், பிரதமர் ரணில் வீடு தீக்கரையானது. அதிபர் பதவி விலகும்வரை தங்களின் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று போராட்டக்காரர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்துவந்த நிலையில், அதிபர் இலங்கையைவிட்டுத் தப்பித்துச் செல்ல முடிவுசெய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிபர் தப்பி ஓட்டம்:

ராணுவக் கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கையிலிருந்து அதிபர், அவரின் மனைவி உட்பட நான்குக்கும் மேற்பட்டோர் மாலத்தீவுக்குச் சென்றதாகக் கூறப்பட்டது. அதிபர் இலங்கையிலிருந்து வெளியேறியதை அந்நாட்டு விமானப்படை மற்றும் பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தச் சூழலில், கோத்தபய கடந்த ஜூலை 13-ம் தேதி இலங்கையில் இடைக்கால பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்க - கோத்தபய
ரணில் விக்ரமசிங்க - கோத்தபய

இலங்கையின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி முன்னிலையில் இடைக்காலப் பிரதமராக ரணில் பதவியேற்றுக்கொண்டார். வரும் 20-ம் தேதி இலங்கையின் புதிய அதிபரைத் தேர்வுசெய்யத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மேலும், இலங்கையிலிருந்து அதிபரின் சகோதரர்களான மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் தப்பித்துச் செல்ல வாய்ப்பிருப்பதால், அதைத் தடுக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், அவர்கள் இருவரும் வரும் 28-ம் தேதிவரை இலங்கையிலிருந்து வெளியேற இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

பதவி விலகல்:

தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சென்ற கோத்தபய அங்கிருந்து வெளியேறக் கோரி கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து கோத்தபய மாலத்தீவிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர். மாலத்தீவில் கோத்தபயவுக்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்துவந்த நிலையில், அவர் அங்கிருந்து சிங்கப்பூருக்குச் செல்ல திட்டம் போட்டிருந்தார். சில காரணங்களால் அவர் தனி ஜெட் மூலம் சிங்கப்பூர் போவது தாமதமானது.

கடைசியாக சவுதி ஏர்லைன்ஸ் மூலமாக, அவர் தன் மனைவியுடன் நேற்று சிங்கப்பூர் சென்றடைந்தார். கோத்தபய தனிப்பட்ட பயணத்துக்காக சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், அவருக்கு அடைக்கலம் தரவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று கோத்தபய ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பாவுக்கு அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலை மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் உறுதிசெய்திருக்கிறார்.

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் ஒருவர் நாடு நாடாகத் தப்பித்துச் செல்லும் சம்பவம் உலக அரங்கில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கோத்தபயவுக்கு எதிராக அங்கும் எதிர்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அவர் அங்கு தற்காலிகமாகத்தான் தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவர் சவுதிக்குச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும், விரைவில் தனி விமானம் மூலமாகவோ அல்லது சூழலுக்கு ஏற்ப பயணிகள் விமானம் மூலமாகவோ அவர் சவுதிக்குச் சென்றுவிடுவார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.