Published:Updated:

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தோற்றது சஜித் பிரேமதாசா மட்டுமல்ல, இந்தியாவும்தான்... ஏன்?

கோத்தபய ராஜபக்‌ஷே
கோத்தபய ராஜபக்‌ஷே

இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்‌ஷே பொறுப்பேற்றிருக்கிறார். ராஜபக்‌ஷே குடும்பத்தில், மகிந்த ராஜபக்‌ஷே -வுக்குப் பிறகு இலங்கை ஜனாதிபதி ஆகியிருக்கும் இரண்டாவது நபர் கோத்தபய ராஜபக்‌ஷே.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளுக்குத் துரோகம் செய்யாதவாறு வந்துள்ளது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் கோத்தபய ராஜபக்‌ஷே, ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசாவை 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறார். இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக கோத்தபய ராஜபக்‌ஷே பொறுப்பேற்றிருக்கிறார். ராஜபக்‌ஷே குடும்பத்தில், மகிந்த ராஜபக்‌ஷேவுக்குப் பிறகு இலங்கை ஜனாதிபதி ஆகியிருக்கும் இரண்டாவது நபர் கோத்தபய ராஜபக்‌ஷே.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்
இலங்கை ஜனாதிபதி தேர்தல்
The Times
இலங்கை அதிபர் தேர்தல்: இந்தியாவைப் பொருட்படுத்தாத கட்சிகள்... என்ன காரணம்?

தமிழர்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய வடக்கு, கிழக்கு இலங்கையில் சஜித்தும், சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள தென்னிலங்கையில் கோத்தபயவும் முன்னிலை பெற்றிருக்கின்றனர். இலங்கைத் தேர்தல் தொடர்பாக விகடனில் முன்பு விரிவாக எழுதப்பட்டுள்ளது. தற்போது, தேர்தல் முடிவுகள் எந்த மாதிரியான திருப்பங்களை ஏற்படுத்தும் என்பது தொடர்பாகச் சிலரிடம் பேசினோம்.

இலங்கை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு, இலங்கை போர்க்குற்றங்களை ஆவணப்படுத்தி புத்தகம் வெளியிட்டுள்ள பேராசிரியர் ராமு மணிவண்ணன் நம்மிடம் பேசுகையில்,

"இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு ஒரு விதத்தில் நன்மைதான். எதிரெதிரான அரசியலை இலங்கை இனி எதிர்கொள்ள இருக்கிறது. வெறும் ராஜபக்‌ஷே எதிர்ப்பு என்கிற நிலையைக் கடந்து, தமிழர்களின் அரசியல் இதற்குப் பிறகு அடுத்த பரிணாமத்தை அடையும் என எதிர்பார்க்கலாம். சிங்களப் பேரினவாதத்தைத்தான் இலங்கை தேர்ந்தெடுத்திருக்கிறது என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் உலகத்திற்கு உணர்த்துகின்றன. பெரும்பான்மைவாதம், பேரினவாதத்துடன் கூடிய வலதுசாரிகளின் எழுச்சி என்பது இன்று உலக யதார்த்தம். அதோடு ஒன்றித்தான் இலங்கையும் பயணிக்கிறது."

ராமு மணிவண்ணன்
ராமு மணிவண்ணன்
முன்பு மகிந்த ராஜபக்‌சேவின் வலது கை; இப்போது இலங்கை அதிபர் - யார் இந்த கோத்தபய ராஜபக்‌சே?

"அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என வலதுசாரிகள் எழுச்சி பெறுகிற உலக நிலவரத்தின் நீட்சிதான் இலங்கைத் தேர்தல் முடிவுகளும். ஈஸ்டர் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்த தேசப்பாதுகாப்பு, தீவிரவாதம் தொடர்பான பிரசாரம் தேர்தலில் எடுபட்டிருக்கிறது. இது, இந்தியாவோடு ஒத்துப்போகக்கூடியது. ஆனால், இதற்குப் பிறகு எழுகிற பொருளாதாரம் போன்ற வாழ்வியல் சிக்கல்களை எவ்வாறு கையாளப்போகிறார்கள் என்பதைப் பொறுத்துப்பார்க்க வேண்டும். தமிழ்த் தரப்பும் சரி, சிங்களத் தரப்பும் சரி, தங்களுக்கான தேர்வைச் சரியாக மேற்கொண்டுள்ளனர். ஆனால், வழக்கம்போல இழப்புகளைச் சந்திக்கப்போவது தமிழர்களே" என்றார்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

இலங்கையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் நம்மிடம் பேசுகையில், "கோத்தபய வெற்றியால் தமிழர்களின் நிலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது. அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்வோம் என கோத்தபய தெரிவித்தாலும் அவை நம்பும்படியாக இல்லை. காணாமல்போன மக்களின் நிலைபற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்ட போது, 'அதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என கோத்தபய பதிலளித்தார். இது பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கான பதிலும்கூட. பொருளாதாரப் பிரச்னைகளை அணுகுவதில் ராஜபக்‌ஷே தேர்ந்தவர் கிடையாது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லையென்றால், அதிகாரத்தில் இருப்பவர்கள் அடுத்து நாடுவது பெரும்பான்மைவாதம்தான்."

பத்திரிகையாளர் ராதாகிருஷ்னன்
பத்திரிகையாளர் ராதாகிருஷ்னன்

"இந்தியாவில் தற்போது நடப்பதைப் போலத்தான் இலங்கையில் பெரும்பான்மைவாதம் இனிவரும் காலங்களில் மேலோங்கும். இந்தத் தேர்தலில் தமிழர் வாக்குகளைப் பிரித்த விக்னேஷ்வரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான் தமிழர்கள் தங்களின் பிரதிநிதியாக மீண்டும் அங்கீகரித்துள்ளார்கள் என்பதைத்தான் தமிழ்ப் பகுதிகளில் சஜித் முன்னிலை வகித்திருப்பது காட்டுகிறது. 2015 தேர்தலில் இந்தியா தலையிட்டதால்தான் தோல்வி அடைந்ததாக ராஜபக்‌ஷே வெளிப்படையாகக் குற்றம் சாட்டியிருக்கிறார். இது, இந்தியாவுக்கு தலைவலியாகத்தான் இருக்கும். இலங்கைத் தேர்தலில் தோற்றது சஜித் மட்டுமல்ல, இந்தியாவும்தான். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும்" என்றார்.

அரசியல் விமர்சகர் நிலாந்தன் நம்மிடம் பேசுகையில், "இலங்கைத் தீவு இரண்டாகப் பிளவுபட்டுள்ளதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. தேர்தலின்போது முன்வைக்கப்பட்ட பெரும்பான்மைவாதத்தை சிங்கள மக்கள் ஏற்றிருக்கிறார்கள், தமிழ் மக்கள் அதை நிராகரித்திருக்கிறார்கள். தமிழர்கள் பெருவாரியாக ராஜபக்‌ஷேவுக்கு எதிராக வாக்களித்திருப்பது அச்சத்தின் வெளிப்பாடே. சிங்களப் பகுதிகளில் சஜித்துக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. சஜித் தன்னை ஐக்கிய தேசியக் கட்சியின் முகமாகக் காட்டாமல் பிரேமதாசாவின் மகனாகத்தான் முன்னிலைப்படுத்தினார். அது எடுபடவில்லை. தேர்தலுக்கு முன்பு இனவாதம் தூண்டப்பட்டிருந்தது. அதில் ராஜபக்‌ஷேவுக்கு ஈடு இல்லை என்பதுதான் உண்மை."

நிலாந்தன்
நிலாந்தன்
இலங்கை அதிபர் தேர்தல்... அந்தரத்தில் தமிழர்கள்!

"அதைத்தான் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தியிருக்கிறது. இலங்கை மிகப்பெரிய இனவாத அலை ஒன்றை எதிர்நோக்கியிருக்கிறது. இது ஒரு ஆபத்தான போக்கு. சிங்களக் கட்சிகள் சமபலமாக இருந்து ஆரோக்கியமான போட்டி நிலவினால்தான் தமிழர்கள், முஸ்லிம்களின் வாக்குகள் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக விளங்கமுடியும். பெரும்பான்மை சிங்கள வாக்குகள் ஒரு இடத்திலே தஞ்சம் அடையுமானால் தமிழர்களின் வாக்கு இல்லாமலே ஒருவர் அதிபராக முடியும் என்கிற சூழ்நிலை உருவாகும். அதைத்தான் இந்தத் தேர்தலும் காட்டியிருக்கிறது. சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்தாலும் இந்தியா - சீனா உடனான உறவை கோத்தபய சமஅளவில் கையாள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

அடுத்த கட்டுரைக்கு