Published:Updated:

நாடு திரும்பிய கோத்தபய ராஜபக்சே; பிரதமராகும் திட்டம்? - என்ன நடக்கிறது இலங்கையில்?!

கோத்தபய ராஜபக்‌சே

செப்டம்பர் 2-ம் தேதி நள்ளிரவு இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார் கோத்தபய. பிரதமர் நாற்காலியில் அமரும் திட்டத்தையும் அவர் வைத்திருப்பதாகத் தெரிகிறது. இலங்கையில் என்ன நடக்கிறது?

நாடு திரும்பிய கோத்தபய ராஜபக்சே; பிரதமராகும் திட்டம்? - என்ன நடக்கிறது இலங்கையில்?!

செப்டம்பர் 2-ம் தேதி நள்ளிரவு இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார் கோத்தபய. பிரதமர் நாற்காலியில் அமரும் திட்டத்தையும் அவர் வைத்திருப்பதாகத் தெரிகிறது. இலங்கையில் என்ன நடக்கிறது?

Published:Updated:
கோத்தபய ராஜபக்‌சே

நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நேற்றிரவு (செப். 2) மீண்டும் இலங்கை திரும்பிவிட்டார். கூடவே அவர், நாட்டின் பிரதமராகும் திட்டத்தை வைத்திருப்பதாகத் தகவல்கள் கசிய, மீண்டும் பரபரப்பாகியிருக்கிறது இலங்கை அரசியல் களம். என்ன நடக்கிறது இலங்கையில்?

தப்பியோடிய கோத்தபய!

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கோத்தபய அரசுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக முதலில், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மகிந்த ராஜபக்சே. தொடர்ந்து, `கோத்தபயவும், தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் வீரியமடைந்தன. இந்த நிலையில், கடந்த ஜூன் 9-ம் தேதி அன்று, லட்சக்கணக்கான மக்கள் அதிபர் மாளிகையின் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அங்கிருந்து வேறு வழியாகத் தப்பிச் சென்றார் கோத்தபய. தொடர்ந்து, நாட்டைவிட்டுத் தப்பி மாலத்தீவுக்குச் சென்றார். ஜூன் 14-ம் தேதி சிங்கப்பூருக்குச் சென்றவர், அங்கிருந்துகொண்டே தனது அதிபர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

கோத்தபய, நீண்ட நாள்கள் தங்கள் நாட்டில் தங்குவதற்குச் சிங்கப்பூர் அரசு அனுமதிக்கவில்லை. ஆகையால், ஆகஸ்ட் 11-ம் தேதி தாய்லாந்துக்குப் பறந்தார். தாய்லாந்து அரசும் அவருக்கு அடைக்கலம் கொடுக்கத் தயங்கியது. இதனால், மீண்டும் இலங்கைக்கே திரும்பலாமா அல்லது அமெரிக்காவில் தஞ்சமடையலாமா என்ற குழப்பத்திலிருந்தார். அமெரிக்காவிலுள்ள மகன் வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்ற முடிவில், கிரீன் கார்டு பெறும் முயற்சிகளில் இறங்கினார் கோத்தபய. அதற்காகத் தனது வழக்கறிஞர்கள் குழுவை அமெரிக்காவில் களமிறக்கினார். ஆனால், கோத்தபயமீது போர் குற்றச்சாட்டுகள் இருப்பதால், அமெரிக்காவும் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாடு திரும்பிய கோத்தபய!

இதற்கிடையில், கோத்தபயவின் உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதருமான உதயங்க வீரதுங்க, ``ஆகஸ்ட் 24-ம் தேதி, கோத்தபய இலங்கைக்கு வரவிருக்கிறார்’’ என்றார். ஆனால், அவர் சொன்ன தேதியில் கோத்தபய இலங்கைக்கு வரவில்லை. இந்த நிலையில்தான், செப்டம்பர் 2-ம் தேதி நள்ளிரவு இலங்கைக்குத் திரும்பியிருக்கிறார் கோத்தபய. தாய்லாந்திலிருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வரவேற்க சில அரசியல் தலைவர்கள் விமான நிலையத்துக்கு வந்ததாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பிரதமர் திட்டம்?

கடந்த சில தினங்களுக்கு முன்னர், `இலங்கை திரும்பவிருக்கிறார் கோத்தபய' என்ற செய்தி வெளியானபோதே, `இலங்கை திரும்பியதும் பிரதமர் நாற்காலியில் அமர கோத்தபய திட்டமிட்டிருக்கிறார்' என்ற செய்தியும் கசிந்தது. ``முன்னாள் அதிபர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் எம்.பி-யாக நுழைந்து, தனது இலங்கை பொதுசன முன்னணி கட்சியின் எம்.பி-க்கள் ஆதரவோடு பிரதமராகும் திட்டத்தை வைத்திருக்கிறார் கோத்தபய'' என்று சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. `அதிபர் ரணில் விக்ரமசிங்க கட்சிக்கு அவர் ஒருவர் மட்டுமே எம்.பி என்பதால், ராஜபக்சே கட்சியின் எம்.பி-க்கள் சொல்வதை ரணில் கேட்டுத்தான் ஆக வேண்டும்' என்று சொல்லப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க - கோத்தபய
ரணில் விக்ரமசிங்க - கோத்தபய

கோத்தபய நாடு திரும்பியது குறித்து அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களிடம் பேட்டி எடுத்திருக்கிறது பிபிசி ஊடகம். அதில், ``கோத்தபய நாடு திரும்பியதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவர் மீண்டும் ஏதாவது ஒரு பதவியில் அமர்ந்தால், எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் இறங்குவோம். அதிபராக இருந்தபோது அவர் செய்த தவறுகளுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்'' என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கையின் முன்னாள் அதிபர் என்ற அடிப்படையில் கோத்தபயவுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், அவருக்குப் பிரதமர் பதவி வழங்குவது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!