Published:Updated:

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு - ராஜபக்சேக்களின் திட்டம் நிறைவேறுமா?

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

இலங்கையின் அதிகார பீடத்தில் மீண்டும் அமர்ந்துவிட்ட ராஜபக்சேக்களின் அடுத்த கட்ட திட்டம் என்ன?

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார். புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது. நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டால் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது.

இலங்கை நாடாளுமனறம்
இலங்கை நாடாளுமனறம்

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே பதவி விலக, மகிந்த ராஜபக்சே இடைக்கால பிரதமராகப் பொறுப்பேற்றார். தற்போது நிர்ணயிக்கப்பட்ட பதவிக் காலத்தைக் கடந்துவிட்டதனால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக கோத்தபய அறிவித்துவிட்டார்.

எதிர் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தன்னுடைய கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வைக்க வேண்டும் என்பதே ராஜபக்சேக்களின் செயல்திட்டமாக உள்ளது. அதே சமயம் தமிழர் தரப்பும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் பிளவுகளால் உட்கட்சி பூசல்களால் சிதறுண்டு இருக்கிறது.

2015-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வியுற்று மைத்திரிபால சிறிசேன இலங்கை ஜனாதிபதி ஆனார். அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ரணில் விக்ரமசிங்கே பிரதமரானார். ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் இலங்கை அரசியலமைப்பின் 18-வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு ஜனாதிபதிக்கு அளவு கடந்த அதிகாரம் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ராஜபக்சே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் திருத்தப்பட்டு இலங்கை அரசியலமைப்பின் 19-வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஜனாதிபதிக்கு இருந்த அளவு கடந்த அதிகாரம் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்திடம் அது வழங்கப்பட்டது. ராஜபக்சே ஆரம்பம் முதலே இந்தத் திருத்தங்களுக்கு எதிராக இருந்து வந்தார்.

மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே - கோத்தபய ராஜபக்சே

இந்த நிலையில் தற்போது இலங்கையின் அதிகார பீடத்தில் மீண்டும் ராஜபக்சே குடும்பம் அமர்ந்திருக்கிறது. கோத்தபய ராஜபக்சே ஜனாதிபதியாக உள்ளார். சகோதரர் மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக உள்ளார். சிங்களப் பெரும்பான்மை மக்கள் விரும்பாத எதையுமே செய்யப்போவதில்லை என கோத்தபய ராஜபக்சே வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். தமிழர்கள் நீண்ட நாள்களாகக் கோரிவருகிற அதிகாரப் பகிர்வை அளிக்க முடியாது என்றும் அறிவித்துவிட்டார். போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்தார். இலங்கை சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் தமிழில் ஒலிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா தீர்மானத்திலிருந்தும் விலகப்போவதாகவும் இலங்கை அரசு அறிவித்துவிட்டது. போர்க்குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்சேவின் அனைத்து நடவடிக்கைகளும் அதிகாரக் குவிப்பாகவே பார்க்கப்படுகின்றன. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்த 19வது சட்டத்திருத்தம் நீக்கப்பட வேண்டும் என ராஜபக்சேக்கள் கோரிவருகின்றனர். ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அதைப் பெறுவதிலே தற்போது ராஜபக்சேக்கள் குறியாக இருக்கின்றனர்.

டெல்லி வன்முறை: விடைதெரியவேண்டிய 7 கேள்விகள்!

பிளவுபட்டுள்ள எதிர்க்கட்சிகள்:

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் பிரதான அமைப்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்திருந்தது. அதைப்போலவே தமிழர் பகுதிகளில் சஜித் பிரேமதாசாவுக்குப் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தது. ஆனாலும் சஜித் தோல்வியே சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பிரதான தமிழ்க் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றன என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழர் தரப்பு பிளவுகளால் அல்லாமல் ஒருங்கிணைந்த அணியாகச் செயல்பட வேண்டும் என்கிற குரல்களும் இருந்து வருகின்றன.

ரணில் விக்ரமசிங்கே - சஜித் பிரேமதாசா
ரணில் விக்ரமசிங்கே - சஜித் பிரேமதாசா

ஜனாதிபதி தேர்தல் தோல்விக்குப் பிறகு ஐக்கிய தேசிய கட்சியிலும் குழப்பம் ஏற்பட்டது. சஜித் - ரணில் இடையேயான விரிசல் பெரிதானது. சஜித் தலைமையில் புதிய கூட்டணி உருவாகி அவரைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தி தேர்தல் சந்திப்பது என்றும் முடிவாகியுள்ளது. பிரதான சிங்கள எதிர்க்கட்சியும் உட்கட்சிப் பூசல்களால் பிளவுபட்டு இருக்கிறது. இத்தகைய சூழலில்தான் இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஈஸ்டர் தாக்குதல்:

கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. ஜனாதிபதி தேர்தலின் போதும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு விவாதப் பொருளாக்கப்பட்டது. தேசப் பாதுகாப்பில் இலங்கை அரசு தோற்றுவிட்டதாக ராஜபக்சேக்கள் பிரசாரம் செய்தனர். தற்போது ஜனாதிபதி தேர்தலும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த அதே வாரத்தில் வருகிறது. வருகிற ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தாக்குதலின் முதலாம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சேக்கள் உருவாக்கிய யுத்தவெற்றிவாத அலையை இந்தத் தேர்தலுக்கும் நீட்டிக்கவே முயல்கின்றனர் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

ராஜபக்சேக்கள் வென்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியுமா.. எதிர்க்கட்சிகள் சரிவிலிருந்து மீண்டு ராஜபக்சேக்களின் கனவுக்கு முட்டுக்கட்டை போட முடியுமா.. எதிர்க்கட்சிகளால் தனித்தே பெரும்பான்மை பெற முடியுமா.. என்கிற கேள்விகளுக்கு விடை காண்பதாகவே வரவிருக்கின்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் அமையும்.

அடுத்த கட்டுரைக்கு