Published:Updated:

கிரீஸ் தேர்தல் வெற்றி... பிரதமர் பதவி முள் கிரீடமா... மலர் கிரீடமா?

கிரியகோஸ் மிட்சொடாகிஸ்,  அலெக்சிஸ் சிப்ரஸ்
பிரீமியம் ஸ்டோரி
கிரியகோஸ் மிட்சொடாகிஸ், அலெக்சிஸ் சிப்ரஸ்

தவிப்பில் கிரியகோஸ்!

கிரீஸ் தேர்தல் வெற்றி... பிரதமர் பதவி முள் கிரீடமா... மலர் கிரீடமா?

தவிப்பில் கிரியகோஸ்!

Published:Updated:
கிரியகோஸ் மிட்சொடாகிஸ்,  அலெக்சிஸ் சிப்ரஸ்
பிரீமியம் ஸ்டோரி
கிரியகோஸ் மிட்சொடாகிஸ், அலெக்சிஸ் சிப்ரஸ்

கிரீஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில், இடதுசாரி கட்சியைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது, வலதுசாரி கட்சி. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுமாறிக்கொண்டிருக்கும் வலதுசாரிகளுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.

சிரிசா கட்சியைச் சேர்ந்த அலெக்சிஸ் சிப்ரஸ், கிரீஸ் நாட்டின் பிரதமராகப் பதவியில் இருந்தபோது, பல ஜனரஞ்சகத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஆனாலும் அவரின் மோசமான நடவடிக்கைகளால் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது, இடதுசாரி சிரிசா கட்சி. மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் 158 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கிறது, வலது சாரி புதிய ஜனநாயகக் கட்சி.

சிரிசா கட்சி 86 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மீதி இடங்களை மற்றக் கட்சிகள் கைப்பற்றி யிருக்கின்றன. கிரேக்க சொல்யூஷன்ஸ் மற்றும் மீரா 25 (MeRA 25) ஆகிய கட்சிகள் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் நுழைகின்றன. பிரபலமான கோல்டன் டான் கட்சி, ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

கிரீஸ் அரசியல்வாதிகளால் ‘குழந்தை’ என வர்ணிக்கப்படும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் கிரியகோஸ் மிட்சொடாகிஸ், நாட்டின் பிரதமராகியிருக்கிறார். இதனால், கிரீஸ் நாட்டில் மீண்டும் பரம்பரை ஆட்சி தலைதூக்கியிருக்கிறது. கடந்த 2015-ம் ஆண்டில், ‘நாட்டைப் பொருளாதாரக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. நாட்டின் பாரம்பர்யம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றைத் தாரை வார்த்துவிட்டது’ என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு ஆட்சியிலிருந்து தூக்கிவீசப்பட்ட புதிய ஜனநாயகக் கட்சி, நான்கே ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பதுதான் ஆச்சர்யம். அதற்கு முக்கிய காரணம் முந்தைய பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸின் ‘யு டர்ன்’ நடவடிக்கைகள்தாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 2012-ம் ஆண்டில் ஆட்சியிலிருந்த புதிய ஜனநாயகக் கட்சி, நாட்டைப் பொருளாதாரச் சிக்கலிலிருந்து மீட்க, பன்னாட்டு நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, சிக்கன நடவடிக்கை களைச் செயல்படுத்தியது. 28 ஆண்டுகளாக தனித்து இயங்கிவந்த அண்டை நாட்டுக்கு ‘வடக்கு மாசிடோனியா’ என்று பெயர் சூட்டவும் ஒப்புக்கொண்டது. அதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது. கலவரத்தை முன்னின்று நடத்தியவர், சிப்ரஸ். தொடர்ந்து 2015-ம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில், புதிய ஜனநாயகக் கட்சியைத் தோற்கடித்தது, சிரிசா கட்சி.

கிரீஸ் தேர்தல் வெற்றி... பிரதமர் பதவி முள் கிரீடமா... மலர் கிரீடமா?

பிரதமர் பதவியேற்ற சிப்ரஸ், ஜனரஞ்சகமான திட்டங்கள்; நிதிச் சீரமைப்பு எனத் தடபுடலாக ஆட்சியைத் தொடங்கினார். ஆனால், சில மாதங்களிலேயே நிதி நெருக்கடியால் நிலைகுலைந்தது, கிரீஸ். அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, மற்ற ஐரோப்பிய நாடுகளைப் பாதிக்கும் எனக் கருதப்பட்டதால், கிரீஸை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றும் சிந்தனை ஓங்கியது. அதைத் தடுப்பதற்காக, பன்னாட்டு நிதியத்திடம் சரணடைந்தார், சிப்ரஸ். சுமார் 92 பில்லியன் கடனுடன் சிக்கன நடவடிக்கைகளையும் இலவச இணைப்பாக அளித்தது, பன்னாட்டு நிதியம்.

கடும் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதால், மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். வேலையில்லாத் திண்டாட்டம் தலைதூக்கியது. அதுமட்டுமல்லாமல், ‘மாசிடோனியா என்ற பெயரை அண்டை நாட்டுக்கு எப்போதும் விட்டுக்கொடுக்கமாட்டோம்’ என்று ஆர்ப்பரித்து வந்த சிப்ரஸ், தானே முன்வந்து அப்பெயரை அந்நாட்டுக்குத் தாரை வார்த்தார். கூட்டணிக் கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்ததால், ஆட்டம் கண்டது சிப்ரஸின் ஆட்சி.

சிப்ரஸின் ‘யு டர்ன்’ நடவடிக்கைகளால் மிகுந்த கோபத்திலிருந்த கிரீஸ் மக்கள், தேர்தலில் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். சிப்ரஸைப் போலவே மக்களும் ‘யு டர்ன்’ போட்டதால்தான் படுதோல்வி அடைந்திருக்கிறார், சிப்ரஸ்.

கடந்த 1990-ம் ஆண்டில் கான்ஸ்டான்டினோஸ் மிட்சொடாகிஸின் ஆட்சியைக் கவிழ்க்க மாசிடோனியா பெயர்ப் பிரச்னைதான் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது, அதே ஆயுதத்தைப் பயன்படுத்தித் தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கியிருக்கிறார், கான்ஸ்டான்டினோஸின் மகன், கிரியகோஸ். 1990-களில், கிரியகோஸின் குடும்பம்தான் கிரீஸ் அரசியலில் கோலோச்சி இருந்தது. கிரியகோஸின் தந்தை பிரதமர். கிரியகோஸ், நிர்வாகச் சீர்திருத்த அமைச்சர். அவரின் சகோதரி டோரா பாகோயான்னிஸ், ஏதென்ஸின் முதல் பெண் மேயராகப் பதவி ஏற்றுப் பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார். கடந்த 2015-ம் ஆண்டில் தொடர்ந்து நடந்த இரு பொதுத்தேர்தல்களிலும் படுதோல்வி அடைந்த நிலையில் கட்சிக்குத் தலைமையேற்றார், கிரியகோஸ். இப்போது, பிரதமராகி இருக்கிறார்.

தற்போது, நிதிச்சிக்கலில் சீரழிந்து கிடக்கிறது, கிரீஸ். நாட்டின் மொத்தக்கடன் 335 பில்லியன் யூரோ. இது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட 180 சதவிகிதம் அதிகம். ஏற்கெனவே 1833, 1898, 1912 ஆகிய ஆண்டுகளில் திவாலாகும் நிலைக்கு வந்தது, கிரீஸ். தற்போதும் அதே நிலையில்தான் இருக்கிறது. இதற்குக் காரணமாக இருப்பவை, ஐரோப்பா மற்றும் பன்னாட்டு நிதியம் ஆகியவைதாம். தொடர்ந்து கிரீஸைக் கண்காணித்துக் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கிறது, சர்வதேச நாணய நிதியம்.

இந்நிலையில் பிரதமர் பதவி கிரியகோஸுக்கு முள் கிரீடம்தான். அதை மலர் கிரீடமாக மாற்றுவது அவர் கையில்தான் இருக்கிறது.