Published:Updated:

`இளவரசர்தான்.. பட்டம் பயன்படுத்தலாம்.. ஆனால்?!’ - ஹாரியின் பதவியை பறித்த இங்கிலாந்து ராணி

ஹாரி - மேகன்
ஹாரி - மேகன்

இங்கிலாந்து குடும்பத்தில் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் அரசு தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என ஹாரிக்கு, ராணி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் அரசக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக சில நாள்களுக்கு முன்பு அறிவித்தனர். தாங்கள் வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் நேரத்தைச் செலவிட நினைப்பதாகவும் சுதந்திரமாக வாழ நினைப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இவர்களின் திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஹாரி - மேகன்
ஹாரி - மேகன்

இங்கிலாந்து ராணி எலிசபெத்திடம் கூட தெரிவிக்காமல் இவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. அரச குடும்பத்தை விட்டு வெளியேற ஹாரியின் அண்ணன் வில்லியம்ஸ், மேகனின் சொந்த ஊர்தான் காரணம் எனப் பல தகவல்கள் ஊடகங்களில் கசிந்தவண்ணம் இருந்தன. இதற்கிடையில் கடந்த வாரம் இளவரசர் ஹாரியை நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் ராணி எலிசபெத். அதன் முடிவில் ஹாரியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் அரசக் குடும்பத்தைவிட்டு வெளியேற ஒப்புதல் தருவதாகக் கூறினார்.

`அரச குடும்பத்திலிருந்து வெளியேறுகிறோம்!’ - இங்கிலாந்து ராணிக்கு அதிர்ச்சி கொடுத்த இளவரசர்

இதைத்தொடர்ந்து ஹாரி -மேகன் தம்பதி தங்களின் மீதமுள்ள வாழ்நாளை கனடாவில் கழிக்கவுள்ளதாகத் தெரிவித்தனர். மேகன் அமெரிக்காவில் நடிகையாக இருந்ததிலிருந்தே அவருக்கும் கனடாவுக்கும் இடையே நெருங்கிய பழக்கம் இருந்ததால் இருவரும் அங்கு செல்ல முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தத் தம்பதி தங்களின் அரசக் குடும்பத்துப் பொறுப்பைக் கைவிட்டு ஓய்வு பெறுவதாக ராணி எலிசபெத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து அரசக் குடும்பம்
இங்கிலாந்து அரசக் குடும்பம்

அதில், “ஹாரி, மேகன் மற்றும் ஆர்ச்சி ஆகிய மூவரும் எப்போதும் இங்கிலாந்து குடும்பத்தின் விருப்பமானவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் அனுபவித்த பல சவால்களை நான் உணர்கிறேன். மேலும் சுதந்திரமான வாழ்க்கைக்கான அவர்களின் விருப்பத்தை ஆதரிக்கிறேன். குறிப்பாக மேகனை நான் மிகவும் பாராட்டுகிறேன். இங்கு வந்த சில நாள்களிலேயே அரசக் குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார்.

ஹாரி தொடர்ந்து இளவரசராக இருக்கலாம். வட அமெரிக்காவில் அவர்கள் தொடங்கவுள்ள புது வாழ்க்கையில் டியூக், டச்சஸ் ( Duke and Duchess) பட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் வருங்காலத்தில் அரச நிகழ்வுகள், அரசக் குடும்பம் சார்ந்த சுற்றுப்பயணங்களில் கலந்துகொள்ள முடியாது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இது அரசக் குடும்பத்திலிருந்து பதவி விலகுவது என்ற பொருள்படும் எனக் கூறப்படுகிறது. ஹாரி - மேகன் தம்பதிக்குச் சிறந்த முடிவை ராணி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத்
ராணி எலிசபெத்

இது பற்றிப் பேசியுள்ள அரசக் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் ஜானி டைமோண்ட், “ இதைவிடத் தூய்மையான இடைவெளிபற்றி யோசிப்பது மிகவும் கடினம். ராணி சிறந்த முடிவெடுத்துள்ளார். ஹாரியும் மேகனும் இன்னும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் இனி அரசர், அரசி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு