Published:Updated:

`நீங்கள் பேசுவதைக் கேட்க எனக்கு விருப்பமில்லை?’ - ஜார்ஜ் ஃப்ளாய்டின் சகோதரருடன் பேசிய ட்ரம்ப்

அமெரிக்கா போராட்டம்
அமெரிக்கா போராட்டம் ( AP )

அமெரிக்காவில் போலீஸ் பிடியில் இறந்த ஜார்ஜின் சகோதரரிடம் அதிபர் ட்ரம்ப் போனில் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் இருக்கும் மின்னெபொலிஸ் நகரில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற 42 வயது கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் போலீஸ் பிடியில் இருக்கும்போது உயிரிழந்தார். ஜார்ஜை கீழே தள்ளி அவரின் கழுத்தில் ஒரு போலீஸார் தன் கால் முட்டியை வைத்து பலமாக அழுத்தியுள்ளார், இதனால் அதே இடத்திலேயே ஜார்ஜ் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் பட்டப்பகலில் மக்கள் கண் முன்பே நடந்த இந்தச் சம்பவம், சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமெரிக்கா போராட்டம்
அமெரிக்கா போராட்டம்
AP

ஜார்ஜின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என மின்னெபொலிஸில் தொடங்கிய போராட்டம் பிறகு மினசோட்டா மாகாணம் முழுவதும் பரவியது அங்கிருந்து அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கும் பரவி தற்போது மாபெரும் போராட்டமாக வெடித்துள்ளது. அமைதியாக நடந்த போராட்டத்தில் திடீரென கலவரம் வெடித்ததால் போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்திக் கூட்டத்தைக் கலைத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்னர் ஜார்ஜ் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜார்ஜின் குடும்பத்தினரை போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். இது பற்றி ட்ரம்ப்,`அவர்களிடத்தில் நான் என் துக்கத்தை வெளிப்படுத்தினேன். இது ஒரு பயங்கரமான விஷயம் இதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை என்றே தோன்றுகிறது’ எனப் பேசியிருந்தார்.

அமெரிக்கப் போராட்டம்
அமெரிக்கப் போராட்டம்

ஆனால், ட்ரம்ப் உடனான உரையாடல் சரியாக நடக்கவில்லை என ஜார்ஜின் சகோதரர் பிலோனிஸ் ஃபிகாய்டின் தெரிவித்துள்ளார். ஏனெனில் ட்ரம்ப் தனது கருத்துகளை மட்டுமே கூறினார் என்றும் ஜார்ஜின் குடும்பத்தினர் பேசிய ஒரு வார்த்தையைக்கூட கேட்க அவர் தயாராக இல்லை, அதற்கு வாய்ப்பும் வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பற்றி MSNBC ஊடகத்தினரிடம் பேசியுள்ள பிலோனிஸ், `அதிபர், நான் பேசுவதற்கு ஒரு வாய்ப்புகூடக் கொடுக்கவில்லை. அவருடனான உரையாடல் மிகவும் கடினமாக இருந்தது.

`நோ ஜஸ்டிஸ்.. நோ பீஸ்..’ - காவலரால் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர்; பற்றியெரியும் அமெரிக்கா

இருந்தும் நான் அவரிடம் பேச முயன்றேன், ஆனால் அவர், `நீங்கள் பேசுவதைக் கேட்க எனக்கு விருப்பமில்லை’ என்பது போலவே நடந்துகொண்டு என் பேச்சை நிறுத்த மட்டுமே முயற்சி செய்தார். இந்த நவீன யுகத்தில் பட்டப்பகலில் என் சகோதரனைக் கொலை செய்துள்ளனர். இதை என்னால் நம்பவே முடியவில்லை, எங்களுக்கு நீதி வேண்டும் என நான் அதிபரிடம் கூறினேன். அவ்வளவுதான் என்னால் பேச முடிந்தது’ எனக் கூறியுள்ளார் ஜார்ஜின் சகோதரர்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

தொடர்ந்து பேசிய அவர், ``இதற்கு முன் அவரிடம் கெஞ்சியதில்லை. ஆனால், முதன்முறையாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோபிடனிடம் கெஞ்சினேன். தயவு செய்து என் சகோதரருக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன்'' என பிலோனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு