Published:Updated:

சீனா: 'ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத பெரு மழை! வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள்!'

சீனா வெள்ளம்
News
சீனா வெள்ளம்

சீனாவின் அதிதீவிர மழைப்பொழிவால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. அப்பகுதியிலிருந்து சுமார் 2 லட்சத்துக்கும் மேலான மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

"ஆயிரம் ஆண்டுகளில் பெய்திடாத பெருமழையை சீனா எதிர்கொண்டு வருகிறது. கார் ஓடும் தார் சாலைகளெல்லாம், காட்டாறு போல வெள்ளநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. புது ஆற்று வெள்ளத்தில் புரண்டுவரும் குப்பைகள்போல, அதில் வாகனங்களெல்லாம் அடித்துச்செல்லப்படுகின்றன. மார்பளவு வெள்ளத்தில் மெட்ரோ ரயில் சுரங்கத்தில், மாட்டித் தவித்துக்கொண்டிருக்கும், சீன மக்களை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. பலி எண்ணிக்கை பதினாறைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. கொட்டித்தீர்க்கும் கனமழையில் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, தனித்தீவுகளாக மாறிப்போயுள்ளன சீன மாகாணங்கள்! இன்னும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என அதிரவைக்கிறது சீன வானிலை மையம்!"

ஹெனான் மாகாணம்
ஹெனான் மாகாணம்

என்ன நடக்கிறது சீனாவில்..?

சீனாவில் கடந்த ஒரு வாரமாக, வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. மழைக்கால சீனாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது என்பது வாடிக்கையான ஒன்றுதான்! ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதென்றாலும், இப்போது பெய்யும் மழையானது ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத கனமழை என்று கூறுகிறார்கள் சீனாவின் வானிலை ஆய்வாளர்கள். குறிப்பாக, இந்த வெள்ளப்பெருக்கில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது ஹெனான் மாகாணமும் அதன் தலைநகர் ஜென்சோ பகுதியும்தான். இந்தப் பகுதியின் சராரசரி ஆண்டு மழைப்பொழிவே 640.8 மி.மீ அளவு. ஆனால் நேற்று ஒருநாளில் மட்டும் 457.5 மி.மீ. அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஜென்சோ பகுதியில் நேற்று மாலை 4 முதல் 5 மணி வரையிலான ஒரு மணிநேரத்தில் சுமார் 201.9 மி.மீ. அளவில் மழை பெய்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்நிலையில், ஜென்சோ நகரின் சுரங்கத்தில் ஓடிக்கொண்டிருந்த மெட்ரோ ரயிலை பெருவெள்ளம் சூழ்ந்தது. இதனை சற்றும் எதிர்பாராத பயணிகள் ரயிலுக்குள்ளாகவே மார்பளவு நீரில் தத்தளித்தினர். இதனை அறிந்த மீட்பு பணியினர் மெட்ரோ ரயிலின் கூரையை உடைத்து நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டதாக, சீனாவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுரங்கத்தில் சிக்கி இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளர். பலரின் கதி என்னவென்று தெரியாத சூழ்நிலை அங்கு நிலவுகிறது. இதனால் சீனாவின் பெரும்பாலான மாகாணங்களில் ரயில் மற்றும் விமானப்போக்குவரத்து முற்றிலுமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

சுரங்கம்
சுரங்கம்

ஹைஹே மற்றும் யல்லோ உள்ளிட்ட ஆறுகளின் நீர்மட்டம் பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் ஆறுகள் ஓடும் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர் சீன காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அதிதீவிர மழைப்பொழிவால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. அப்பகுதியிலிருந்து சுமார் 2 லட்சத்துக்கும் மேலான மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் மொத்தம் 16 பேர் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்றும் எதிர்பாராத இந்த காலநிலை மாற்றத்தால், இத்தகைய மழைப்பொழிவு நிகழ்ந்துள்ளதாக சீன வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளத்தில் சீன மக்கள்
வெள்ளத்தில் சீன மக்கள்

வரலாறு காணாத இந்த மழைப்பொழிவு, சீனாவின் மிகப்பெரிய பேரிடர்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் மூன்று நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதால், பாதிப்பு இன்னும் அதிகமாகக் கூடும் என கவலையில் உள்ளது சீன அரசு.