Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `அகதிகள் முகாமை நடுங்கவைத்த வெற்றிலை' | பகுதி- 9

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

பையோடு நின்றுகொண்டிருந்தவர், அகதிகள் நலனைவிட அப்போதைக்குத் தனது நலனை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று வெற்றிலையோடு சேர்ந்து தானும் வியர்த்திருந்தார்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | `அகதிகள் முகாமை நடுங்கவைத்த வெற்றிலை' | பகுதி- 9

பையோடு நின்றுகொண்டிருந்தவர், அகதிகள் நலனைவிட அப்போதைக்குத் தனது நலனை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று வெற்றிலையோடு சேர்ந்து தானும் வியர்த்திருந்தார்.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

சாப்பாட்டு மண்டபத்தில் மாத்திரமல்லாமல், எங்கு சண்டை நடந்தாலும் சில நிமிட நேரத்துக்கு, முகாமில் நடமாட்டங்கள் தடைப்ப்படும். கம்பவுண்டுகளுக்கு இடையிலான இரும்புக் கதவுகள் இழுத்து மூடப்படும். கட்டுப்பாட்டு அறையிலிருந்து உத்தியோகத்தர்களுக்கான அறிவிப்புகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டபடியிருக்கும். குழப்பவாதிகளைத் தனிமைப்படுத்தி இழுத்துச் சென்ற பிறகு, நிலைமை வழமைக்குத் திரும்பிவிடும். கலவரத்தில் காயமானவர்களுக்கு துரிதமாக மருந்துபோடுவர். நிலமை மோசமென்றால், அம்புலன்ஸில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பிவிடுவர்.

தஞ்சத்துக்கு ஓடிவந்த தேசத்தில், ஊர்க்குணம், போர்க்குணம் என்று எதையாவது காட்டுவதற்கு அவசரப்பட்டு, கடைசியில் அது விசாவுக்கு வில்லங்கமாகிவிடக் கூடாது என்பதில் அநேக அகதிகள் நிலமைகளை நிதானமாகத்தான் கையாண்டார்கள். அந்தப் புரிதல் அர்த்தமானதும்கூட. ஆனால், இயல்பிலேயே தங்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு, முகாம் வாழ்க்கை உள்ளும் புறமும் கையாள முடியாத கரைச்சலாகவே இருந்தது.

அன்றைய சம்பவத்துக்குப் பிறகு, ரஹீமுக்கு சாப்பாட்டு மண்டபப் பக்கம் போவதற்கு இரண்டு வாரம் தடை விதித்தது குடிவரவு அமைச்சு அலுவலகம். முகாமில் அவன் செய்த குற்றச் செயல்கள் என்று பெயரிடப்பட்ட தனிக்கோப்பில், அன்றைய சம்பவமும் இணைந்துகொண்டது.

குயிலனின் மகனுக்கு எட்டுச்செலவு செய்வதற்காக முகாமின் விசாலமான விருந்தினர் மண்டபத்தைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குடிவரவு அமைச்சு அலுவலகத்தின் சிறப்பு அங்கீகாரத்துக்கு அமைய, முகாம் நிர்வாகம் இந்த அனுமதியை வழங்கியிருந்தது.

சைவ முறைப்படி, எட்டுச்செலவு சடங்கைச் செய்வதற்கு குடிவரவு அமைச்சின் அலுவலகம் ஐயர் ஒருவரை வரவழைப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தது.

சடங்கு செய்வதற்கு வந்த ஐயரின் குத்துவிளக்கு, எண்ணெய், கற்பூரம், தீப்பெட்டி முதற்கொண்டு, பூணூல் வரைக்கும் அனைத்தையும் முகாம் வாசலில் உத்தியோகத்தர்கள் சோதனையிட்டனர்.

வெற்றிலை
வெற்றிலை

முகாமிலுள்ள வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்களது சமய அனுட்டான நிகழ்வுகளுக்கு, மதகுருமார்களை அழைக்க வேண்டும் என்ற பெயரில், அவர்களின் ஊடாக சாராய போத்தல்களை உள்ளே கொண்டுவந்தது அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். முகாம் அகதிகளுக்கென்று வெளியிலிருந்து கொண்டுவரப்பட்ட பெரியதொரு `கட்லட்’ பாத்திரத்துக்குள், அண்மையில் மூன்று `சிவாஸ் றீகல்’ போத்தல்கள் மீட்கப்பட்டு, குறிப்பிட்ட மதகுருவின் உதவியாளர் முகாம் பக்கம் வருவதற்கு நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்டிருந்தார்.

முகாமலிருந்த பர்மா பெண்ணொருத்தி தனது தலைமுடி வேகமாக உதிர்வதாக முறையிட்டு, வெளியிலிருந்து சிறப்பு ரக, தலை கழுவும் சம்பூவை தனது உறவினர் வாங்கித்தருவதாகக் கூறியிருந்தாள். குடிவரவு அமைச்சின் அலுவலகமும் அதற்கு சுகாதாரரீதியான கோரிக்கை என்று அனுமதி வழங்கியிருந்தது. ஒரு லீட்டர் சம்பூ போத்தலுடன் வந்தவரிடம், போத்தலை வாங்கி சோதனை போட்டதில், புத்தம் புதிய சம்பூவை முழுதாக ஊற்றிவிட்டு, நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, அதற்குள் `பிளாக் லேபல்’ சாராயத்தை ஊற்றிக்கொண்டுவந்தது பிடிபட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு இறாத்தல் பானுக்குள் சிறிய `ஜிம் பீம்’ போத்தலை ஒளித்து முகாமுக்குள் கொண்டுவர முயன்ற, ஆப்கன் மூதாட்டி ஒருவரிடம், `இது என்ன?’ என்று கேட்டபோது, `உங்களையெல்லாம், அல்லாஹ் மன்னிக்கவே மாட்டார்’ என்று அந்த மூதாட்டி சபித்துவிட்டுப்போனார். சோதனை செய்த அதிகாரிகள் திகைத்துப்போனார்கள்.

முகாமுக்குள் சாராய போத்தல்களைக் கொண்டுவருவதற்கு புதிய புதிய வழிகளைக் கண்டுபிடிப்பது உள்ளேயிருந்த நீண்டகால அகதிகளுக்கும்

அவர்களை பார்க்க வருகிற வெளியாட்கள் சிலருக்கும் மிகப்பெரிய சவாலாகத் தொடர்ந்தது. அதை எப்படியாவது வாசலில்வைத்துப் பிடித்துவிட வேண்டும் என்பது எங்களது முழு முயற்சியாக இருந்துகொண்டேயிருந்தது.

மெல்போர்னிலிருந்த குறைந்த பாதுகாப்புடைய முகாம் இது என்ற காரணத்தால், இங்கு வாசலில் ஒவ்வொருவருக்கும் அலாரம் கூவும், தானியங்கிச் சோதனைக் கருவிகள் இல்லை. சந்தேகப்பட்டால், ஆட்களை மறித்து, உள்ளே கொண்டு போகும் பொருள்களைக் காண்பிக்கக் கோரும் அதிகாரத்தை மாத்திரம்தான் குடிவரவு அமைச்சு அலுவலம் வழங்கியிருந்தது. இந்த முகாமில், குடும்பங்களும் சிறுவர்களும் தடுத்துவைக்கப்பட்டிருந்த காரணத்தால், இங்குள்ள நிர்வாகத்தில் குடிவரவு அமைச்சின் மென்மையான பார்வையே எப்போதும் படர்ந்திருந்தது.

சிலவேளைகளில், சில அப்பாவி விருந்தினர்கள் மிகக் கொடூரமான வகையில், வாசலில் விரித்து வைத்திருக்கும் - சந்தேகவலையில் விழுந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களைக் குற்றமற்றவர்கள் என்று நிரூபிப்பதில் பெரும்பாடு பட்டிருக்கிறார்கள்.

முல்லைத்தீவின் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் நான்கு வருடங்களாக முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். வயது ஐம்பதுக்கு மேலிருக்கும்.

ஐந்து பெண் குழந்தைகளுக்குத் தகப்பன். கடற்றொழில்தான் தவமென்று வாழ்ந்து வளர்ந்தவர். வன்னிக்குள் தவழ்ந்துவந்த போரினால், அங்கிருந்தே கடல்வழியாக நேரடியாக – தனியாக - ஆஸ்திரேலியாவுக்கு வந்து சேர்ந்தவர். குடிவரவு அமைச்சின் அதிகாரிகள் உட்பட ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறையினர் அத்தனை பேரின் முன்னிலையிலும் கற்பூரத்தில் அடித்து சத்தியம் பண்ணாததுதான் குறை. ஆனால், இவர்தான் முல்லைத்தீவிலிருந்து ஐம்பத்தாறு அகதிகளையும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்தார் என்று ஆஸ்திரேலியத் தரப்பினர் உறுதியாக நம்பினார்கள். எத்தனையோ சுற்று சந்திப்புகள், விசாரணைகள், சத்தியக் கடதாசிகள் என்று மனுசன் களைத்துப்போய்விட்டார். ஆனால், இவர்மீதான சந்தேகம் தீரவே இல்லை. எப்படியாவது ஒருநாள், இந்த முகாமின் பிரதான வாயில் கதவு தனக்காகத் திறக்கும் என்று அவர் நம்பிக்கையோடிருக்கிறார்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இவர், தனக்கு வெற்றிலை சாப்பிடும் பழக்கமிருப்பதாக முகாமுக்கு வருகிற தமிழ் விருந்தினர்கள் எல்லோரிடமும் தவறாமல் சொல்லிவிடுவார். கேட்டுக்கொண்டு போகிறவர்கள் எல்லோரும், ஞாபகம் வைத்துக்கொண்டு வருவதில்லை என்றாலும், அவ்வப்போது அதீத அக்கறையுடைவர்கள், நினைவில் வைத்துக் கொடுப்பதுண்டு.

ஒருநாள், மெல்போர்னிலுள்ள தமிழ் அகதி நல அமைப்புக்காரர் ஒருவர் பத்துப் பதினைத்து வெற்றிலை, அதற்குள் பாக்கு, சுண்ணாம்பு அனைத்தையும் பொதிசெய்து கொண்டுவந்திருந்தார். வாசலில் பணியிலிருந்த வயோதிப உத்தியோகத்தர், சந்தேகத்தின் பேரில் இவரிடம் பையைத் திறக்கச் சொன்னார்.

வெற்றிலைப்பொதியை விரித்துப் பார்த்தவர் இரண்டு அடி பின்னாலே பாய்ந்தார்.

உடனடியாக குடிவரவு அமைச்சு அலுவலகத்துக்கு அழைத்தார். ``அகதிகள் நல அமைப்புக்காரன் ஒருவன் முகாமுக்குள் கள்ளமாக கஞ்சா கொடுப்பதற்கு வந்திருக்கிறான். வாசலில்வைத்தே பிடித்துவிட்டேன்” என்றார்.

குடிவரவு அமைச்சு அலுவலகத்திலிருந்து குதிகால் உயர்ந்த காலணிகள் அணிந்த இரண்டு அம்மணிகள், டொக்கு டொக்கென்று தார் வீதியில் ஒலியெழுப்பியபடி ஓடிவந்தார்கள். வெற்றிலையை ஆங்கிலத்துக்குள் நுழைக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்த அகதிகள் நல உறுப்பினருக்கு `ஹலோ’ சொன்னார்கள். பிறகு, தாங்களும் பையைத் திறந்து பார்த்தார்கள்.

இந்தநேரத்தில்,

உள்ளே பணியிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. கஞ்சா கடத்தல்காரனை வாசலில் பிடித்து வைத்திருப்பதாகத் தொலைபேசியில் தகவல் சொல்லப்பட்டது.

வெளியில் வந்து பார்த்தபோது, கிட்டத்தட்ட பொலீஸை அழைப்பதற்குத் தயாராகிக்கொண்டிருந்த இரண்டு சோடி அதிகாரிகளிடமும் ``கஞ்சா எங்கே?” என்றேன். பையோடு நின்றுகொண்டிருந்தவர், அகதிகள் நலனைவிட அப்போதைக்கு தனது நலனை யாராவது காப்பாற்ற மாட்டார்களா என்று வெற்றிலையோடு சேர்ந்து தானும் வியர்த்திருந்தார். அவரை ஓர் இடத்தில் இருத்திவிட்டு, வெற்றிலைப் பையையும் அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தேன்.

கணினியில் எல்லோருக்கும் வெற்றிலையின் குலம் - கோத்திரம் குறித்த சிறு குறிப்பினை விளக்கமாகச் சொன்னேன்.

மாபெரும் கஞ்சா கடத்தலை பிடித்துவிட்டதில், இளைத்துப்போயிருந்த அதிகாரிகளில் ஒருவர் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்து, கணினிக்கு மிக அருகில் வந்து, பசிய இலையில் தெரிந்த நரம்புகளையும் ஊன்றிப் பார்த்தார்.

அன்றைக்கும் ஐயரின் பைகளைக் கவனமாக சோதனை செய்த அதிகாரிகள், அவரது தட்டுகள், பூசைக்குரிய தீபம், மணி போன்றவறறை மிக கவனமாக தாங்களே உள்ளே கொண்டுவந்து கொடுத்தார்கள்.

மெல்போர்னின் பிரபலமான சுரேஸ் குருக்கள், குயிலனையும் மனைவியையும் தனக்கு அருகில் அழைத்து அமரச் சொன்னார். குழந்தையின் சிறிய உருவப்படம், கதிரையொன்றில் வைத்து, அதற்கு முன்னால் இளநீர் வெட்டிப் படைக்கப்பட்டிருந்தது. அருகில், பால் கொடுக்கும் பிளாஸ்டிக் புட்டி நிறைத்து வைக்கப்பட்டிருந்தது. அருகில் ஒரு தீபம் எரிந்தது.

காலை முதல் செய்த சாப்பாடுகள் அனைத்தும், விருந்தினர் மண்டபத்துக்குள் நீண்ட மேசையில் பெரிய தட்டுகளில் வரிசையாக வைக்கப்பட்டன.

விருந்தினர் மண்டத்துக்குள் தமிழ் அகதிகள்தான் பெருமளவில் ஐயருக்கு முன்னால் தரையில் அமர்ந்திருந்தார்கள். மற்ற நாட்டவர்கள், நடைபெறுகிற சடங்கு முறைகளைப் பார்க்கும் ஆர்வத்தில் மண்டபத்தின் உள் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். நிறைந்த அமைதி நிலவியது. குயிலனின் குழந்தை இறந்த கவலை அங்கிருந்தவர்கள் அத்தனை பேர் முகங்களில் சுயதுயரமாகப் படர்ந்திருந்தது. ஓர் அகதி இதைவிட எதைத்தான் பெரிதாக இழந்துவிடப்போகிறான் என்ற வலி எல்லோருக்குள்ளேயும் குடைந்துகொண்டிருந்தது. தரையில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கு எல்லாமே புதினமாயிருந்தன. வழமைக்கு மாறான – புதிய - சாப்பாடுகளின் மீது குழந்தைகளின் கண்கள் வசீகரமாக மொய்த்திருந்தன.

ஐயருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற அவதியோடு, தனது பாராமான உடம்பைத் தூக்கிக்கொண்டு அகுனா அங்கும் இங்கும் பதகளிப்பட்டவாறிருந்தான். மண்டபத்துக்குள் நின்றுகொண்டிருந்த உத்தியோகத்தர்கள் அவனை ஓர் இடத்தில் அமரும்படி அறிவுறுத்தினார்கள்.

தங்களுக்கு அருகே வந்து அமரும்படி நீதனையும் அழைத்தான் குயிலன். குழந்தையின் படத்துக்கு முன்னால் புகைந்தபடியிருந்த சந்தனக்குச்சியின் வாசம், எல்லோரிலும் படர்ந்தது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
படத்துக்கு முன்னால் நெளிந்து மேலெழுந்துகொண்டிருந்த சந்தனக்குச்சியின் புகையின் பின்னால் தெரிந்த முகம், நீதனுக்குள் நெடிய அலைகளாக ஆக்ரோஷித்தது.

சூழ்ந்திருக்கும் பெருந்துயரின் நடுவில், தானும் ஒருவனாகிவிட்டதுபோல உணர்ந்தான். அனீஸாவினதும் குழந்தையினதும் ஞாபகம் நெஞ்சில் திரண்டு வழிந்தன. தனக்கும் அனீஸாவுக்கும் இடையிலான இந்த தூரத்தை அவனால் நம்ப முடியவில்லை. இனிமேல், இந்த தூரம்தான் பாதி நிரந்தரம் என்பதையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அளவுக்கதிகமான அந்த மண்டபத்தின் அமைதி, நீதனுக்குள் ஒவ்வொரு மூச்சிலும் சிதைந்த முள்ளாக இதயத்தில் கீறியது.

குயிலனின் மனைவி மண்டபமே சரிந்து வீழ்ந்ததுபோல வீரிட்டு அழுதாள்.

குழந்தைகள் பயந்து தங்களது பெற்றோரிடம் எழுந்து ஓடினார்கள். மண்டபத்துக்குள் நின்றுகொண்டிருந்தவர்கள் அனைவரும் உறைந்து நின்றார்கள். குயிலன் இயன்ற அளவு அவளைத் தேற்றப்பார்த்தான். அதிகாரி ஒருவர் குவளையில் தண்ணீரைக் கொண்டுபோய் குயிலனுக்கு அருகில் வைத்தார். அந்தக் குழந்தையின் இழப்பையும், அதன் பிறகு கண்ட ஊதிப்பெருத்த உடலையும் அந்தத் தாயால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கரிய இருளில் அந்தக் கடல் கவிழ்த்த படகின் காட்சிகள் மீண்டும் மீண்டும் அவளது முகத்தில் அறைந்தன. கடைசிவரைக்கும் கைகளில் கிடந்த குழந்தையின் முகமும், அதன் அழுகையும் உயிர் நாணை அறுத்தது. கடைசி மூச்சுக்காகத் தன் குழந்தை தேடிய காற்றைத்தான், தான் சுவாசிப்பது போன்ற குற்றத்தின் கூர் விளிம்பு, இதயத்தை விட்டு விட்டுத் தைத்தது.

ஐயரின் முன்னால் நீதன் மயங்கிச் சரிந்தான்.

(தொடரும்)