Published:Updated:

`குட்பை ஃப்ரீடம்' - ஹாங்காங்கின் மக்களாட்சிக் கனவுகளைப் பறித்த சீனா!

ஹாங்காங்
ஹாங்காங்

ஹாங்காங் பகுதியைத் தன் எதேச்சதிகார வலைக்குள் சிக்க வைத்திருக்கிறது சீனா. ஹாங்காங்கில் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தி, ஹாங்காங்கின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, அனைத்து சிறப்பு அதிகாரங்களும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

நினைத்துப் பார்க்க முடியாத பல மாற்றங்கள் உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த அசாதாரண சூழலைச் சமாளிக்க எல்லா நாடுகளும் போராடிக்கொண்டிருக்கின்றன. இந்தக் குழப்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எல்லா திசைகளிலும் காய் நகர்த்துகிறது சீனா. நிலப்பரப்பு, கடல் பரப்பு என இரண்டிலும் தன் அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்றிருக்கிறது சீனா. ஒருபுறம், தெற்கு சீன கடலின் சர்ச்சைக்குரிய கடல் பகுதிகளைச் சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியாகக் கருதி அப்பகுதிகளை நிர்வகிக்க புதிய அதிகார மையங்களை உருவாக்கியிருக்கிறது. மறுபுறம் ஹாங்காங் தொடங்கி இந்தியா வரை சர்ச்சைக்குரிய எல்லைகளில் அத்துமீறி தன் அதிகாரத்தை நிலைநிறுத்தியிருக்கிறது.

ஹாங்காங்
ஹாங்காங்

குறிப்பாக, ஹாங்காங் பகுதியைத் தன் எதேச்சதிகார வலைக்குள் சிக்க வைத்திருக்கிறது சீனா. ஹாங்காங்கில், கடந்த ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்கச் செய்த பெரும் போராட்டங்கள் நடந்ததெல்லாம் நாம் அறிந்ததே. இந்த நிலையில், ஹாங்காங் கொரோனா மீது கவனத்தைச் செலுத்த, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஹாங்காங்கைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது சீனா.

மேற்கொண்டு படிப்பதற்கு முன்... ஹாங்காங்- சீனா வரலாற்றின் சிறுகுறிப்பு:

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டபோது, சீனா தனி நாடாகச் சுதந்திரம் பெற்றாலும், 1997-ம் ஆண்டுவரை ஹாங்காங் மட்டும் பிரிட்டிஷ் காலனியின் பிடியிலேயேதான் இருந்தது. அதற்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் ஹாங்காங் நிர்வாகத்துக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1997-ல் ஹாங்காங், சீனாவின் ஒரு பகுதியாக இணைந்தது. அப்போதும்கூட அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஹாங்காங், "குடியிருப்பாளர்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்கும். தவிர, வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைத் தவிர்த்து, அதிகளவில் சுயாட்சியை அனுபவிக்கும்" என்ற ஒப்பந்தத்தில்தான் சீனாவுடன் சேர்வதற்கு ஹாங்காங் மக்கள் அப்போது ஒப்புக்கொண்டார்கள்.

அந்த ஒப்பந்தத்தின்படி, சீன நிலப்பகுதிகளுக்குக் கிடைக்காத சுதந்திரம், ஹாங்காங்குக்குக் கிடைத்தது. அதாவது, எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை, பத்திரிகைகளுக்கான கருத்துரிமை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றோடு ஹாங்காங்குக்கு அதன் சொந்த ஜனநாயகத்தை வளர்த்துக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சுயாட்சி அதிகாரம் வரும் 2047-ம் ஆண்டில்தான் முடிவுக்கு வருகிறது.

ஹாங்காங் போராட்டம்
ஹாங்காங் போராட்டம்

ஆனால், சீனா விடுவதாக இல்லை. கடந்த 20 வருடங்களில் பலமுறை ஹாங்காங்குக்கு கொடுத்துள்ள சிறப்பு அதிகாரத்தை நீக்கிவிட்டு, ஹாங்காங் முழுவதையும் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயன்று வருகிறது. அதிலும் கடந்த சில வருடங்களாகச் சிறப்புச் சட்ட மசோதாக்களைக் கொண்டுவரத் தீவிரமான முயற்சிகளை எடுத்திருக்கிறது.

கடந்த வருடம், குற்றவாளிகளை நாடுகடத்தும் `கான்ட்ரவர்ஷியல் எக்ஸ்ட்ராடிஷன்’ என்ற ஹாங்காங் அரசின் சட்டத்திருத்தம் மக்களிடையே பெரும் எதிர்ப்பைப் பெற்று பல மாதங்கள் அந்த நகரம் போராட்டக் களமானது. சீனாவின் அதிகாரத்துக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்கள் எல்லாம் பாதிக்கப் படுவார்கள் என்றே அந்தச் சட்டம் எதிர்க்கப்பட்டது. அந்தப் போராட்டம் முழு வெற்றியைச் சுவைப்பதற்குள் அடுத்த கணையைத் தொடுத்து ஆட்டத்தை முடித்திருக்கிறது சீன அரசு.

ஹாங்காங் போராட்டம்
ஹாங்காங் போராட்டம்

உலகம் எல்லாம் கொரோனா பீதியில் இருக்க, ஏப்ரல் 17-ம் தேதி ஹாங்காங்கில் இருக்கும் சீனத் தூதரகம் ஒரு அறிவிப்பைச் செய்தது. சீன சட்டத்தின் வரையறைக்குள் இந்த அலுவலகம் உட்பட்டது என்ற அந்த அறிவிப்பின்படி, நேரடியாகத் தன்னுடைய அதிகார பலத்தை ஹாங்காங் மண்ணில் செலுத்தச் சீனா தயாரானது. ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடக் கூடாது என வரையறுக்கும் ஹாங்காங் நாட்டின் அடிப்படை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்தது இந்த அறிவிப்பு. ஹாங்காங் சுதந்திரத்துக்காகப் போராடும் சில முக்கியத் தலைவர்களையும் சத்தமின்றி கைது செய்தது சீனா.

இந்த முன்தயாரிப்புகளை எல்லாம் படிப்படியாகச் செய்த சீனா, ஜூன் மாத இறுதியில், ஹாங்காங்கில் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. இதன்மூலம், ஹாங்காங்கின் ஜனநாயகமும் சுதந்திரமும் பறிக்கப்பட்டு, ஹாங்காங்கின் அனைத்து சிறப்பு அதிகாரங்களும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்ன செய்யும்?

இந்தச் சட்டத்தின்படி, நாட்டிலிருந்து பிரிந்து செல்லுதல், மத்திய அரசின் அதிகாரத்தைக் குறைத்தல், பயங்கரவாதம் - வன்முறையைப் பிரயோகித்தல் அல்லது மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல், வெளிநாட்டு அமைப்புகளுடன் சேருதல் ஆகியவை குற்றமாகக் கருதப்படும்.

இதன்படி ஹாங்காங்குக்குள் சீனா ஒரு தேசியப் பாதுகாப்பு அலுவலகத்தை அமைக்கும். அந்த அலுவலகத்தில் இருக்கும் சீன பிரதிநிதிகள் சீனாவுக்கு எதிரான கருத்தியல் நிலைப்பாடு கொண்ட யாவரையும் தேச நலனுக்கு எதிரானவர்கள் எனக் கருதி அவர்கள் மேல் விசாரணையைத் தொடங்கலாம்.

China flag
China flag

இந்த வழக்குகளில் சில சீனாவில் நடைபெறும். அப்படியே ஹாங்காங்கில் இந்த வழக்கு நடந்தாலும் ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் தேசியப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் குறித்து விசாரிக்க நீதிபதிகளை நியமிப்பார். இதன்மூலம் மக்களின் முழு சுதந்திரமும், ஹாங்காங் நீதி அமைப்பின் அதிகாரமும் கூட பறிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டவரைவை நிறைவேற்ற சீனாவுக்கு ஒத்துழைப்பு தரப்படும் ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லாம் தெரிவித்ததையடுத்து சீன- ஹாங்காங் இடையே இருந்த ஒரே நாடு இரு அமைப்பு கொள்கை உடைபட்டிருக்கிறது.

சரி இனி ஹாங்காங் மக்களின் வாழ்வில் எதுவெல்லாம் மாறும் ?

சீனா தேசியப் பாதுகாப்புக்கு என வரையறுத்திருக்கும் அத்தனை சட்டமும், சீன பகுதிகளைப் போலவே ஹாங்காங் பகுதியிலும் நடைமுறைப்படுத்தப்படும். ஹாங்காங் சுதந்திரத்துக்காக யாரும் பேசக் கூடாது. சீன அரசின் நடவடிக்கைகள் குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பக் கூடாது. போராடுவதற்கான சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மறுக்கப்படும். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கப்படாது. இந்தச் சட்டத்தின் வழி, அரசியல் கைதிகள் சீனாவுக்கு நாடு கடத்தப்படலாம்.

ஹாங்காங் வாசிகளின் இணையப் பயன்பாடுகள் சீன அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஹாங்காங்கில் இயங்கி வரும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிடம் வாடிக்கையாளர் தரவுகளைக் கோரியுள்ளது சீனா. இந்த கோரிக்கைக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், டெலிகிராம், டிக்டாக் ஆகியவை மறுப்பு தெரிவித்துள்ளன. டிக்டாக் ஹாங்காங் சந்தையைவிட்டு மொத்தமாக வெளியேற உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்கள்
சமூக வலைத்தளங்கள்
pixabay

ஹாங்காங் விடுதலை பற்றிய சீனாவுக்கு எதிரான புத்தகங்களைப் பொது நூலகம், கல்லூரி நூலகங்களிலிருந்து நீக்குகிறது சீனா. ஹாங்காங் இளைஞர்களுக்குத் தேசப்பற்று பற்றிய சிறப்பு வகுப்புகளும் தொடங்கியுள்ளன.

நீதி அமைப்புகள் சீன அரசின் வசமாகும். ஹாங்காங் இதுவரை உலக நாடுகளுடன் கொண்டிருந்த வர்த்தக உறவுகள் மாறும். மக்களாட்சிக்கு ஆதரவாகச் சீனாவுக்கு எதிராகச் செயல்படும் தலைவர்களைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தடுக்கவும் முடியும். ஹாங்காங் -ல் சீனப் பிரதிநிதியான தலைமைச் செயலர், குறிப்பிட்ட ஒரு வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கைச் சீனாவில் விசாரிக்க முடிவு செய்யலாம். அந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வெளிப்படையாக நடத்தப்படாமல், மூடிய அறைக்குள் நடத்த உத்தரவிடும் அதிகாரமும் அவருக்கு உண்டு.

உலக நாடுகள் என்ன சொல்கின்றன ?

இந்த சட்டத்துக்கு உலக அளவில் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா எனப் பல நாடுகள் ஹாங்காங்குக்கு ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றன. உலகின் மிகப்பெரிய ‘ஜனநாயக’ நாடான இந்தியா, மௌனம் காக்கிறது. ஹாங்காங்கின் வீழ்ச்சி, கிழக்கு ஆசியாவில் புதிய வர்த்தக மையமாக மும்பையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் மௌனத்துக்கு இதுவும் காரணமாக இருக்கலாம் எனக் கணிக்கின்றனர் உலக அரசியல் பார்வையாளர்கள். வடகொரியா மட்டும் சீனாவின் உள்விவகாரத்தில் தலையிட முடியாது எனப் பேசியிருக்கிறது.

ஹாங்காங்:`அமெரிக்கா கேங்க்ஸ்டர்களைப் போல அச்சுறுத்துகிறது!’ - கொதிக்கும் சீனா

சீனாவின் ஹாங்காங் அபகரிப்பை எதிர்க்கும் வகையில் தற்போது ஹாங்காங்குக்கு அமெரிக்கா அளித்து வந்த சிறப்பு அதிகாரம் மற்றும் சலுகையை மொத்தமாக நீக்குவதாக ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுமட்டுமன்றி, சீனக் கம்யூனிச கட்சி அதிகாரிகளுக்கு அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா, அங்கு ஏற்கெனவே பல்வேறு காரணங்களுக்காகத் தங்கி இருக்கும் 10,000 ஹாங்காங் மக்களுக்குக் குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

ஹாங்காங் போராட்டம்... அன்று முதல் இன்றுவரை!

ஹாங்காங்கில் தற்போதைய நிலை என்ன ?

ஹாங்காங் மக்களின் வாழ்வும், அங்குள்ள நிறுவனங்கள், அரசியல் அமைப்புகள், என அனைத்தும் தினம் புதிய மாற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த புதிய தேசியப் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த 370 பேர் கைது செய்யப்பட்டனர். மக்களாட்சி சார்பு அரசியல் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதியிருந்தால்தானே கைது செய்வீர்கள் என வெறும் வெள்ளை பேப்பரை கையில் ஏந்தி வீதியில் நிற்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

ஹாங்காங் சட்டசபைத் தேர்தல் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. இதில் சீன தேசியப் பாதுகாப்புக்கு எதிராகாகச் செயல்பட்டவர்கள் என்றுகூறிப் பல மக்களாட்சி ஆதரவு தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைச் சீனாவால் தடுக்க முடியும்.

ஹாங்காங் கொடி
ஹாங்காங் கொடி
pixabay

இந்நிலையில் மக்களாட்சி தலைவர்களில் யார் தலைவருக்கான வேட்பாளராகப் போட்டியிடுவது என முடிவு செய்ய 'ப்ரைமரிஸ்' (Primaries) எனும் வேட்பாளர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க சுமார் 6 லட்சம் பேர் திரண்டு சீன அரசை மிரள வைத்திருக்கிறார்கள். ஹாங்காங் வரலாற்றில் 'ப்ரைமரி' தேர்தலில் இத்தனை லட்சம் பேர் வாக்களிப்பது இதுவே முதல் முறை. ஹாங்காங் மக்களின் ஜனநாயக ஆதரவுக்குச் சான்றாக இது பார்க்கப்படுகிறது.

ஜூலை 20, 2020 அன்று ஹாங்காங் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மக்களாட்சி ஆதரவு தலைவர் ஜோசுவா வாங் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், "சீனாவுக்கு ஹாங்காங் அடிபணியாது. சீனா என்னை நாடு கடத்தவும், ஆயுள் தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளது. எனினும் மக்கள் ஆதரவுடன் களத்தில் நிற்கிறோம். இறுதி மூச்சு வரை எங்கள் சுதந்திரத்திற்காகப் போராடுவோம்" என முழங்கியிருக்கிறார்.

இப்படி ஒருபுறம் சீன அரசியல் ஹாங்காங்கின் கழுத்தை நெருக்க, மறுபுறம் கொரோனா அம்மக்களை வீழ்த்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை நீண்ட காலம் கட்டுக்குள் வைத்திருந்தது ஹாங்காங். ஆனால் வைரஸ் தாக்குதலின் வீரியத்துடன் போராடும் மக்களின் விடுதலைக்கான வேட்கை அம்மக்களின் வாழ்க்கையை மிகவும் சிக்கலாகியிருக்கிறது. covid -19 மட்டுமல்ல, ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்கும் பெரும் வல்லரசுகளின் கோரைப் பற்கள் கூட உலகம் கண்டு அஞ்ச வேண்டிய பெரும் தொற்றுதான். அதை ஹாங்காங் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு