Published:Updated:

நேபாள் - இந்திய உறவு சரிந்தது எப்படி... 2015 முதல் 2020 வரை நடந்தது என்ன?

நேபாள் - இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே தற்போது சுமுக உறவு இல்லை. இந்தியாவுடன் நெருக்கமாக உறவுகொண்டிருந்த நேபாளம் தற்போது முரண்பட்டு நிற்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியா - நேபாளம் பல ஆண்டுகளாக நெருக்கமான நல்லுறவை கொண்டிருந்த நாடுகள். நேபாளுடன் திறந்த எல்லைகளைக் கொண்ட நாடு இந்தியா. அதாவது எந்தவித எல்லைத்தடைகளும் இன்றி, இரு நாட்டு மக்களும் வர்த்தக பொருள்களும் எல்லைகள் தாண்டி சுதந்திரமாகப் பயணிக்க முடியும். அந்தளவுக்கு இந்தியாவுடன் நெருக்கமாக உறவுகொண்டிருந்த நேபாளம் தற்போது முரண்பட்டு நிற்கிறது.

2008-ம் ஆண்டு மன்னராட்சியை ஒழித்து மதச்சார்பற்ற குடியரசாக மாறியது நேபாளம். அதன் அரசியலமைப்பு வரைவு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 2015-ம் ஆண்டுதான் அந்நாட்டு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அப்போதே நேபாளத்தின் புதிய அரசியலமைப்பில், மாற்றங்களைச் செய்ய வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியதாக சில இந்திய ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்திய அரசு இந்தச் செய்தி பொய்யென மறுத்தது.

Nepal
Nepal

ஆனால், புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று தினங்களில் நேபாளத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. 2015 செப்டம்பர் 23 முதல் நேபாளத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கும் விதமாக இந்தியா வழியாக நேபாளத்துக்குள் செல்லும் பெட்ரோல், மருத்துவ பொருள்கள், காய்கறிகள், சமையல் எரிவாயு உள்ளிட்டவை கிடைப்பது முற்றிலுமாகத் தடைபட்டது. அப்போதுதான் நேபாளம் மிகப்பெரிய பூகம்பத்தைச் சந்தித்திருந்தது. அதிலிருந்து மீள்வதற்கான நிவாரண பொருள்கள் கிடைக்குப்பதில்கூட பெரும் சிக்கல் ஏற்பட்டது.

சுமார் ஆறு மாதங்கள் தொடர்ந்த இந்தப் பொருளாதாரச் சிக்கலுக்கு காரணம் இந்தியாதான் எனக் குற்றம் சுமத்தியது நேபாளம். புதிய அரசியலமைப்பை விரும்பாத மாதேசி இன மக்கள் எல்லைகளில் முற்றுகை செய்வதால் இந்த வர்த்தகத் தடை ஏற்படுவதாகவும், இதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பில்லை எனவும் இந்திய அரசு மறுத்தது. இந்த மாதேசி மக்கள் அமைப்பு இந்தியாவின் ஆதரவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டத்தின்போது சுமார் மூன்று மில்லியன் நேபாள குழந்தைகள் உணவு, தடுப்பூசி, மருந்துகள் இல்லாமல் உயிர்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தச் சிக்கலின்போதுதான், தனது தேவைகளுக்காக இந்தியாவையே அதிகம் சார்ந்திருப்பதை உணர்ந்தது நேபாளம்.

வேறுவழியின்றி 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணிந்தது நேபாள அரசு. நேபாளத்தின் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திருத்தங்களை இந்தியா வரவேற்றது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாதேசி மக்கள் அமைப்பினர் இந்தத் திருத்தம் அரைகுறையாக இருப்பதாக அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஆனால், அவர்கள் போராட்டத்தைத் தொடரவில்லை. தங்களின் போராட்டங்களால் அரசு பெரிதாக முடிவுகளை மாற்றி கொள்வதில்லை. நேபாள மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகிறார்கள் என வருத்தம் தெரிவித்தார் மாதேசி இயக்கத்தின் மூத்த தலைவர். அதன்பிறகு போராட்டக்காரர்கள் பின்வாங்கினர். அவர்களின் முற்றுகை முடிவுக்கு வந்தது.

கே.பி.ஷர்மா ஒலி
கே.பி.ஷர்மா ஒலி

இதன்பிறகு நிலையற்ற பல அரசியல் சூழல்களைக் கடந்து, நேபாளத்தில் 2017 - டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி தொடங்கியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு, புதிய அரசியலமைப்போடு புதிய வடிவம் கொண்டிருக்கும் நேபாளத்தோடு இந்தியா கொண்டிருந்த பழைய புரிதல்கள் போதுமானதாக இல்லை. அதன் காரணமாக, இந்தியா - நேபாளம் இடையேயான உறவைச் சீரமைத்து புதிய மாற்றங்களுடன் மேம்படுத்த இரு நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் அந்தக் குழு சில பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், இந்தப் பரிந்துரைகளை இந்தியா விரும்பவில்லை எனச் செய்தி வெளியானது. இந்தியா அதிகாரபூர்வமாக இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், 2019-ம் ஆண்டு இந்தப் பரிந்துரைகள் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசின் சார்பில், இன்னும் இந்தப் பரிந்துரைகள் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் இப்படி விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருக்க, 2019 அக்டோபரில் சீனாவின் அதிபர் நேபாளத்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். ஒரு சீன தலைவர் நேபாளத்துக்குச் செல்வது அதுவே முதல் முறை. அப்போது நேபாளம் - சீனா உறவைப் பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இந்தியாவுடன் விரிசலும், சீனாவுடன் நட்பும் எனப் புதிய வெளியுறவுப் பாதையை அமைக்கத் தொடங்கியது நேபாளம். ஆனால், 2015-ம் ஆண்டே இந்தியாவை விட்டு தன் கவனத்தை சீனாவின் பக்கம் திருப்ப ஆரம்பித்திருந்தது. நேபாளத்தின் எரிபொருள் தேவைக்காகச் சீனாவின் எரிபொருள் நிறுவனத்துடன் முதன்முதலில் அப்போது ஒப்பந்தம் போடப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்கியது இந்தியா. பிறகு அப்பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது. இதற்கு உலக அளவில் பல எதிர்ப்புகள் கிளம்பியது. குறிப்பாக சீனா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லை நாடுகள் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தன. 2019 நவம்பர் 2 அன்று ஜம்மு காஷ்மீர் பகுதியின் புதிய வரைபடம் ஒன்று இந்தியா சார்பாக வெளியிடப்பட்டது. அந்த வரைபடத்தில் இந்தியா - நேபாள எல்லையில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியான காலாபானி பகுதி இந்தியப் பகுதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நேபாளம் அதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இதுகுறித்து தெளிவு பெற இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டது நேபாளம். ஆனால், இந்தியா பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கவில்லை.

India-China Face-Off: `கல்வான் இழப்பை ஏற்க மறுக்கும் சீனா!’ - அமெரிக்க உளவுத்துறை தகவல்

இந்தநிலையில், சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கயிலை மலையின் அடிவாரத்தில் உள்ள மான்சரோவர் ஏரி வரை செல்ல லிபுலேக் கணவாய் வரை 80 கிலோமீட்டருக்கு புதிய சாலையை அமைத்தது இந்தியா. மே 8-ம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்தச் சாலையைத் திறந்து வைத்தார். இதற்கு நேபாள பிரதமர் கே.பி.ஒலி, ``எங்களுக்குச் சொந்தமான லிபுலேக் கணவாயின் காலாபானி பகுதியை இந்தியா ஆக்கிரமித்துள்ளது" என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிப்பது போல பேசிய, இந்திய ராணுவ தலைமை ஜெனரல் நரவனே, ``நேபாளம் வேறு யாருக்காகவோ பேசுகிறது" என்றார். நேபாளம் சீன ஆதரவாகச் செயல்படுவதாக மறைமுகமாகக் குற்றம் சாட்டுவதாகவே இது பார்க்கப்பட்டது. நேபாளம் ஒருபுறம் நம்முடன் முரண்பட்டு கொண்டிருக்கும் நேரத்திலேயே மறுபுறம் இந்தியச் சீன எல்லை மோதல்களும் தொடங்கின.

சீனாவின் ஆதரவு பலமாக இருக்க, இந்தியாவுக்கு எதிராக நேரடியாகக் களத்தில் இறங்கியது நேபாள அரசு. 2020 ஜூன் 13 அன்று அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த நாட்டின் அதிகாரபூர்வ வரைபடத்தை வெளியிட்டது. அதில் இந்தியாவுடன் எல்லை சர்ச்சையில் இருக்கும் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகள் நேபாள நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன. இந்தப் பகுதிகள் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சேரும் பகுதிகள் என்று இந்திய அரசு உரிமை கோருகிறது. நேபாளத்தின் இந்தப் புதிய வரைபடத்துக்கு இந்தியா பலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

நேபாளம்
நேபாளம்

நேபாளத்தில், பொதுமக்களில் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்காத எதிரிப்பாளர்கள் அனைவரையும் தேசத்துரோகிகளாக அந்த நாட்டு ஊடகங்கள் சித்திரிக்கின்றன. நேபாளத்தில் உள்ள ஊழல், மோசமான கொரோனா தடுப்பு நடவடிக்கைள் போன்ற அரசின் பிழைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பவே இந்தத் தேசபக்தி நாடகம் அரங்கேற்றப்படுவதாக நேபாளத்தின் அரசியல் விமர்சகர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுவதாகவும் பரவலாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய ஊடகங்கள் நேபாள பிரதமர் கே.பி. ஒலியின் செயல்பாடுகள் குறித்து காரமாக விமர்சித்தன. நேபாளத்தின் சீனச்சார்பு பற்றி இந்திய ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.

நேபாளத்துக்கான சீனத் தூதர் யாங் சி, காத்மாண்டுவில் உள்ள சிபிஎன் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறித்து இந்திய ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து, நேபாளத்தின் ஒற்றுமைக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தநாட்டு கேபிள் மற்றும் சாட்டிலைட் தொலைக்காட்சி சேவை நிறுவனங்கள், தூர்தர்ஷன் தவிர மற்ற இந்திய சேனல்களின் ஒளிபரப்பை முற்றிலுமாக நிறுத்தின. நேபாள அரசு இந்திய சேனல்களுக்குத் தடை விதிக்கவில்லை என்றாலும் இந்திய ஊடகங்களின் செயல்பாட்டுக்குக் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. நேபாள அரசின் செய்தி தொடர்பாளர் யூபா ராஜ் காத்திவாடா, இந்திய ஊடகங்களில் வரும் புனையப்பட்ட, கற்பனையான செய்திகள், வலுவான அரசியல் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வித்திடும் எனத் தெரிவித்துள்ளார்.

சீன தூதர் யன்ஹியுடன் கே.பி.ஷர்மா ஒலி
சீன தூதர் யன்ஹியுடன் கே.பி.ஷர்மா ஒலி

அதேசமயம், நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி வெளியிடும் கருத்துகள் யாவும் அவரின் இந்திய எதிர்ப்பு மனநிலையைப் பிரதிபலிப்பதாக இருந்தன. கம்யூனிஸ்ட் உட்கட்சி கூட்டத்தில் இந்தியாவின் ஆதரவோடு தன் பிரதமர் பதவிக்கு ஆபத்து விளைவிக்கச் சதி நடப்பதாகக் குற்றம் சுமத்தினார் கே.பி.ஷர்மா ஒலி.

நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா பதவி விலகக் கோரி ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையைச் சமாளிக்க கொரோனாவை காரணமாகக் காட்டி சுகாதார அவசர நிலையை அமல்படுத்த, ஜனாதிபதி பண்டாரியுடன், ஷர்மா ஆலோசனை நடத்தியுள்ளார். நேபாள கம்யூ கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சியைக் காப்பாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் பிற கட்சிகளுடன் ஷர்மா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இந்த நேபாளின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டு, ஷர்மா ஒலி அரசைக் காப்பாற்ற நேபாளத்துக்கான சீனத் தூதர் ஹூ யான்கி அழுத்தம் கொடுத்துவருவது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

இந்தியா - சீனா நட்புறவு நாடகம்...  இந்தியாவின் ஏக்கமும் சீனாவின் துரோகமும்!

இந்தநிலையில், ஜூலை 13-ம் தேதி பானுபாக்த ஆச்சார்யா எனும் நேபாளி கவிஞரின் பிறந்தநாள் விழாவில் பேசிய நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, ``கடவுள் ராமர் பிறந்த உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. நேபாளத்தில்தான் இருக்கிறது" எனக் கூறியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள பிரதமர் பேசுகையில், ``ஜனக்பூர் எனும் சீதா பிறந்த ஜனக மன்னனின் தேசம் நேபாளில் இருக்கிறது. தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில், நேபாளத்தின் இளவரசி சீதாவைப் பற்றி மிக தொலைவில் இந்தியாவில் இருக்கும் ராமர் எப்படி அறிந்திருக்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ``நேபாளில் ஜனக்பூர் அருகில் உள்ள அயோத்தி கிராமத்தில்தான் ராமர் பிறந்தார். இவ்வளவு நாள்களாக இந்தியா, ராமர் அவர்கள் நாட்டில் உள்ள அயோத்தியில்தான் பிறந்தார் எனச் சொல்லிச் சொல்லி நம்மையும் அதையே நம்ப வைத்துவிட்டது" எனவும் கூறியிருக்கிறார்.

ஜனக்பூரில் பிரதமர் மோடியுடன் கே.பி.ஷர்மா
ஜனக்பூரில் பிரதமர் மோடியுடன் கே.பி.ஷர்மா

இந்தியாவில் இருக்கும் அயோத்தியில் இருந்து நேபாளில் சீதா பிறந்ததாகச் சொல்லப்படும் ஜனக்பூர் வரை `ராமாயண சுற்றுப்பாதை பயணத்தை' மோடியும் - ஷர்மா ஒலியும் 2018-ம் ஆண்டு தொடங்கி வைத்தனர். இந்த `ராமாயண சுற்றுப்பாதை பயண'த்தில் ராமாயணத்தில் குறிப்பிடும் முக்கிய இடங்களுக்கு பக்தர்கள் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ராமேஸ்வரம் முதல் அயோத்யா வரை இந்தியாவில் ஏழு மாநிலங்கள் மற்றும் நேபாளம் போன்ற இடங்களில் இந்தப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் பயண வசதிகள், குடிநீர், தாங்கும் வசதிகள் போன்றவற்றை மேம்படுத்துவதே திட்டம். இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் பிரிதமர் மோடி நேபாளம் சென்று ஜனக்பூர் வரை பேருந்து பயணத்தைத் தொடங்கி வைத்தார். அப்போதெல்லாம் ராமர் பிறப்பிடம் பற்றி நேபாளத்துக்கு மாற்று கருத்து இருந்திருக்கவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

மாறிவரும் நேபாளத்தின் தன்மையை, அதன் வளர்ச்சியை இந்தியா சரியாகப் புரிந்துகொள்ளாததே இந்த விரிசலுக்குக் காரணம் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து. நேபாளத்தில் சீனாவின் அதிகப்படியான தலையீடு என்பது நேபாளத்துக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் ஆபத்தாகவே முடியும். அதனால், இந்திய வெளியுறவுத்துறை இன்னும் வேகமாக, இன்னும் சிறப்பாகச் செயல்படுவது முக்கியம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு