Published:Updated:

ஹிலாரிக்கு வந்த மெசேஜ்... மாறிய ரிசல்ட்! ஓர் அதிபர், ஓர் உலகம்... ஒரேயொரு ட்ரம்ப்! பகுதி 4

அதிபருக்கான வாக்கு சதவிகிதம் ட்ரம்ப்பை விட ஹிலாரி அதிகம் பெற்ற போதும், மாகாணங்களுக்கான எலக்டோரல் வாக்குகள் 300-க்கு மேல் குடியரசு கட்சிக்குக் கிடைத்தது. அதிகாலை 2.30 மணிக்கு ட்ரம்ப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஹிலாரிக்கு வந்த மெசேஜ்... மாறிய ரிசல்ட்! ஓர் அதிபர், ஓர் உலகம்... ஒரேயொரு ட்ரம்ப்! பகுதி 4

அதிபருக்கான வாக்கு சதவிகிதம் ட்ரம்ப்பை விட ஹிலாரி அதிகம் பெற்ற போதும், மாகாணங்களுக்கான எலக்டோரல் வாக்குகள் 300-க்கு மேல் குடியரசு கட்சிக்குக் கிடைத்தது. அதிகாலை 2.30 மணிக்கு ட்ரம்ப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Published:Updated:
"டெக்ஸாசிலிருந்து ஃபுளோரிடா வரை அமெரிக்கா முழுவதும் மக்களிடத்தில் இத்தேர்தல் குறித்து அதிருப்தியே நிலவுகிறது. ட்ரம்ப்பும் சரி, ஹிலாரியும் சரி மக்கள் எதிர்பார்க்கும் எண்ணங்களுக்குத் தகுதி பெறவில்லை. இந்த அமைப்பு முறையையே மாற்ற வேண்டும் என்ற மனோநிலைதான் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் போடும் ஓட்டு தனிப்பட்ட ஜனநாயக கடமைக்குத்தானே தவிர, வேட்பாளர்களுக்கானதல்ல..."
தேர்தல் பணியிலிருந்த ஒரு பத்திரிக்கையாளரின் கருத்து இது.

ட்ரம்ப்பே அந்நிலையை உணர்ந்திருந்தார் என்றும் சொல்லலாம். தனது இறுதி நாள் பிரசாரத்தின் போது, "நாம் வெற்றிபெற முடியாமல் போகலாம். அதனை நேரம், ஆற்றல், பணம் போன்ற தனிப்பட்ட இழப்பாகக் கருதுகிறேன். ஆனால், அனைவரும் நமக்கான தருணத்தை இழந்துகொண்டுள்ளோம்'' என்று குறிப்பிட்டார். ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளும் 70 சதவிகிதத்துக்கும் மேலான வெற்றி வாய்ப்பை ஹிலாரிக்கு வழங்கின. ஹிலாரியின் இறுதிநாள் பிரசாரம் அதிபர் ஒபாமாவோடு கோலாகலமாக நடைபெற்றது.

ஹிலாரி | ட்ரம்ப்
ஹிலாரி | ட்ரம்ப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்தல் நாள் அன்று மாலையிலிருந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக ஆரம்பித்தன. ஒஹியோ, லோவா, பென்சில்வேனியா, வடக்கு கரோலினா போன்ற ட்ரம்ப் எதிர்பார்த்திருந்த முக்கிய மாகாணங்களில் தோல்வியடையும் அல்லது கடுமையான போட்டி நிலையும் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 'நியூயார்க் டைம்ஸ்' இணையதளம் 85% வெற்றி வாய்ப்பை ஹிலாரி கிளிண்டன் பெறுவார் என அறிவித்தது. ஆனால், திடீர் திருப்பமாக இரவுக்குப் பின் அனைத்தும் மாறியது. ஒஹியோ, ஃபுளோரிடா, லோவா எனத் தொடர்ந்து பல மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிபர் ஒபாமா ஹிலாரிக்கு ஒரு மெஸேஜ் அனுப்பினார்.

அதில், "2000-ம் ஆண்டு தேர்தலில் நடந்தது போல் மற்றுமொரு நிச்சயமற்ற ரிசல்ட் கிடைக்கப்போகிறது. இது மோசமான விளைவை ஏற்படுத்தும். ஒருவேளை நீங்கள் தோற்க நேர்ந்தால் அதை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிபருக்கான வாக்கு சதவிகிதம் ட்ரம்ப்பை விட ஹிலாரி அதிகம் பெற்ற போதும், மாகாணங்களுக்கான எலக்டோரல் வாக்குகள் 300-க்கு மேல் குடியரசு கட்சிக்குக் கிடைத்தது. அதிகாலை 2.30 மணிக்கு ட்ரம்ப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஒபாமா | ஹிலாரி கிளிண்டன்
ஒபாமா | ஹிலாரி கிளிண்டன்

நியூயார்க்கில் பேசிய ட்ரம்ப், "அமெரிக்கர்களின் வலிகளுக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டது. அனைத்து அமெரிக்கர்களுக்கும் நான் சிறந்த அதிபராக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். மதம், மொழி பாராமல் ஆரம்பம் முதலே ஓர் இயக்கமாக வலுப்பெற்ற நம் பிரசாரத்தின் வெற்றி இது. ஆண்டாண்டுகால கனவுகளிலிருந்து நமது நாட்டை வடிவமைப்போம்" என அமெரிக்கப் பெருமிதம் பொங்கச் சூளுரைத்தார். மனமுடைந்த ஹிலாரி அன்று ஏதும் பேச விரும்பவில்லை. மறுநாள், "தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்வோம். அமெரிக்க நலனுக்காக ட்ரம்ப் அரசின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்போம்" எனக் கட்சியினருக்கு வலியுறுத்தினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹிலாரியின் தனிப்பட்ட இ-மெயில்கள் வெளியீடு, கடந்த பில் கிளிண்டன் ஆட்சியின் மீதான சர்ச்சை போன்றவை ஹிலாரியின் தோல்விக்குக் காரணமானாலும், ட்ரம்ப்பின் வெற்றியைச் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியாது. அமெரிக்க வரலாற்றில் ட்ரம்ப்பின் வெற்றி ஆச்சர்யமானது மற்றும் தனித்துவமானது. அதற்கான வலுவான காரணங்களாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுவது, ட்ரம்ப்பின் பிரபல்யம். இதுவரையான அமெரிக்க அதிபர்கள் கடந்த காலங்களில் அரசுப்பணி, ராணுவம், அரசியல் பொறுப்பு என்று ஏதோவொரு விதத்தில் அரசோடு தொடர்புடையவர்களாக இருந்தவர்கள். ஆனால், ட்ரம்ப் தன் தொலைக்காட்சி பிரபல்யத்தை கொண்டு மட்டுமே களத்தில் நின்றார். இது மக்களுக்கு புது அனுபவமாக இருந்தாலும், ட்ரம்ப்பின் மீதான ஊடகங்களின் சித்திரிப்புகள் அதை அதிகப்படுத்தின.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப்பின் தொழிற்நிலையும் இலவச வர்த்தகம் கூடாது, கார்ப்பரேட்களுக்கான கூடுதல் வரி ரத்து போன்றவையும் எலைட்களின் ஆதரவை உறுதிப்படுத்தியது. முக்கிய கூறாக, அமெரிக்க தேசிய அரசியலும் பிரிவினைவாத வெறுப்பு பிரசாரமும் அமெரிக்க என்ற தேசிய பாப்புலிசத்தின் அடையாளமாக ட்ரம்ப்பைப் பார்க்க வைத்தது. மெக்சிகர்கள், இஸ்லாமியர்கள், மெக்சிகோ-அமெரிக்கா தடுப்புச் சுவர், குடிபெயர்தல் போன்ற விஷயங்கள் அடையாள அரசியலுக்கு கைகொடுத்தன. இவையல்லாமல் முறைகேடாக சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியது, ரஷ்யாவின் தலையீடு போன்ற பல குற்றச்சாட்டுகளும் ட்ரம்ப்பின் வெற்றிக்கான காரணமாகக் கூறப்படுகிறது.

ட்ரம்ப்பின் தந்தை பிரெட் ட்ரம்ப் ஜெர்மானிய வழிவந்த குடும்பத்தைச் சார்ந்தவர். தாய் மேரி அன்னே ஸ்காட்லாண்டில் பிறந்தவர். இருந்தும் தான் ஒரு தூய அமெரிக்கன் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை என்பார் ட்ரம்ப். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர் குடும்பத்தின் ரியல் எஸ்டேட் பிசினஸில் இறங்குகிறார். பிசினஸிலும் ட்ரம்ப்பின் அதிர்ஷ்டம் ஹோட்டல், கேசினோ, கோல்ஃப் மைதானம் என பலதுறைகளில் வெற்றியடைய வைக்கிறது. தனது புகழின் அடையாளமாக நியூயார்க் நகரத்தில் லட்சிய கட்டடத்தைக் கட்டுகிறார். 'ட்ரம்ப் டவர்' என பெயர்ப்பற்ற அக்கட்டடம் வணிகம் முதல் பின்னாளில் ட்ரம்ப்பின் அரசியல் வரை முக்கியத்துவம் பெற்றது.

Donald Trump
Donald Trump
Tia Dufour/The White House via AP

ஆம், ட்ரம்ப் ஒரு எழுத்தாளர். சுயசரிதை, தன்னம்பிக்கை, பொருளாதாரம், அரசியல் என்று பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது தொழிற் நுணுக்கங்களை மையப்படுத்தி எழுதிய முதல் புத்தகமான Trump: The Art of Deal நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனை பட்டியலில் இடம்பெற்றது. அடுத்து டெலிவிஷனிலும் ஒரு கை பார்த்துவிடுவோம் என பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தயாரித்தார். சிலவற்றில் அவரே ஹோஸ்ட்டாகவும் தரிசனம் தந்தார். இது அவருக்கு பிரபல்யம் முதல் பின்னாளில் பிரச்னை வரை பெற்றுத் தந்தது.

ட்ரம்ப்பின் அரசியல் வாழ்க்கையை காமெடியாகவே பலரும் பார்க்கின்றனர். 1987-ம் ஆண்டு குடியரசு கட்சியில் இணைந்தவர் 1999-ம் ஆண்டு சீர்திருத்தக் கட்சிக்கு (Reform Party) மாறினார். அங்கிருந்து 2001-ம் ஆண்டு ஜனநாயக கட்சிக்குத் தாவியவர், 2009-ம் ஆண்டு மீண்டும் தாய் கழகமாம் குடியரசு கட்சியிலேயே ஐக்கியமானார். கட்சிகள் பல மாறினாலும் ஒரு சரியான வியாபாரி என்பதை நிரூபிக்கும் வகையில் அனைத்து கட்சிக்கும் சம அளவில் நன்கொடை வழங்கினார். 2010-ல் அதிபர் ஆசை வந்தபிறகே குடியரசு கட்சியில் தன்னை நிலைநிறுத்தும் வேலையில் ஈடுபட்டார்.

Donald Trump
Donald Trump
AP / Alex Brandon

இதற்கிடையே 2000-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் சீர்திருத்தக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார் ட்ரம்ப். அப்போது, குடியரசு கட்சியின் சார்பாக ஜுனியர் ஜார்ஜ் புஷ் களமிறங்கினார். ரிசல்ட் கண் முன் தெரிந்ததாலோ என்னவோ போட்டியிலிருந்து விலகினார் ட்ரம்ப். கிட்டத்தட்ட 2016-லும் ட்ரம்ப்பின் போட்டி அவ்வாறே பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து அனுமானங்களையும் தகர்த்து வெள்ளை மாளிகையை ஆட்டிப்படைக்கத் தயாராகிக்கொண்டிருந்தார் ட்ரம்ப்.

ட்ரம்ப்பின் ஆட்சியில் என்னவெல்லாம் நடந்தது? நாளை படிப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism