Published:Updated:

அமெரிக்கா - இரான் சிக்கலும் இடையில் சிக்கிய இந்தியாவும்!

ஏதோவொரு பிரதேசத்தில் போடப்படும் ட்ரோன் குண்டில், நாம் அதிகம் கேள்விப்படாத ஒரு ராணுவத் தளபதி இறந்தால் கூட, இந்தியாவின் கடைசி குடிமகனும் அதனால் பாதிப்படையக் கூடும் என்பதே சர்வதேச அரசியல்.

அமெரிக்கா என்ற உலகின் சர்வ வல்லமை படைத்த ஏகாதிபத்தியத்தின் அரசியல், டொனால்டு டிரம்ப் எனும் நவீனக் கால நீரோ மன்னனின் அகங்காரப் பிடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் டிரம்பின் அனைத்துச் செயல்களும் தன்னிச்சையாக, வழக்கத்துக்கு மாறாக, தர்க்கத்துக்கும், தார்மிகக் கோட்பாடுகளுக்கும் விரோதமாக, பொதுவாகப் பின்பற்றப்படும் வெள்ளை மாளிகையின் அரசியல் ராஜதந்திரத்துக்கு முற்றிலும் அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.

`அமெரிக்க ராணுவம் ஒரு தீவிரவாத இயக்கம்!’- இரான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா

அவரது பேச்சுகள், செயல்பாடுகள், ட்வீட்டுகள், முடிவுகள் என அனைத்தும் உலக அளவில் சர்ச்சைகளைக் கிளப்பி, கேள்விகளை எழுப்ப, அவற்றைச் சமாளித்து விளக்கமளித்து மாய்கிறது வெள்ளை மாளிகை. அதிலும் இவ்வாண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் தேதி நெருங்க நெருங்க, பிரச்னைகள் உச்சமடைகின்றன. ஒருபுறம் அரசியல் குற்றத்தீர்மான விசாரணைகளில் சிக்கியிருக்கும் ட்ரம்ப் மறுபுறம் தேர்தல் வெற்றியைக் கணக்கிட்டுப் பல அதிரடிகளை அரங்கேற்றுகிறார். இதில், அமெரிக்கா மட்டுமன்றி உலக நாடுகள் எல்லாம் கூட ஆட்டம் காண்கின்றன. ட்ரம்ப்பின் அரசியல் முடிவுகளுக்குச் சமீபத்திய பலி, இரான்.

இரான் நாட்டு ராணுவத் தளபதி, அமெரிக்காவின் பரம எதிரி, மத்திய கிழக்கு நாடுகளின் மிக முக்கியமான நபர் காசிம் சுலைமானி. இவர் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் பாக்தாத் விமான நிலையத்துக்கு வெளியே அமெரிக்கப் படைகளின் ட்ரோன் தாக்குதலால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காசிம் சுலைமானி
காசிம் சுலைமானி

மத்திய கிழக்கு நாடுகளில் இது பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவை எதிர்த்து உலக நாடுகளின் கண்டனக் குரல்கள் வலுத்தன. `அமெரிக்காவின் செயல் சர்வதேசச் சட்டங்களுக்கு விரோதமானது’ என ஐ.நா சாடியது. சுலைமானியின் மரணத்திற்கு அமெரிக்காவைப் பழிவாங்குவோம் என இரான் எச்சரித்தது. வழக்கம்போல எதையுமே கண்டுகொள்ளாத ட்ரம்ப், இரானின் எச்சரிக்கைக்குப் பதில் மிரட்டலாக, "உலகின் பலம் பொருந்திய எங்கள் அமெரிக்கா ராணுவம், எந்தவித தயக்கமும் இன்றி இரானின் கலாசாரச் சின்னங்கள் உட்பட 52 முக்கியமான இடங்களில் தாக்குதல் நிகழ்த்தும். அமெரிக்காவை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்கா - இரான் போர் என்பது சுலைமானியின் கொலையால் இப்போது தொடங்கியதல்ல, சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்துத் தொடங்கியது. சவூதி உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திக்கொள்ள, தன்னுடைய வளங்களை நாட்டுடைமையாக்கிப் பாதுகாத்துக் கொள்ள முயன்றது இரான். ஆனால், அமெரிக்கா அதை அனுமதிப்பதாக இல்லை.

அமெரிக்கா- இரான்
அமெரிக்கா- இரான்

1953-ல் `ஆபரேஷன் அஜாக்ஸ்' என்ற பெயரில் அமெரிக்கா சி.ஐ.ஏ ஏஜென்ட் கெர்மிட் ரூஸ்வெல்ட் என்பவரை இரானில் களம் இறக்கியது. பெட்ரோலியம் தொடர்பான நிறுவனங்களையும் அவற்றின் சொத்துகளையும் தேசிய உடைமையாக்கிய அப்போதைய இரானின் பிரதம மந்திரி முகமது மொஸாடெக்கைப் பதவி விலக வைத்து, தனக்குத் தலையாட்டும் முகமது ரேஸாஷாவை ஆட்சியில் அமர்த்தியது அமெரிக்கா.

அமெரிக்காவுக்கு அடிபணிந்த ஷாவுக்கு எதிராக இரானில் 1979-ம் ஆண்டு மக்கள் புரட்சி வெடித்தது. இதில் 52 அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு இரானிலுள்ள அமெரிக்கத் தூதரகங்களில் அடைக்கப்பட்டனர். இந்த 52 பேர் நினைவாகத் தான், 52 இடங்களில் அமெரிக்கா தாக்கும் என அதிபர் டிரம்ப் தற்போது எச்சரித்திருக்கிறார்.

அமெரிக்கா -இரான் மோதல் எப்போது, எதற்காகத் தொடங்கியது? - ஒரு விரிவான அலசல்!

`அமெரிக்காவைத் தாக்குவதற்கு சுலைமானி திட்டமிட்டிருந்தார், பல அமெரிக்கர்களின் வாழ்விற்கு அச்சுறுத்தல் இருந்தது என்பதால்தான் அமெரிக்கா அவர் மீது தாக்குதல் நடத்தியது' என்பதே ட்ரம்ப் தரப்பு வாதம். ஆனால், இரான் கடந்த ஆண்டு அமெரிக்காவின் கண்காணிப்பு டிரோனைத் தாக்கி அழித்தது. அப்போது இரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தாமல் பின்வாங்கினார் ட்ரம்ப். அதேபோல சவூதி எண்ணெய்க் கிடங்கில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்கும் இரான்தான் காரணம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அப்போதும் ட்ரம்ப் எதிர் வினையாற்றவில்லை. இவையெல்லாம் தன்னை பலவீனமானவராகச் சித்திரித்ததாக ட்ரம்ப் நினைத்தார். அதன் விளைவாகவே, அமெரிக்கா பாதுகாப்பைப் பொறுத்தவரை தான் மிகக் கடினமான, வலிமையான, பலமான தலைவர் என்பதை நிரூபிக்கவே தற்போது ட்ரம்ப் இந்தத் தாக்குதலை நிகழ்த்தி இருப்பதாகப் பரவலாகச் சொல்லப்படுகிறது.

அமெரிக்கர்கள் மற்றுமொரு போரை விரும்பவில்லை. ஆனால், ட்ரம்ப் மற்றுமொரு போரினால் ஏற்படும் இழப்புகளைப் பற்றி கவலை கொள்ளவில்லை என்பதே தற்போதைய அமெரிக்கா அரசியலின் நிலவரம். இரான் அமெரிக்கர்களை வெளியேறச் சொல்லி, அமெரிக்காவுடன் போரைக் குறிக்கும் செங்கொடிகளைப் பறக்கவிட்டிருக்கிறது. சுலைமானி கொலையால் பதற்றமான சூழ்நிலை இருநாடுகளுக்கு மத்தியிலும் நிலவி வரும் நிலையில், அதிரடியாக 2015-ம் ஆண்டு அணு ஒப்பந்தம் தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு இனி கீழ்ப்படியப்போவதில்லை என இரான் அறிவித்துள்ளது. எப்பொழுது எங்கு யார் தாக்கப்படுவார்கள் என இரு நாடுகளும் பதற்றத்துடன் காத்திருக்கிறது. இரு நாடுகளின் அரசியல் ஆட்டங்களில் பலியாகப் போவது அப்பாவி பொதுஜனம் என்பது மட்டுமே உறுதியாகியிருக்கிறது.

``10 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்திவைத்து ஆதரவு தாருங்கள்!'' - தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்

இரான் மற்றும் இராக் மீது தொடங்கப்பட்ட போர், அவற்றின் எண்ணெய் வளங்களைக் குறிவைத்தே தொடங்கப்பட்டது. பல தசாப்தங்களாக தன் எண்ணெய் வளங்களைக் குறிவைக்கும் வல்லூறுகளின் அதிகாரப் போட்டியால் பற்றி எரிந்துகொண்டிருக்கின்றன மத்திய கிழக்கு நாடுகள். தற்போது அமெரிக்கா மீண்டும் பற்ற வைத்திருக்கும் இந்தத் தீ உடனடியாகத் தணிக்கப்படாவிடில், அந்த இரு நாடுகள் மட்டுமல்லாது, மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களைப் பெருமளவு சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரச்சரிவு உட்பட அது பல விளைவுகளை ஏற்படுத்தும்.

இந்தியாவின் சிக்கல்

ஏற்கெனவே இந்தியாவின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளான வெங்காயம், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை மிக அதிகமாக இருக்கிறது. தற்போதைய இரான் - அமெரிக்கா சிக்கலில் இந்தியாவில் பெட்ரோல் டீசலின் விலை அதிகரிக்க நேரும். ஏற்கெனவே இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் இந்திய உட்பட எட்டு நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

எண்ணெய் தேவையில் இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியத் தேவையில் 80% எண்ணெய், இறக்குமதி மூலமாகவே கிடைக்கிறது. இந்தியாவின் தேவைக்காக, இராக், சவுதி அரேபியாவிற்கு அடுத்து இரானிலிருந்துதான் அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் கெடுபிடியால், இந்தியா, அமெரிக்கா மற்றும் வெனிஸுலா நாட்டிலிருந்து தனக்குத் தேவையான எண்ணெயை இறக்குமதி செய்துகொண்டது. இதைவிடவும் இரானின் எண்ணெய் விலை குறைவாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழல் இரானில் தொடரும் பட்சத்தில், அந்தப் பிராந்தியத்தில் எண்ணெய் இறக்குமதி செய்யும் டேங்கர் கப்பல்களுக்கான காப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கும். இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏறுமுகமாகத்தான் இருக்கும். ஒருவேளை பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க இந்திய அரசு வரியைக் குறைத்தால், அதுவும் இந்தியாவின் வருமானத்தைக் குறைத்து நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

இரானிலிருந்து இந்தியா எண்ணெய், உரம் மற்றும் ரசாயனங்களை இறக்குமதி செய்கிறது. அதே சமயம் இந்தியாவிலிருந்து இரானிற்குத் தானியங்கள், டீ, காபி, பாஸ்மதி அரிசி, மசாலா பொருள்கள் மற்றும் இயற்கை உரங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இரானில் பதற்றமான சூழல் நிலவினால், இந்தியாவின் ஏற்றுமதி விகிதங்களும் பெருமளவில் பாதிப்படையும்.

அதுமட்டுமன்றி, இரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலால், பங்குச் சந்தையிலும் கடும் சரிவு ஏற்பட்டு, அன்றைய இழப்பு தொகை மட்டும் மூன்று லட்சம் கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

மேலும், இரானுடனான பகை ஏற்பட்டதையடுத்து, தன் பலத்தை அதிகரித்துக்கொள்ள பாகிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்கா அளித்து வந்த பயிற்சிகளுக்கான நிதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று குறை கூறி அமெரிக்கா 2018-ம் ஆண்டு இந்த நிதியை நிறுத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவின் சர்வதேச உறவுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மேற்கு ஆசியா பிரதேசங்களில் சுமார் 8 மில்லியன் இந்தியர்கள் வாழ்கின்றனர். அங்கு போர் நிகழும் சூழல் ஏற்பட்டால், அந்நாட்டு மக்களுடன் சேர்ந்து அங்கு வாழும் இந்தியர்களின் உயிருக்கும் பெரும் ஆபத்து இருக்கிறது. போர் இல்லாத சூழல் ஏற்பட்டாலும், அங்கு நிலவும் அசாதாரண சூழலால் பொருளாதாரம் பாதிப்படைந்து பல லட்சம் இந்தியர்கள் வேலையை இழப்பர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும். கூடுதலாக வெளிநாடு வாழ் இந்தியர்களின் வருமானம் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கும் சுமார் 40 பில்லியின் டாலர் தொகையை இந்தியா இழக்கும். இது இந்தியாவின் அந்நியச் செலாவணியைப் பாதிக்கும்.

ஏற்கெனவே இரானுடன் நம் வர்த்தக உறவுக்கு அமெரிக்கா பெரும் தடையாக இருந்துவருகிறது. ஒருவேளை அங்கு சூழல் மோசமடையும் நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் - இரான் ஆகிய மூன்று நாடுகளின் அடிப்படையில், ஓமன் வளைகுடாவில் முன்னெடுக்கப்பட்ட சாபஹர் துறைமுகத் திட்டத்திலும் பின்னடைவு ஏற்படும். இது இந்தியாவிற்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இரான் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நாடுகளின் மூலமாக, பல்வேறு வழிகளில் இந்தியாவுக்கு சுமார் 200 பில்லியின் டாலர் வருமானம் வருகிறது. ஏதோவொரு பிரதேசத்தில் போடப்படும் ட்ரோன் குண்டில், நாம் அதிகம் கேள்விப்படாத ஒரு ராணுவ தளபதி இறந்தால் கூட, இந்தியாவின் கடைசிக் குடிமகனும் பாதிப்படையக் கூடும் என்பதே சர்வதேச அரசியல்.

இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம்

மீண்டுமோர் உலகப் போரிலிருந்து எந்த தேசமும் மீளாது. அந்தப் போர் துப்பாக்கிகள், பீரங்கிகள் வெடிக்கும் ரத்த பூமியில் நடந்தாலும் சரி, அல்லது எண்ணெயும், தங்கமும், பணமும் தீர்மானிக்கும் வர்த்தகப் பூமியில் நிகழ்ந்தாலும் சரி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு