Published:Updated:

உலக நாடுகளில் கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் அரசியல் பாதிப்புகள் - ஓர் அலசல்!

கொரோனா
News
கொரோனா

கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்தி உலக நாடுகள் மேற்கொண்டு வரும் சர்ச்சைக்குரிய அரசியல் மாற்றங்கள் என்னென்ன?

உலக நாடுகள் கடந்த ஒரு நூற்றாண்டாகதான் காலனிய ஆதிக்கம், மன்னராட்சி, சர்வாதிகாரம் என்கிற அடக்குமுறை அரசியல் சூழல்களிலிருந்து ஒவ்வொன்றாக விடுபட்டு மெல்ல ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. மிக வலுவான ஜனநாயக அரசியலமைப்பையும் அதைத் தக்க வைத்துக்கொள்ளும் கட்டுமானத்தையும் எல்லா நாடுகளும் பெற்றிருக்கவில்லை.

அதேசமயம், இந்தியா போன்ற நாடுகளில் வலுவான அரசியலமைப்பு இருந்தும், சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய சிபிஐ, நீதித்துறை போன்ற அனைத்துத் தன்னாட்சி அமைப்புகளும் (Autonomous Body) நீர்த்துப்போகச் செய்யப்பட்டிருக்கும் நிலையில் பலவீனமடைந்திருக்கிறது ஜனநாயகம். கடந்த ஆண்டு போராட்டங்களின் ஆண்டு எனச் சொல்லும் அளவுக்கு உலக நாடுகளில் எல்லாம் உரிமை வேண்டி மக்கள் மாபெரும் போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால், இந்த ஆண்டு இந்தியா உட்பட உலகம் முழுக்கவே மக்களின் இயக்கம் தடைப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு
மத்திய அரசு

இந்நிலையில், கோவிட்-19 எனப் பெயரிடப்பட்ட கொரோனா வைரஸ், உலக அளவில் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பாதிப்புகளில், அரசியல் மாற்றங்களும் பாதிப்புகளும் முக்கிய இடம் பெறுகின்றன. உலகின் மொத்த கவனமும் ஓரிடத்தில் குவிந்திருக்க, உலக நாடுகள் கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமின்றி, எதிர்ப்புகளின்றி சாதாரண சமயங்களில் சாத்தியப்படாத அரசியல் நோக்கங்களை எல்லாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சக்திவாய்ந்த பெரும் நாடுகள் சர்வதேச அளவிலும், சிறிய நாடுகள் உள்நாட்டு அளவிலும் பல தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் கவனிப்பதற்காகவே இந்தக் கட்டுரை...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொலிவியா நாட்டில் மிகப்பெரும் ஜனநாயக ஆயுதமான தேர்தல் செயலற்றுப் போயிருக்கின்றது. அங்கு தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பல நாள்களுக்கு அங்கு முந்தைய ஆட்சியே தொடரும். அதேசமயம், கினியா நாட்டில், கொரோனா காரணமாக எதிர்க்கட்சியினர் தேர்தல் பிரசாரங்களைச் செய்ய முடியாத நிலையிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. சில யூரேசியா (Eurasia) நாடுகள் வெளிப்படையாகவே எதிர்க்கட்சியினரைச் செயலிழக்கச் செய்யப்போவதாக மிரட்டல் விடுகின்றன.

டோகோ, செர்பியா, ஹங்கேரி உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் நாடாளுமன்றங்களைக் கலைத்துவிட்டன. முழு அதிகாரமும் அந்நாட்டுப் பிரதமர்கள், அதிபர்கள் வசம் இருக்கின்றது. இனி ஒரு சட்டத்தை இந்தத் தலைவர்களின் ஒற்றை கையெழுத்தில் அமலுக்குக் கொண்டு வரலாம் எனும்படி, முழு சர்வாதிகாரத்துக்கு இந்நாடுகள் மாறியிருக்கின்றன. இந்தத் தலைவர்கள் மீது ஊழல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த முடிவு அந்த நாடுகளின் மக்களுக்கு பெரும் ஆபத்தாகவே இருக்கும் எனப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதுமட்டுமல்ல பாரபட்சமின்றி உலக நாடுகள் அனைத்தும் மக்கள் மீதான தங்களின் கண்காணிப்பை வெகுவாக அதிகரித்து இருக்கின்றன. பிரைவசி என்ற வார்த்தை உலகளவில் இன்று அர்த்தமற்றதாகி வருகின்றது. வலுவான ஜனநாயகங்கள் இதைத் தற்காலிகமாகச் செய்யக்கூடும். ஆனால் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிரந்தரமாகவே இனி மக்களைத் தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கும் அபாயம் உள்ளது. ஜோர்டான், ஓமன், ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பத்திரிகைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

ஜோர்டான், லிபியா, ஜிம்பாப்வே, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் தவறான தகவல் பரப்புபவர்களுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் இது சரிதான், ஆனால், இங்கெல்லாம் அரசுக்கு எதிரான அத்துணை விமர்சனங்களும் தவறான செய்திகளாக வரையறுக்கப் படுவதில்தான் பிரச்னை தொடங்குகிறது. தாய்லாந்தில் ஒருவர், தனக்கு விமான நிலையத்தில் எவ்வித சோதனையும் செய்யவில்லை என்று சொன்னதற்காகக் கைது செய்யப் பட்டிருக்கிறார். அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. "இன்றைய நிலையில், சுதந்திரத்தைவிட உயிர்காப்பதே முக்கியம்" எனப் பேட்டியளித்துக் கொண்டிருக்கிறார் தாய்லாந்து பிரதமர். இந்தியாவில் இந்தத் தொற்றுநோய் பரவலை வைத்து சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் ஊக்குவிக்கப்படுவதாகப் பரபரப்பு சர்ச்சைகள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கொரோனா காலத்தில், நிலப்பரப்பு, கடல் பரப்பு என இரண்டிலும் தன் அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்றிருக்கிறது சீனா. அதன்படி, இரண்டு கவனிக்கத்தக்க முக்கிய சர்வதேச அரசியல் காய் நகர்தல்களைச் செய்திருக்கிறது. ஒன்று, தெற்கு சீன கடலின் சர்ச்சைக்குரிய கடல் பகுதிகளைச் சீனாவின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியாகக் கருதி அப்பகுதிகளை நிர்வகிக்க புதிய அதிகார மையங்களை உருவாக்கியிருக்கிறது. மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தைவான், புரூனே, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாட வசதியாகக் கடல் வழிகளில் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருப்பது ஒரு சில கடல் பகுதிகளே. அங்குதான் இப்போது சீனா தன் பிடியை இறுக்குகிறது. இம்மாதம் இப்பகுதியில், ஒரு வியட்னாமீஸ் மீன்பிடிக் கப்பலைத் தாக்கியிருக்கும் சீனாவின் இந்த நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுக் கண்டித்திருக்கிறார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ.

சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங்

இரண்டு, ஹாங்காங் பகுதியைத் தன் எதேச்சதிகார வலைக்குள் சிக்கவைக்க முயல்கிறது சீனா. கடந்த ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்கச் செய்து பெரும் போராட்டங்கள் ஹாங்காங்கில் நடந்ததெல்லாம் நாம் அறிந்ததே. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சில கட்டுப்பாடுகளுடன் இயங்கிய ஹாங்காங், இந்த வைரஸ் தாக்குதலை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கிறது. ஆனால், அவர்களின் கவனமெல்லாம் கோவிட்-19 மீதிருக்க, சத்தமின்றி சில முக்கிய தலைவர்களைக் கைது செய்திருக்கிறது அரசு.

அதுமட்டுமன்றி, சீனா தன்னுடைய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என வரையறுக்கும் ஹாங்காங் நாட்டின் அடிப்படை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்திருக்கிறது. ஏப்ரல் 17-ம் தேதி ஹாங்காங்கில் இருக்கும் சீன தூதரகம், இந்தச் சட்டத்தின் வரையறைக்குள் இந்த அலுவலகம் உட்பட்டது என அறிவித்திருக்கிறது. இதன்படி நேரடியாகத் தன்னுடைய அதிகார பலத்தை ஹாங்காங் மீது செலுத்த சீனா தயாராகி வருவதாகவே தெரிகிறது.

அமெரிக்காவில் உள்நாட்டுப் பிரச்னைகள் ஒருபுறம் இருக்க, சர்வதேச அரசியலிலும் தன் முடிவுகளால் பெரும் விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது அந்நாடு. இரான், கியூபா உள்ளிட்ட அமெரிக்காவின் எதிரி நாடுகள், அமெரிக்கா விதித்திருக்கும் சர்வதேச பொருளாதாரத் தடையால் பெரும் சிக்கலில் இருக்கின்றன. இந்தப் பெருந்தொற்றை சமாளிக்க மருந்துகள் பெறுவதில்கூட இந்த நாடுகள் சிரமப்படுகின்றன. இரானில் இதன் காரணமாகவே உயிரிழப்புகள் மிக அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இதுமட்டுமல்ல, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று சில அமெரிக்கா அரசியல் ஆலோசனை குழுக்கள் வெளிப்படையாகவே கருத்துக்களை வெளியிடுகின்றன. அமெரிக்கா தன் போர்க் கப்பல்களைத் தென் சீன கடல் உட்பட உலக கடற்பரப்பில் உலவவிட்டு தன் சக்தியை உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றம்
அமெரிக்க நாடாளுமன்றம்

பிஜி நாட்டில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டவர்களைவிட கொரோனா வைரஸ் பயத்தால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில்கூட யாரை வேண்டுமானாலும் கைது செய்யும் அதிகாரம் போலீஸாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கம்போடியாவின் எமெர்ஜென்சி சட்டம், சொத்துக்கள் பறிமுதல், தகவல் பரிமாற்ற தடை, அடிப்படை உரிமைகள், சுதந்திரங்களுக்குத் தடை, ராணுவ ஆட்சி நிறுவுதல் உள்ளிட்ட எந்த முடிவையும் எடுக்க அரசுக்கு அங்கீகாரம் வழங்குகிறது. எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இந்தத் தடைகளை அரசால் சட்டபூர்வமாக நீட்டிக்க முடியும் என்பதே அச்சப்படுவதற்கான விஷயம்.

எல் சால்வடார் எனும் நாட்டில், கைது செய்தவர்களை முறையாகத் தங்க வைக்க வேண்டும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. ஆனால், அந்நாட்டு அதிபர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வெளிப்படையாக நிராகரித்து அவமதித்திருக்கிறார். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மொத்த அதிகாரத்தையும் ராணுவத்திடம் ஒப்படைத்துள்ளன.

Be (கொரோனா) Negative!
Be (கொரோனா) Negative!

இந்தப் பெருந்தொற்று, உலகை முழுவதுமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. உலகில் சுமார் 80 நாடுகள் அவசர நிலைப் பிரகடனம் செய்திருக்கின்றன. சில நாடுகள் இவற்றைத் தற்காலிக மாற்றமாகக் கையாளும், ஆனால், அதிகார ஆசையில் மட்டும் செயல்படும் பல நாடுகளுக்கு இந்த ஆபத்து பெரும் வாய்ப்பாக அமைந்திருக்கின்றது என்பதே உண்மை. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தாமல், அடக்குமுறை செய்யும் தலைவர்கள் ஒருபுறம் தங்கள் பிடியை இறுக்கினாலும், மக்கள் மத்தியில் மிக வேகமாக நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். மக்கள் பயந்திருக்கிறார்கள், பாதுகாப்பு வேண்டி அடக்குமுறைகளைப் பொறுத்துக் கொள்கிறார்கள், தாங்கள் தேர்ந்தெடுத்த தலைவர்கள் தங்களை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என எதிர்பார்த்து இருக்கிறார்கள். இவற்றைச் செய்யாத தலைவர்கள் தங்களின் தவறுகளுக்கு பெரும் விலையைத் தர நேரிடும் என்பது மட்டும் உறுதி.