Published:Updated:

இலங்கையில் சீனாவின் தீவு... இந்தியாவுக்கு பேராபத்து! - பகீர் கிளப்பும் சண் மாஸ்டர்!

சீனாவின் தீவு
பிரீமியம் ஸ்டோரி
சீனாவின் தீவு

தற்போது இலங்கையில் தனித்தீவையே சீனா உருவாக்கி இலங்கையின் இறையாண்மையையும், இந்தியாவின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாகியிருக்கிறது

இலங்கையில் சீனாவின் தீவு... இந்தியாவுக்கு பேராபத்து! - பகீர் கிளப்பும் சண் மாஸ்டர்!

தற்போது இலங்கையில் தனித்தீவையே சீனா உருவாக்கி இலங்கையின் இறையாண்மையையும், இந்தியாவின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாகியிருக்கிறது

Published:Updated:
சீனாவின் தீவு
பிரீமியம் ஸ்டோரி
சீனாவின் தீவு
“இலங்கை தலைநகர் கொழும்பில் கட்டப்பட்டுவரும் துறைமுக நகரத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்’’ என்று தொடர்ந்து எச்சரிக்கைக் குரல் எழுப்பிவருகிறார், இறுதி யுத்தத்தின்போது ஈழத்திலிருந்து தமிழகத்தில் தஞ்சமடைந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர். அவரிடம், இலங்கையில் சீனாவின் தனித்தீவு, `ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸ் சர்ச்சை, புதிதாக அமைந்துள்ள தமிழக அரசிடம் ஈழத் தமிழர்களின் எதிர்பார்ப்புகள்... இவை பற்றியெல்லாம் கேள்விகளை எழுப்பினோம்.
சண் மாஸ்டர்
சண் மாஸ்டர்

“இலங்கைத் தலைநகர் கொழும்புவில், அச்சமூட்டும் வகையில் சீனத்துறைமுக நகரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகப் பரபரப்பு கிளம்பியிருக்கிறதே?”

“கொரோனாவால் உலகமே மூச்சுவிட முடியாத சூழலில் இருக்கும்போது, சீனா சத்தமின்றி இலங்கையில் தனக்கான தனித்தீவை உருவாக்கியுள்ளது. மே 20-ம் தேதி, துறைமுக நகரத்துக்கான ‘பொருளாதார ஆணைய சட்ட மூலம்’ இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 4,500 ஏக்கர் கடற்கரைப் பகுதி இதற்கென்று தயார் செய்யப்பட்டு, முழு அதிகாரத் துடன் சீனாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் சிங்களக் காவல் துறையும் கடற்படையும் இருக்க முடியாது. தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்குப் பகுதியில் சிங்கள ராணுவத்தைக் குவித்துவைத்திருக்கும் அதேவேளையில், தன் தலைநகரத் திலேயே, இனி தனது கடற்படையை நிறுத்த முடியாத நிலை இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை, கொழும்பு, கொழும்பு துறைமுக நகரம் என இலங்கைத் தீவெங்கும் சீனா கால் பரப்பிக்கொண்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் பலமாக இருந்தபோது சீனாவால் இலங்கையில் காலூன்ற முடியவில்லை. ஆனால், தற்போது இலங்கையில் தனித்தீவையே சீனா உருவாக்கி இலங்கையின் இறையாண்மையையும், இந்தியாவின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாகியிருக்கிறது.’’

இலங்கையில் சீனாவின் தீவு... இந்தியாவுக்கு பேராபத்து! - பகீர் கிளப்பும் சண் மாஸ்டர்!

“இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?’’

“திரிகோணமலை உள்ளிட்ட இலங்கையின் துறைமுகங்களை, இந்தியாவின் நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் எந்த ஒரு நாட்டின் ராணுவ வசதிக்காகவும் அளிக்கக் கூடாது என்பது இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இலங்கை அரசு அதை அப்பட்டமாக மீறியுள்ளது. இந்தியாவின் காலடியிலிருக்கும் இலங்கை, சீனாவின் வெடிகுண்டுக் கிடங்காக மாற்றப்பட்டுவருகிறது. இந்தியாவை நோக்கி அது நிச்சயம் ஒருநாள் வெடிக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது முன்வரிசையில் நின்றுகொண்டிருப்பது தமிழகம்தான் என்பதை மறந்துவிட வேண்டாம்.’’

இலங்கையில் சீனாவின் தீவு... இந்தியாவுக்கு பேராபத்து! - பகீர் கிளப்பும் சண் மாஸ்டர்!

“புதிதாக அமைந்துள்ள தமிழக அரசிடம் தங்களுடைய எதிர்பார்ப்புகள் என்னென்ன?’’

“ஈழத் தமிழர்களுக்கான நீதி, விடுதலை குறித்து தமிழக சட்டப் பேரவையில் நிறை வேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் செயலாக்கம் பெற வேண்டும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜபக்சே சகோதரர்களை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும். இந்திய அரசிடம் அதை வலியுறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகான 12 ஆண்டுகளில் தமிழர் பகுதிகளில் நிலப்பறிப்பு, சிங்களக் குடியேற்றம், ராணுவக் குவிப்பு, புத்த விகாரைகளை நிறுவுதல் என மெல்ல மெல்ல தமிழினம் அழிக்கப்பட்டுவருகிறது. இன்னும் பத்தாண்டுகளில் தமிழினம் அங்கு வாழ்ந்ததற்கான தடயமே இல்லாமல் போய்விடும் அபாயம் தலைதூக்கியிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். தமிழக அரசு, இந்தியாவின் அரசமைப்புக்குட்பட்ட அளவில் எமக்கான பன்னாட்டு ஆதரவைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்ற முடியும். அது குறித்து பரிசீலித்து, ஈழத்தமிழர் நலன் காக்கும் திட்டமிடலுடன் செயல்பட தமிழக அரசு முன்வர வேண்டும். அரபு நாடுகள் யாவும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நின்று போர் நிறுத்தம் கொண்டு வருவதில் வெற்றி கண்டுள்ளன. அதேபோல ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு நின்றால், இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டையும் வழிக்குக் கொண்டு வர முடியும்.’’

“ `ஃபேமிலி மேன்’ வெப் சீரீஸ் மீது எழுந்திருக்கும் சர்ச்சை பற்றி?’’

“இந்தத் தொடர், விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகளாகச் சித்திரித்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றம் மற்றும் அதன் கட்டுக்கோப்பு குறித்து இலங்கை ராணுவத் தளபதிகளே வியந்து பெருமையாகக் கூறிய வரலாறுகள் ஏராளம். எமது மண், மக்கள், போராளிகளின் வாழ்விலும் சாவிலும் ஆயிரமாயிரம் கதைகள் உண்டு. அவை கலைப் படைப்பாகும்போது மனிதகுல நாகரிக வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக அமையும். யூத இன அழிப்பு, இரானிய மக்களின் வாழ்க்கை ஆகியவை பற்றிய உன்னதமான படைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்தியப் படைப்பாளிகள் சிலர், ஆக்கிரமிப்பாளர்களின் கண்ணாடிகளின் வழியாக எங்களைப் பார்க்கிறார்கள். அவர்களின் சிந்தனை வறட்சியால் ஊடகச் செய்திகளில் கதையைத் தேடுகிறார்கள். ஐயனாரிடம் அரிவாள் இருக்கிறதென்பதால் அவரை இவர்கள் பயங்கரவாதி என்று சொல்லக்கூடும். ஆனால், எங்களுக்கு அவர் காக்கும் தெய்வம்தான். அதுபோல், விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை ராணுவம், காவல் அரண். ஈழத்தமிழர்கள் நீதிக்கான போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகச் சித்திரிக்கும் உள்நோக்குடன் வெளிவரும் இத்தகைய படைப்புகளை தமிழர்கள் புறக்கணிப்பார்கள் என்று நம்புகிறேன்.’’