Published:Updated:

`புவி வெப்பமயமாதல் பற்றிக் கேட்க எனக்கு நேரமில்லை!’ - கிரேட்டாவைக் கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்

ட்ரம்ப் - கிரேட்டா
ட்ரம்ப் - கிரேட்டா ( AP )

உலகமே அழிவின் விளிம்பில் உள்ளதாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறும் வார்த்தைகளைக் கேட்க தனக்கு நேரமில்லையென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் டாவோஸ் 2020 உலக பொருளாதார மன்றத்தின் ஐம்பதாவது கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், ``நம் வீடு (புவி) இன்னும் எரிந்துகொண்டுதான் உள்ளது. நாங்கள் சுற்றுச்சூழலைக் காக்கப் போராடி வருகிறோம். ஆனால், இதுவரை அதற்குத் தேவையான எந்த நடவடிக்கையும் உலக நாடுகள் செய்ததாகத் தெரியவில்லை. நாம் பெரிய பிரச்னையை எதிர்கொள்ளவுள்ளோம்.

கிரேட்டா
கிரேட்டா
AP

பருவநிலை மாற்றத்தை ஒரு முக்கியப் பிரச்னையாக நாம் கருதாதவரை இதற்கு எந்த ஒரு முடிவும் கிடைக்கப்போவதில்லை. இப்போது பருவநிலையும் சுற்றுச்சூழலுமே உலகின் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. மரங்கள் நட்டால் மட்டும் சுற்றுச்சூழல் பாதிப்பு சரியாகாது. அதற்காக நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும். உலகத் தலைவர்கள், சுற்றுச்சூழலைக் காக்க நடவடிக்கை எடுப்பதாக வெற்று வார்த்தைகளையும் பொய்யான சத்தியங்களையும் மட்டுமே செய்து வருகின்றனர். இதுபற்றி குழந்தைகள் கவலைப்படவேண்டாம் எனக் கூறுகிறார்கள். ஆனால், இன்று சுற்றுச்சூழல் தொடர்பான இளைஞர்களின் குரல் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது” என்று பேசியிருந்தார்.

`உங்களை நம்பமாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’ -  ஐ.நா-வில் கர்ஜித்த சிறுமி கிரேட்டா தன்பெர்க்

இந்த நிலையில், நேற்று அதே டாவோஸ் 2020 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரேட்டா தன்பெர்க்கையும் அவரது கருத்துகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார். ட்ரம்ப் பேசுவதைக் கேட்பதற்காக மக்கள் கூட்டத்தின் நடுவில் கிரேட்டா அமர்ந்திருந்தார், அப்போதே அவரை கடுமையாகச் சாடியுள்ளார் ட்ரம்ப்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ``அழிவின் வற்றாத தீர்க்கதரிசிகள் கூறும் பேரழிவு பற்றிய கணிப்புகளை நாம் நிராகரிக்க வேண்டும். மக்கள் தொகையால் நெருக்கடி ஏற்படும், வெகுஜன மக்கள் பட்டினியால் வாடுவார்கள்; விரைவில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் எனப் பல அறிவியலாளர்கள் எச்சரித்தனர். ஆனால், அவர்களின் கணிப்பு அனைத்தும் முற்றிலும் தவறாகவே இருந்தது. நம் வீடு எரிந்துகொண்டிருப்பதாக கிரேட்டா தன்பெர்க் கூறும் எச்சரிக்கையைக் கேட்க எனக்கு நேரமில்லை. அளவுக்கு அதிகமான புவி வெப்ப மயமாதல் மற்றும் பிற சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துப் பேசுபவர்கள் நேற்றைய முட்டாள்களின் வாரிசுகளாகவே இருக்க முடியும்” எனப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு