Published:Updated:

`சீன ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் உருவானதற்கு ஆதாரம் உள்ளது!’ - ட்ரம்ப் அதிரடி

சீனாவின் வுகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் உருவானதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`கொரோனா’ மனித குலத்தை நடுங்கவைத்துள்ள இந்த வைரஸால் சர்வதேச அளவில் 33 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு 2,34,000 -க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவிவிட்டது. மனிதனின் இயல்பு வாழ்க்கை தொடங்கி ஒரு நாட்டின் பொருளாதாரம் வரை என அனைத்துக்கும் கேடு விளைவித்துவருகிறது இந்தக் கொடூர கொரோனா.

சீனா
சீனா
AP

கடந்த நான்கு மாதங்களாக இந்த வைரஸிலிருந்து மீண்டு வர உலக நாடுகள் தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன. அதேபோல் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் மருந்து கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில், கொரோனா வைரஸ் எங்கிருந்து உருவானது என்ற சர்ச்சையும் அவ்வப்போது தலைதூக்கி, சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக சீனா, அமெரிக்காவுக்கு இடையே வார்த்தைப் போரை உருவாக்குகிறது.

சீனாவின் ஹூபே மாகாண தலைநகர் வுகானில் உள்ள ஒரு இறைச்சி சந்தையிலிருந்துதான் கொரோனா வைரஸ் தோன்றியதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆரம்பக்கட்டத்தில் கொரோனாவை `சீன வைரஸ்’ என்றே அழைத்து வந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது பெரும் சர்ச்சையானது. பலரும் ட்ரம்பின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் சீனாவோ, வைரஸை அமெரிக்க ராணுவத்தினர்தான் வுகானில் பரப்பியதாகக் குற்றம் சுமத்தியது. இதற்கு அமெரிக்கா முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்து மறுத்தது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்பே மற்றுமொரு பெரும் சர்ச்சை வெடித்தது. அதாவது வுகானின் இறைச்சி சந்தையிலிருந்து கொரோனா வெளியாகவில்லை மாறாக இறைச்சி சந்தையிலிருந்து சில கி.மீ அருகில் இருக்கும் ஒரு வைரஸ் ஆய்வகத்திலிருந்துதான் வெளியானது என ஐரோப்பிய நாடுகள் குற்றம் சுமத்தின. ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு வந்த கொரோனா வைரஸ் தெரியாமல் அங்கு பணியாற்றியவரிடம் தொற்றிருக்கலாம் அவர் இறைச்சி சந்தைக்குச் சென்றபோது அங்கிருந்து பிறருக்குப் பரவியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. உலக நாடுகளின் இந்தக் கருத்துக்கு சீனா பெரிதாக எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை.

`கொரோனா நேரத்தில் எங்கள் கவனம் சிதறும்!’ - சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் சீனா

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து இந்த ஆய்வக சர்ச்சை தொடர்பாக சர்வதேச தனி நபர் விசாரணை நடத்த வேண்டும் என்ற பேச்சு கிளம்பியது. ஆனால் இதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்த சீனா, `நாங்கள் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த நேரத்தில் விசாரணை நடத்தினால் எங்கள் கவனம் சிதறும். நடந்தது அனைவருக்கும் தெரியும். எனவே, விசாரணை தேவையில்லை’ எனக் கூறிவிட்டது. இருந்தும் விடாத அமெரிக்கா, தங்கள் அதிகாரிகளை சீனாவுக்கு அனுப்பி ஆய்வு செய்யச் சொல்லியுள்ளது, ஆனால், சீனாவோ அதிகாரிகளுக்கு அனுமதி தர மறுத்துவிட்டது.

ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்
ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்
AP

இப்படி வைரஸ் உருவாக்கத்தில் அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி பனிப்போர் நடத்தி வரும் இந்த வேளையில் தற்போது மீண்டும் வுகான் ஆய்வகம் பற்றி பேசியுள்ளார் அதிபர் ட்ரம்ப். கொரோனா தொடர்பாக வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், `சீனாவின் வுகான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலாஜி ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா பரவியது என்பதை நான் நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். உடனடியாக அங்கிருந்த செய்தியாளர்கள் `உங்கள் நம்பிக்கைக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?” எனக் கேட்டனர்.

`வைரஸ் எங்களிடமிருந்து பரவ வாய்ப்பே இல்லை..!' -வீடியோ மூலம் விளக்கம் கொடுத்த வுஹான் ஆய்வகம்

அதற்கு ட்ரம்ப்,``ஆமாம், ஆமாம் என்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளது. ஆனால் அதை உங்களிடம் சொல்ல முடியாது. அதை உங்களிடம் கூற எனக்கு அனுமதி இல்லை’’ என்று பதில் தெரிவித்தார். பின்னர் தொடர்ந்த ட்ரம்ப் , ``சீனாவால் கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்குப் பரவுவதை இனி அனுமதிக்க முடியாது’’ எனக் கூற அதற்குப் பத்திரிகையாளர்கள், ``கொரோனா பற்றி சீனா தவறான தகவல் கொடுத்துள்ளதாக நீங்கள் கூறுவதற்குச் சீன அதிபரை பொறுப்பேற்கக் கூறுவீர்களா?’’ எனக் கேட்டனர். அதற்குப் பதில் அளிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இறுதியாக,``வைரஸ் எங்கிருந்து வெளியானது என்பது தொடர்பான விவரங்களைக் கூற, சீனா எங்களிடம் ஓரளவுக்கு வெளிப்படையாக இருக்க முயல்வதாகத் தெரிகிறது, ஆனால் அதன் உண்மையை விரைவில் கண்டுபிடிப்போம். உண்மை வெளியில் வர வெகு தொலைவு இல்லை. தற்போது நடந்துகொண்டிருப்பது மிகவும் பயங்கரமான விஷயம். அவர்கள் (சீனா) தவறு செய்தார்களா அல்லது பிழையால் நடந்ததா இல்லை வேறு யாராவது வேண்டுமென்றே செய்தார்களா என்பதை நாங்கள் கண்டுபிடிப்போம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு