Election bannerElection banner
Published:Updated:

மார்ட்டின் லூதர் கிங்: `நான் ஒரு கனவு காண்கிறேன்’ - உலகை உலுக்கிய உரை

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம், மூன்றவாது திங்கட்கிழமை மார்ட்டின் லூதர் கிங் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடமும் அமெரிக்காவில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தச் சூழலில் மார்ட்டின் லூதர் கிங்-ன் புகழ்பெற்ற உரையை இங்கே பகிர்கிறோம்.

1963-லிங்கன் சதுக்கம்… ஓர் உரை… ஒட்டுமொத்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ரத்தத்தில் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் பாய்ச்சியது. தங்கள் உரிமைக்காக அறவழியில் போராடத் தூண்டியது. தங்கள் விடுதலைக்காகக் கனவு காணச் சொன்னது. அமெரிக்காவில் நடந்த இனப்போராட்டத்தின் முடிவைத் தொடங்கிவைத்ததில் அந்த உரைக்கும், அந்த உரையை ஆற்றிய மனிதருக்கும் மிகப்பெரிய பங்குண்டு. தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், அதைத் தேடிச் சென்று தனது போராட்டத்தில் வெற்றி கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதர் மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த தினம் இன்று.

மார்ட்டின் லூதர் கிங்
மார்ட்டின் லூதர் கிங்

ஆபிரஹாம் லிங்கனுக்குப் பிறகு அடிமைகைளாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவரின் விடிவெள்ளியாக, நம்பிக்கை நாயகனாகத் திகழ்ந்தவர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் (ஜனவரி 15,1929–ஏப்ரல் 4,1968). அவரிடமிருந்து வெளிப்பட்டவையெல்லாம் வெறும் சொற்கள் அல்ல. அவை பிரம்மாஸ்திரத்தை ஏவும் வில்கள். உரையும் குளிரில் ரத்தத்தைக் கொதிக்கவைக்கும் தீப்பிழம்புகள் அவை. ஆனால், அமைதியை மட்டுமே வலியுறித்தியவை. இன்றும் உலக வரலாற்றின் தலைசிறந்த பேச்சுகளில் அவர் பேசிய `ஐ ஹேவ் எ டிரீம்’ (நான் ஒரு கனவு காண்கிறேன்) உரை தலையாயதாகக் கருதுப்படுகிறது. ஒவ்வோர் ஆப்பிரிக்க அமெரிக்கரையும் தனது சுதந்திரத்துக்காகப் போராடவைத்த அந்த உரையின் சாராம்சம் இங்கே…

`நான் ஒரு கனவு காண்கிறேன்...' அடிமைப்பட்டுக்கிடந்த ஆப்பிரிக்க அமெரிக்க மக்களுக்கும் தங்கள் வாழ்வு குறித்த கனவு இருக்கிறது என்ற மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் புகழ்பெற்ற உரையை யாரால்தான் மறக்க இயலும்?

`நான் ஒரு கனவு காண்கிறேன்...'

ஆப்பிரிக்கர்களின் சிவில் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிய மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ஆகஸ்ட் 1963-ல் திரண்டிருந்த ஆப்ரிக்க அமெரிக்க மக்களின் முன்னால் `ஐ ஹேவ் எ டிரீம்' என்ற உலகப் புகழ்பெற்ற உரையை வாஷிங்டனில் நிகழ்த்தினார்.

``100 ஆண்டுகள் ஆன பிறாகும்ம் நாம் இங்கு அடிமையாகவே இருக்கிறோம். நியாயம் என்னும் கஜானா இங்கு காலியாக இருக்கிறது. நமக்கு இங்கு சமத்துவம் கிடைக்காமல் ஓயப்போவதுமில்லை; அமைதியடையப் போவதுமில்லை. இந்தப் போராட்டம் தீவிரவாதமாக மாறப்போவதில்லை. இந்தப் போராட்டம் வெறும் தொடக்கம்தான். ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறைகள் அடங்கும் வரை, போராடிச் சளைத்த நமது தேகம் ஓய்வெடுக்க நகரத்தின் ஹோட்டல்களில் இடம் கிடைக்கும் வரை, மிசிசிப்பியின் மூலையில் இருக்கும் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கருக்கு ஓட்டுப்போடும் உரிமை கிடைக்கும் வரை நாம் திருப்தி அடையப்போவதில்லை” என்றார் மார்ட்டின். அவருடைய பேச்சின் ஒவ்வொரு வரிக்கும் இடையே எழுந்த கரகோஷமும் ஆரவாரமுமே அந்த வார்த்தைகளின் பலத்தை எடுத்துக்காட்டின. இவரது பேச்சு ஆப்பிரிக்க அமெரிக்கர்களை மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான வெள்ளையர்களையும் ஈர்த்தது.

மார்ட்டின் லூதர் கிங்
மார்ட்டின் லூதர் கிங்

குணத்தால்… நிறத்தால் அல்ல!

``இன்றும், இந்த அமெரிக்க மண்ணில் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் அடிமைச் சங்கிலியில் சிக்கி, தொடர்ந்து பிரிவினைக்கும் சுரண்டலுக்கும் ஆளாகிவருகிறார்கள். என் நண்பர்களே, இன்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். இன்றும் நாளையும் நாம் துன்பங்களை எதிர்கொண்டாலும், ஒருநாள் இந்தத் தேசம் உயர்ந்து எழும். மக்கள் உயிரோட்டத்துடன் வெளியே வருவார்கள். எல்லா மனிதர்களும் சமமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நான் ஒரு கனவு காண்கிறேன்... ஒருநாள் ஜார்ஜியாவின் செம்மலையில், அடிமைகளின் வாரிசுகளும், அடிமை முதலாளிகளின் வாரிசுகளும் சகோதரத்துவ மேடையில் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள். ஒருநாள் மிசிசிபியின் நிலை, அநீதியின் வெம்மையும், அடக்குமுறையின் வெம்மையும் இல்லாத சுதந்திரமும் நீதியும் நிறைந்த பாலைவனச் சோலையாக உருமாறும்.

நான் ஒரு கனவு காண்கிறேன்... அது என் நான்கு குழந்தைகளும் வசிக்கும் தேசத்தில், அவர்கள் தோலின் நிறத்தால் பேதப்படுத்தப்பட மாட்டார்கள். பதிலாக, அவர்களின் குணத்தால் மதிப்பிடப்படுவார்கள். இன்று அலபாமாவில் நிற பேதத்தால் வஞ்சிக்கப்படுபவர்கள், ஒருநாள் அதே அலபாமாவில் வெள்ளை இனப் பையன்களுடனும், பெண் குழந்தைகளுடனும் சகோதர- சகோதரிகளாகக் கைகோப்பார்கள்.

இன்று நான் ஒரு கனவு காண்கிறேன்... ஒருநாள் இந்தச் சமவெளி உயர்த்தப்படும்; மலைகளும் குன்றுகளும் சமப்படுத்தப்படும்; கடினமான இடங்கள் சமமாக்கப்படும்; குறுகலான பாதைகள் நேராக்கப்படும்; கடவுளின் செல்வாக்கு வெளிப்படுத்தப்படும்; எல்லா மனித உடல்களும் ஒன்றாகவும் சமமாகவும் பார்க்கப்படும். இது என் நம்பிக்கை!"

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு