Published:Updated:

`என்னை வரவேற்க வரும் 5-7 மில்லியன் பேர்; மோடி சொன்னார்!’ -இந்தியப் பயண உற்சாகத்தில் ட்ரம்ப்

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

விமான நிலையத்திலிருந்து அகமதாபாத் மைதானம் வரை என்னை வரவேற்க 5 முதல் 7 மில்லியன் மக்கள் வரவுள்ளதாக மோடி கூறியுள்ளார்

இந்தியப் பிரதமர் மோடி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது `ஹெளடி மோடி' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் உள்ள பல ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அதில் கலந்துகொண்டிருந்தார். இது இந்தியா, அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

அப்போதே அமெரிக்க அதிபரை இந்தியா வரும்படி அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் மோடி, இதை ஏற்று வரும் 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு வரவுள்ளார். இதை அமெரிக்க வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளது. மோடியின் அமெரிக்கப் பயணம் போலவே ட்ரம்பின் இந்திய வருகையும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ட்ரம்பின் இந்தப் பயணத்தின்போது இரு நாட்டு உறவை வலுப்படுத்தல், ராணுவ ஆயுதக் கொள்முதல், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வரும் ட்ரம்ப், அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்க இருக்கிறார். பின்னர் அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசவுள்ளார். இவருடன் மனைவி மெலானியாவும் இந்தியா வர உள்ளார்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

இந்தியப் பயணம் பற்றி வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள ட்ரம்ப், ``இந்தியப் பிரதமர் மோடி மிகவும் சிறந்த மனிதர். இந்த மாத இறுதியில் என் முதல் இந்தியப் பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறேன். இந்தப் பயணத்தின்போது இந்தியாவுடன் பல வர்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமாகலாம். இந்தியர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்புகிறார்கள். அனைத்தும் நல்லபடியாக முடிந்தால் சரியான ஒப்பந்தம் முடிவாகும்.

`சுயநலவாதி' ட்ரம்ப்; `இந்து தேசிய அரசு' மோடி!’ - அமெரிக்க பில்லியனர் விமர்சனம்

நான் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். அப்போது அவர், `நமக்காகப் பல மில்லியன் கணக்கான மக்கள் வருவார்கள். அன்றைய இரவு நடக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மட்டும் குறைந்தது 40 முதல் 50 ஆயிரம் மக்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறினார். இந்திய மக்களைக் காண நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

விமான நிலையத்திலிருந்து அகமதாபாத் மைதானம் வரை என்னை வரவேற்க 5 முதல் 7 மில்லியன் மக்கள் வரவுள்ளதாக மோடி கூறியுள்ளார். அந்த மைதானம் உலகிலேயே மிகவும் பெரியது. மோடி அதைக் கட்டமைத்து வருகிறார். அதன் கட்டுமானம் முழுமையடைந்துவிட்டதாக என்னிடம் கூறினார்' என்று ட்ரம்ப் பேசியுள்ளார்.

ட்ரம்பின் பயணத்தை உறுதிப்படுத்திய பிரதமர் மோடி, “அதிபர் ட்ரம்பும் அவரது மனைவி மெலானியாவும் வரும் 24, 25 தேதிகளில் இந்தியா வரவுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. எங்கள் மதிப்புமிக்க விருந்தினர்களுக்கு இந்தியா ஒரு மறக்கமுடியாத வரவேற்பை வழங்கும். அதிபரின் இந்தப் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும். மேலும் இது இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்பை மேலும் உறுதிப்படுத்தும்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

``அமெரிக்க அதிபரின் இந்தியப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை புதிய உயரத்துக்குக் கொண்டு செல்லும். இது ட்ரம்ப் மற்றும் மோடிக்கு இடையிலான வலுவான தனிப்பட்ட உறவின் பிரதிபலிப்பாக இருக்கும்” என்று இந்தியாவின் அமெரிக்கத் தூதர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

பின் செல்ல