Published:Updated:

`ஒருவருக்கு ஈடாக 52 இடங்கள் குறிவைக்கப்படும்!’- இரானைக் கடுமையாக எச்சரிக்கும் ட்ரம்ப்

பல ஆண்டுகளுக்கு முன்பு இரான் அமெரிக்காவுக்குச் செய்ததற்கு தற்போது பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அமெரிக்கா, இரான் இடையான போர் பதற்றம் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது அமெரிக்க ராணுவப்படை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் இரான் நாட்டின் ராணுவ தளபதியான காசிம் சுலைமானி மற்றும் இராக்கின் ஹஷித் அல்-ஷாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு அஹ்தி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

காசிம் சுலைமானி
காசிம் சுலைமானி

ராணுவ தளபதி கொல்லப்பட்டதற்குத் தக்க பதிலடி தரப்படும் என இரான் நாட்டு மூத்த தலைவர் எச்சரித்திருந்தார். இதனால் இரு நாடுகளுக்கு இடையில் எந்த நேரத்திலும் போர் நடக்கலாம் எனக் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ராணுவப்படை மீது இரான் படை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்ற போதிலும் இராக்கில் உள்ள அமெரிக்கர்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அவர்கள் மீண்டும் எதிர்த்தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் அதிகரித்துள்ளது.

`நேற்று செய்ததை முன்னரே செய்திருக்க வேண்டும்!’- காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக ட்ரம்ப்

அதே நேரத்தில் `அமெரிக்க வீரர்களுடன் இணைந்து செயல்பட வேண்டாம். அவர்களை விட்டு சில கி.மீ தூரம் விலகிச் செல்லுங்கள்' என்று இரான் ஆதரவு துணை ராணுவப்படையான கதிப் ஹிஸ்புல்லா (Katib Hizbollah) இராக் ராணுவப்படைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் இரானுக்கு இடையேயான போர் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விமான நிலைய தாக்குதல்
விமான நிலைய தாக்குதல்

இந்தத் தாக்குதல் தொடர்பாக ட்வீட் செய்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``ஒரு அமெரிக்கரைக் கொலை செய்த மற்றும் பலரைக் கடுமையாகக் காயப்படுத்திய, இரான் நாட்டின் பயங்கரவாதத் தலைவரை இந்த உலகத்தைவிட்டு அனுப்பியதற்கு, இராக்கில் உள்ள அமெரிக்கச் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி தரப்படும் என இரான் மிகவும் தைரியமாகப் பேசுகிறது. காசிம் ஏற்கெனவே எங்கள் தூதரகத்தைத் தாக்கியுள்ளார், அவர் எங்களின் பிற இடங்களிலும் தாக்குதல் நடத்தி முன்னேற நினைத்தார்.

பல ஆண்டுகளாக இரான் பிரச்னைகளைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு இரான் 52 அமெரிக்கர்களைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்திருந்தது. அதனால் தற்போது இரான், இராக்கில் உள்ள ஒரு அமெரிக்கர் மற்றும் அமெரிக்க சொத்துகள் மீது தாக்குதல் நடத்தினாலும் அதற்கு ஈடாக 52 இரானிய தளங்கள் குறிவைக்கப்படும். எங்களுக்கு அச்சுறுதலாக இருப்பவர்கள் மீது மிக வேகமாகவும் கடினமாகவும் தாக்குதல் நடத்தப்படும். ஆனால், அமெரிக்கா அச்சுறுத்தல்களை விரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் ட்வீட்
ட்ரம்ப் ட்வீட்

1979-ம் ஆண்டின் பிற்பகுதியில் இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வேலை செய்தவர்களை சுமார் ஒரு வருடம் பிணைக் கைதிகளாக வைத்திருந்தது இரான். இதைச் சுட்டிக்காட்டியே ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.