Published:Updated:

`தூக்குக்கு முன் இறந்தால் இப்படிச் செய்யுங்கள்’ - முஷாரப்புக்கு பாக்., நீதிமன்றம் விதித்த தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையின் விவரத்தை வெளியிட்டுள்ளது பெஷாவர் சிறப்பு நீதிமன்றம்.

முஷாரப்
முஷாரப்

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் நீக்க முடியாத ஒரு பெயர் பர்வேஸ் முஷாரப். ராணுவ ஜெனரலாக தன் வாழ்வைத் தொடங்கிய முஷாரப், சீரான முறையில் பயணித்துக்கொண்டிருந்த பாகிஸ்தானை ராணுவ ஆட்சிக்கு மடைமாற்றி சர்வதேச அரங்கை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார். 2001-ம் ஆண்டு அதிரடியாக அரசியலில் நுழைந்து அப்போது அதிபராக இருந்த நவாஸ் ஷெரீஃப்பைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு தன்னை பாகிஸ்தானின் புதிய அதிபராக அறிவித்துக்கொண்டார்.

முஷாரப்
முஷாரப்

பாகிஸ்தானை நீண்ட காலம் ஆட்சி செய்தவர்களில் முஷாரப்பும் ஒருவர். 2007-ம் ஆண்டு தொடக்கத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் முஷாரப்பே வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இது பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனால் அதே ஆண்டு இறுதியில் அந்நாட்டு அரசியலமைப்பை முடக்கி திடீரென அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். இவரது செயலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்ததால் தன் அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேரடியாகத் தேர்தலைச் சந்தித்துத் தோல்வியடைந்தார்.

அரசியலமைப்பை முடக்கியது, தேசத்துரோகம், பெனாசிர் பூட்டோ கொலை விவகாரம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை பல ஆண்டுகளாகப் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெஷாவர் நகர் சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, முஷாரப்பை குற்றவாளி என அறிவித்து அவருக்கு மரண தண்டனை விதித்தது. இது பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெஷாவர் நீதிமன்றம்
பெஷாவர் நீதிமன்றம்

இதற்கிடையில் துபாயில் சிகிச்சை பெற்று வரும் முஷாரப் தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பாகப் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ``என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் அரசியல் பழிவாங்கும் செயல். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது தனது தரப்பில் வாதிட போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனக்கு நிறைய ஆதரவளித்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய்க்கு சல்யூட் அடிக்க மறுத்தது முதல் பெனாசிர் கொலை வரை... முஷாரப்புக்கு ஏன் இந்த நிலை?

இந்நிலையில், முஷாரப்புக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் தண்டனை விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. தேசத்துரோக வழக்கில் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகள் தூக்குத் தண்டனையை ஒருமனதாகவும், அதை நிறைவேற்றுவதில் மாற்றுக் கருத்துகளையும் தெரிவித்துள்ளனர். 167 பக்கங்கள் கொண்ட தண்டனை விவரத்தை பெஷாவர் நீதிமன்றத் தலைமை நீதிபதியும், முஷாரப் வழக்கு அமர்வின் தலைமை நீதிபதியுமான வாக்கர் அகமது செத் வெளியிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத் மத்திய சதுக்கம்
இஸ்லாமாபாத் மத்திய சதுக்கம்

``வெளிநாட்டில் இருக்கும் குற்றவாளியைக் கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து, அவரது கழுத்தில் கயிறு கட்டி அவர் இறக்கும் வரை தூக்கிலிட வேண்டும். ஒருவேளை தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே அவர் இறந்து விட்டால், முஷாரப்பின் உடலை இஸ்லாமாபாத், நாடாளுமன்றத்துக்கு அருகில் இருக்கும் மத்திய சதுக்கத்துக்கு இழுத்து வந்து, மூன்று நாள்கள் உடலைத் தூக்கில் தொடங்கவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

முஷாரப்புக்கு தண்டனை வழங்கிய மூன்று நீதிபதிகளில் ஒருவர், இந்தத் தண்டனையை ஏற்க மறுத்துள்ளார். இது பற்றிப் பேசியுள்ள நீதிபதி கரீம்,``குற்றவாளி இறந்த பிறகும் தூக்கிலிட வேண்டும் என்பது தவறான செயல். இதற்குச் சட்டத்தில் எந்த இடமும் இல்லை. அவ்வாறு செய்தால் இந்த நீதிமன்றத்துக்கு அவப்பெயர் ஏற்படும். குற்றம்சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்தால் போதும் என்பதே என் கருத்து” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முஷாரப்
முஷாரப்

முஷாரப்புக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு அந்நாட்டு ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர் பதவிகளில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனிமனிதரைக் குறிவைத்துத் தாக்குவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தண்டனை விவகாரம் பாகிஸ்தானில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.