சமூகம்
அரசியல்
அலசல்
Published:Updated:

மீண்டும் போராட்டம்... பிரதமராகிறாரா ராஜபக்சே? - இலங்கை அப்டேட்ஸ்!

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
News
இலங்கை

அடுத்த ஜனவரி மாதமே ஆட்சியைக் கலைத்துவிட்டு, தேர்தலை எதிர்கொள்ளும் முடிவிலிருக்கிறார் ரணில்.

புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பிறகும், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களின் ரணம் ஆறவில்லை. முக்கிய வர்த்தக நகரான காலி-யில் மீண்டும் போராட்டக்காரர்கள் குவிந்ததால் பரபரப்பாகியிருக்கிறது இலங்கை!

ராஜபக்சே
ராஜபக்சே

என்ன பிரச்னை?

150 நாள்களுக்கு மேலாக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின் மூலம் ராஜபக்சே சகோதரர்களை வீட்டுக்கு அனுப்பினர் இலங்கை மக்கள். எனினும், புதிதாக அதிபர் பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க, போராட்டக் காரர்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதில் தீவிரம் காட்டுவதாகச் சொல்லப்படுகிறது. இதனால், கடந்த நவம்பர் 2-ம் தேதி காலி முகத்திடலில் சுமார் 2,000 பேர் கூடி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர், “தட்டுப்பாடு குறைந்திருந்தாலும் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி இறங்கவில்லை. 100 ரூபாய் விலையை ஏற்றிவிட்டு, 10 ரூபாயைக் குறைத்து நாடகமாடுகிறார்கள். பொருளாதாரம் படுகுழியில் கிடக்கிறது. புதிய அதிபர் ரணில், மகிந்தாவின் ஆதரவாளர்போலவே செயல்படுகிறார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக்கொண்டு மக்களை அச்சுறுத்துகிறார்கள்’’ என்றனர்.

இதற்கு ரணில் ஆதரவாளர்கள், ``தொடர்ந்து போராடிக்கொண்டேயிருந்தால், சர்வதேச நிதியுதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அதனாலேயே அரசு போராட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதைவைத்து ரணில், மகிந்தாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகச் சொல்வது முட்டாள்தனம்’’ என்கின்றனர்.

மீண்டும் போராட்டம்... பிரதமராகிறாரா ராஜபக்சே? - இலங்கை அப்டேட்ஸ்!

ரணிலுக்கு செக் வைக்கும் மகிந்தா!

``இலங்கை பொதுசன முன்னணிக் கட்சிக்குள் கோத்தபய, பசில் ராஜபக்சே இருவருக்கும் பலம் குறைந்து, முக்கிய நிர்வாகிகள் அனைவரும் மகிந்த பக்கம் சாய்ந்துவிட்டனர். இந்த ஆதரவைப் பயன்படுத்தி, தனது பிறந்தநாளான நவம்பர் 18-ல் மீண்டும் பிரதமராகத் திட்டமிடுகிறார் மகிந்த.

அதேவேளையில், இன்னும் சில நாள்களில் இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார் ரணில். ஆனால், அவரது கட்சியின் ஒரே எம்.பி ரணில்தான் என்பதால் அவருக்கு மகிந்த கட்சியின் எம்.பி-க்கள் ஆதரவு தேவை. இதையே காரணமாக வைத்து, மகிந்த தனக்குப் பிரதமர் பதவி கேட்டு தனது கட்சியினர் மூலம் ரணிலுக்கு செக் வைக்கிறார்.

ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க

இதற்கிடையில், அடுத்த ஜனவரி மாதமே ஆட்சியைக் கலைத்துவிட்டு, தேர்தலை எதிர்கொள்ளும் முடிவிலிருக்கிறார் ரணில். நாடு இருக்கும் நிலைமையில் ஆட்சியைக் கலைப்பது குறித்து, பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், அது பற்றி எந்தக் கவலையுமின்றி, இலங்கை பொதுசன முன்னணிக் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை இப்போதே தொடங்கிவிட்டது” என்கிறார்கள் இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்கள்.

காலி முகத்திடலில் இந்தப் போராட்டம் தொடங்கிய சில மணி நேரத்திலேயே காவல்துறை கெடுபிடி காட்ட... கூட்டம் கலைந்தது. ஆனாலும், மீண்டும் எந்த நேரமும் மக்களின் கோபம் வெடிக்கலாம்!