Published:Updated:

`தவறவிட்டுட்டேன்; சும்மாவிடப் போவதில்லை!'‍- காஷ்மீர் விவகாரத்தில் யு.எஸ்-ஸில் பொங்கிய இம்ரான் கான்

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளைக் குற்றம் சாட்டியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

imran khan
imran khan

ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவைக் குற்றம்சாட்டும் முனைப்பில் பாகிஸ்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஐ.நா-வில் முறையிட உள்ளார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான். இதுதொடர்பாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடமும் முறையிட்டார். ஏற்கெனவே, காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் மோதல்போக்கு நிலவியபோது, தானாக முன்வந்து காஷ்மீர் விவகாரத்தில்தான் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகக் கருத்து தெரிவித்தார் ட்ரம்ப்.

Imran Khan
Imran Khan

இதற்கு இம்ரான் கானும் விருப்பம் தெரிவிக்க, இந்தியாவின் கருத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார். ஆனால், இந்தியா இந்த கோரிக்கையை ஏற்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளைக் குற்றம்சாட்டியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் செயல்பாடுகளால் வருத்தத்தில் உள்ளேன். எங்களால் இந்த விவகாரத்தில் சர்வதேச கவனத்தைக் கொண்டுவர தவறவிட்டுவிட்டோம். எந்த நாடும் மோடிக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால், நாங்கள் இந்த விஷயத்தை சும்மா விடப்போவதில்லை. அவருக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருப்போம்.

Imran khan - Trump
Imran khan - Trump

இந்தியாவின் பொருளாதார பலம் மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் ஆதிக்கம், காஷ்மீர் விவகாரத்தில் அந்நாட்டுக்குச் சாதகமாக மாறியுள்ளது. சர்வதேச நாடுகள் இந்தியாவை 120 கோடி மக்கள் கொண்ட சந்தை நாடாகத்தான் பார்க்கிறார்கள்" என தன் குமுறலை வெளிப்படுத்தினார். இதற்கிடையே, ஐ.நா பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடியும் இம்ரான் கான் இருக்கின்ற நியூயார்க்கில்தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

`பாகிஸ்தானுக்கு பதிலளித்துவிட்டார்!’ - `குளோபல் கோல்கீப்பர்’ மோடியைப் புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்