Published:Updated:

`அவதூறு; இஸ்லாம் வெறுப்பரசியல்!’ - ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இம்ரான் கான் கடிதம்

இம்ரான் கான்
இம்ரான் கான்

`இஸ்லாமிய மதத்துக்கு எதிராக அவதூறு, வெறுப்பை சமூக ஊடகங்கள் மூலம் அதிகமாகப் பரப்பப்படுவதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்’ - மார்க் சக்கர்பெர்க்குக்குக் கடிதம் எழுதிய இம்ரான் கான்.

இஸ்லாமிய மதத்தின் நம்பிக்கைகளைக் கெடுக்கும் வகையில் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் பகிரப்படும் கருத்துகளைத் தடைசெய்யக் கோரி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஃபேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

இமானுவேல் மேக்ரான்
இமானுவேல் மேக்ரான்
CHARLES PLATIAU

பிரான்ஸில் முகமது நபி குறித்த கேலிச் சித்திரத்தை மாணவர்களிடம் காட்டியதாக பேராசிரியர் சாமுவேல் பேட்டி என்பவர் தலை துண்டித்துக் கொலைசெய்யப்பட்டார். இந்த விவகாரத்துக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதேநேரம், இமானுவேல் மேக்ரான், இஸ்லாம் மத நம்பிக்கைகளைப் புண்படுத்தும்விதமாகப் பேசியிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.

இந்தநிலையில், இம்ரான் கான் ஃபேஸ்புக் இணை நிறுவனரான மார்க் சக்கர்பெர்க்குக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ``இஸ்லாமிய மதத்துக்கு எதிராக அவதூறு, வெறுப்பை சமூக ஊடகங்கள் மூலம் அதிகமாகப் பரப்பப்படுவதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இது இளைஞர்கள் மத்தியில் இஸ்லாம் மதம் குறித்த வெறுப்புணர்வைத் தூண்டுவதோடு, தீவிரவாதப் போக்கையும் அதிகரிக்கிறது.

கார்ட்டூன் சர்ச்சை; இமானுவேல் மேக்ரான் Vs இம்ரான் கான்! - பிரான்ஸைப் புறக்கணிக்கும் அரபு  நாடுகள்

தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) ஆகியவற்றின் மூலம் இந்தியா இஸ்லாமியர்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியலைப் பிரசாரம் செய்துவருகிறது. இதற்கு முக்கிய காரணிகளாகச் செயல்படுபவை சமூக வலைதளங்களே. இதனால் உலகில் தீவிரவாதமே அதிகரிக்கும். சமூக வலைள்ங்களில் யூத வெறுப்பு அரசியல், இனப்படுகொலை பரப்பப்பட்டதையடுத்து, அதற்கு ஃபேஸ்புக் தடைவிதித்தது. அதேபோல், இஸ்லாமிய வெறுப்பரசியலைப் பரப்பக்கூடிய கருத்துகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

பிரான்ஸில் இஸ்லாமிய மதத்தைத் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்துகிறார்கள். கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற பெயரால் இஸ்லாமிய மதத்துக்கும், இஸ்லாமியர்களுக்கும் களங்கம் விளைவித்துவருவதால், இது போன்ற கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்வதற்குத் தடைவிதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார் .

இதற்கு இம்ரான் கானுக்கு அனுப்பப்பட்டிருக்கும் பதிலில், `இது போன்று பதியப்படும் கருத்துகள் எங்கள் கவனத்துக்கு வந்தால், அவற்றை அகற்றிவருகிறோம்’ என்றும், மேலும், இது குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு