பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுதான் காரணம் எனக் குற்றம்சாட்டி அவர் மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அதைத் தொடர்ந்து நேற்று நடக்கவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், விரைவில் தேர்தல் நடைபெற வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபர் ஆரிஃப் ஆல்விக்குப் பரிந்துரை செய்தார். அதையேற்ற அதிபரும் நாடாளுமன்றத்தைக் கலைத்தார். மேலும் 90 நாள்களுக்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானில் பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் கான் இடைக்காலப் பிரதமராக நீடிப்பார் என அந்த நாட்டு அதிபர் ஆரிஃப் ஆல்வி தெரிவித்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதை பரிந்துரை செய்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. மேலும் உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
