பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு மீது, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. வருகிற 3-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் இம்ரான் கான் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லையென்றால் அவருடைய ஆட்சி பறிபோக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த வாக்கெடுப்புக்கு முன்னரே இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்துவருகின்றன.

இந்த நிலையில், நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இம்ரான் கான், ``என்னைச் சுற்றி இப்போது நடக்கும் அரசியலுக்குப் பின்னால் சர்வதேச சதி இருக்கிறது. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் இருக்கிறார். அதற்கு ஆதாரமாக என்னிடம் ஒரு கடிதம் உள்ளது.
நமது சுதந்திர நாட்டில், பிரதமருக்கு எதிரான இது போன்ற செய்தி உண்மையில் நமது தேசத்துக்கு எதிரானது" எனக் குறிப்பிட்டார். ஆனால், அந்த ஆவணத்தை அவர் வெளியிடவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த நிலையில், இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. நாங்கள் பாகிஸ்தானின் முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், நாங்கள் பாகிஸ்தானை மதிக்கிறோம், பாகிஸ்தானின் அரசியலமைப்பு செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று இம்ரான் கானின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.