Published:Updated:

#CoronaUpdates `ஒற்றை இலக்க சீனா.. கவலை அளிக்கும் இத்தாலி நிலவரம்..!' -கொரோனா ஸ்டேட்டஸ்

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் ( AP )

நேற்று மட்டும் கொரோனாவால் உலகம் முழுவதிலும் பலியானவர்களின் எண்ணிக்கையைக் கூட்டினால்கூட, இத்தாலியில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கையை முந்த முடியாது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிகப் பெரியது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று, தற்போது 100 -க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்று காரணமாகப் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.

கொரோனா
கொரோனா
Ted S. Warren

இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள், தங்கள் நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது. பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணியாற்ற தங்கள் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளது. டெல்லியில், மார்ச் 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மக்கள், தேவையில்லாமல் ஓரிடத்தில் கூடுவதைத் தவிற்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பல விளையாட்டுப் போட்டிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இந்தியாவில், காலி மைதானத்தில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தொடர்பாக, நாளை சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன. ஐசிசி-யின் மாதாந்தர கூட்டம் காணொளி காட்சிமூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உறுதிசெய்யப்பட்ட முதல் மரணம்!

உலகம் முழுவதிலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதல் மரணம் நிகழ்ந்துள்ளது, நேற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர், கர்நாடகாவில் பலியானார். அவரது உடலில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, நேற்று அதன் முடிவுகள் வெளியானது. அப்போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

காலி மைதானத்தில் கால்பந்து!
காலி மைதானத்தில் கால்பந்து!
Gustavo Garello

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,670. இதில் 69,142 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு வந்துள்ளார்கள். தற்போது வரை 4,973 பேர் இந்த வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 60,555 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இவர்களில், 54,561 பேரின் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால், 5,994 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

சீனாவில் முன்னேற்றம்!

இந்த வைரஸ் சீனாவிலிருந்து பரவியிருந்தாலும், தற்போது அந்த நாடு பெருமளவுக்கு இந்த வைரஸைக் கட்டுப்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதுவரை 80,797 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களில் 62,874 பேரை முழுமையாகக் குணப்படுத்தி அனுப்பியுள்ளது சீனா. மேலும், இன்றைய நிலவரப்படி, நேற்று சீனாவில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்துள்ளது. அதேபோன்று, நேற்று கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கையும் ஒன்றாகக் குறைந்துள்ளது. 80,000 -க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தாலும், தற்போது சீனாவில் சிகிச்சைபெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 14,753 பேர்தான். அவர்களில் 4,257 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள், லேசான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி
இத்தாலி
Luca Bruno

கவலை அளிக்கும் இத்தாலி நிலவரம்!

ஆனால், உலகின் ஒட்டுமொத்த கவலையாக இத்தாலி நிலவரம் உள்ளது. இத்தாலியில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,113 பேர். நேற்று மட்டும் 2,651 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,016. நேற்று மட்டும் 189 பேர் பலியாகியுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக 1,000 மரணங்களைக் கடந்த நாடாக இத்தாலி உள்ளது. நேற்று மட்டும் கொரோனாவால் உலகம் முழுவதிலும் பலியானவர்களின் எண்ணிக்கையைக் கூட்டினால் கூட இத்தாலியில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கையை முந்த முடியாது. இத்தாலிக்கு சீன மருத்துவர்கள் குழு உதவ முன் வந்துள்ளது. விரைவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

`மீண்டு வரும் சீனா... பிடியில் சிக்கிய இத்தாலி' - அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் #Corona

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 12 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளனர். தற்போது, 69 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இந்தியாவில், அதிகபட்சமாக கேரளாவில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் மீண்டு வந்துள்ளனர். அடுத்தபடியாக, ஹரியானாவுக்கு வந்த 14 வெளிநாட்டினருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் உத்தரப்பிரதேசத்திலும் தலா 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜஸ்டின் ட்ரூடோ
ஜஸ்டின் ட்ரூடோ

கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, கனடா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கனடா அதிபர், நேற்று முதலே வீட்டில் இருந்து தான் பணியாற்றிவருகிறார். அதேபோன்று, பிரபல கால்பந்து அணியான ஆர்சனல் அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தை நேரில் பார்த்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு அருகில் இருந்தவர்களையும் சோதனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா உள்ளிட்ட தொற்றுகளிடமிருந்தும் காக்கும் உணவுகள்!

புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை அரசு மட்டும்மல்லாமல், மக்களும் எடுக்க வேண்டும். எந்நேரமும் சுத்தமாகவும் கைகளைக் கழுவியும் இருக்க வேண்டும். தேவையில்லாமல் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இருமல், சளி சிக்கல் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவமனையை அணுக வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு