கைதிகள், அணுசக்தி உள்கட்டமைப்பு விவரங்களை பரிமாறிக் கொண்ட இந்தியா - பாகிஸ்தான்! ஏன்?
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தேசப் பாதுகாப்பு கருதி அணுசக்தி உள்கட்டமைப்பு விவரங்களை ஆண்டுக்கு இருமுறை பறிமாற்றம் செய்துகொள்வது, கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்றுவருகிறது. இந்த ஒப்பந்தம், 1988-ம் ஆண்டு இருநாடுகளிடையே போடப்பட்டது.
புத்தாண்டின் முதல் நாளில், இந்தியா - பாகிஸ்தான் தூதரகங்கள் இரு நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றங்களை நடத்தின. தேசப் பாதுகாப்பு கருதி, அணுசக்தி உள்கட்டமைப்பு விவரங்களை ஆண்டுக்கு இருமுறை பரிமாற்றம் செய்துகொள்வது கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது.1988-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஜனவரி ஒன்றாம் தேதியும் ஜூன் ஒன்றாம் தேதியும் இருநாடுகளும் வழக்கமாக இந்த விவரங்களைப் பரிமாறிக்கொள்ளும். அப்படி, கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று இரு நாடுகளும் இந்தத் தகவல் பரிமாற்றத்தை நடத்தின.
கடந்த ஆண்டு, இரண்டு நிகழ்வுகளின் காரணமாக இரு நாடுகளுக்குமிடையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. ஒன்று, புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் தங்கியிருக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். மற்றொன்று, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா நீக்கியது மற்றும் இணைய சேவைகளைத் துண்டித்து பதற்ற நிலைக்குக் கொண்டுவந்தது. இந்த இரு தருணங்களிலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன் கண்டனங்களைக் கடுமையாகப் பதிவுசெய்திருந்தார். இப்படி, இரு நாட்டு பிரதமர்களுக்குமிடையே பூசல் இருந்துவந்தாலும், அவை நாட்டுமக்களை பாதிக்காமல் இருக்க சில விஷயங்களில் இருவருமே கவனமாக இருந்துவருகிறார்கள். அதற்கு முன்னுதாரணம்தான் இந்தத் தகவல் பரிமாற்றம். அணுசக்தி உள்கட்டமைப்பு அமைப்புகள் இருக்கும் இடங்கள் மற்றும் சிறைப்பிடித்துள்ள கைதிகள், மீனவர்கள் மற்றும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட படகுகள் ஆகியவற்றின் விவரங்களை இருநாடுகளும் மாற்றிக்கொள்வதுதான் இந்த ஒப்பந்தம்.

தற்போதைய நிலவரப்படி, இந்தியா தன்வசம் 267 பாகிஸ்தான் கைதிகள் மற்றும் 99 மீனவர்களை வைத்துள்ளதாக இஸ்லாமாபாத்துக்கு தகவல் அனுப்பியது. பாகிஸ்தான், தனது நாட்டில் சிறைப்பிடித்துள்ள 55 இந்தியக் கைதிகளின் தகவல்களையும் 227 இந்திய மீனவர்களின் தகவல்களையும் டெல்லிக்கு அனுப்பியது. பாகிஸ்தான் அனுப்பிய தகவல்களின்படி, 126 இந்திய மீனவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று உறுதி செய்துள்ளது இந்தியா. இந்தியர்கள் என்று நம்பப்படும் 14 பேரையும் 100 மீனவர்களையும் இந்திய வம்சாவளி என்று உறுதி செய்ய, பாகிஸ்தான் தூதரகத்திடம் அனுமதி கேட்டிருக்கிறது இந்தியா. அது தவிர்த்து, குல்பூஷண் ஜாதவ்வைப் பற்றிய தகவல் மட்டும் பாகிஸ்தான் தவிர்த்திருந்தது. சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், அவரை இந்திய நாட்டுக் குடிமகனாகவும் கருதாததால், பாகிஸ்தான் தூதரகம் அவரது விவரங்களைத் தவிர்த்துள்ளது.
வெவ்வேறு சிறையில் உள்ள இந்தியர்களில் மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றை சரிபார்க்க, இந்தியாவிலிருந்து மருத்துவக்குழு அனுப்பக் கோரிய விசாவுக்கு, துரித அனுமதி கோரியிருக்கிறது இந்தியா. கைப்பற்றப்பட்ட 22 இந்தியப் படகுகளை மீட்க 4 பேர் கொண்ட குழுவையும் விரைவில் அனுப்புவதாக இந்தியா கூறியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து, 11 மணிக்கு அணுசக்தி உள்கட்டமைப்பு குறித்த தகவல்களையும் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டன. இந்தத் தகவல், அணுசக்தி கட்டமைப்புகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்கும் பொருட்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பரிமாறிக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, இந்தியாவின் அண்டை நாட்டு அதிபர்களுக்குத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அதில், பூட்டானின் மன்னரான ஜிக்மே கேசர் நம்ங்யேல் வாங்க்சுக்கும், அந்நாட்டின் பிரதமர் லோட்டேய் ஷெரிங், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்சே, மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் மொகமது சோலி, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள் பிரதமர் கே.பி ஷர்மா ஒலி ஆகியோர், பிரதமர் மோடியுடன் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

அதில், ஷேக் ஹசினாவிடம் மட்டும் 15 நிமிடம் பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்குப் பிறகு இரு நாடுகளுக்குமான நெருக்கம் அதிகரிக்கும் என்று கூறினாராம். இந்த வரிசையில், பாகிஸ்தான் பிரதமர் இல்லாததில் பெரிய ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஏனென்றால், கடந்த 2 வருடங்களாகவே இரு நாடுகளுக்கிடையிலான உறவில் பிரச்னை நீடித்துவருவது அனைவரும் அறிந்ததுதான்.
- ஜான் ஜே ஆகாஷ்