Published:Updated:

ரஷ்யா: மாஸ்கோவில் இந்திய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள்... முக்கியத்துவம் பெறும் சந்திப்பு!

ரஷ்ய அமைச்சருடன் ஜெய்சங்கர்
ரஷ்ய அமைச்சருடன் ஜெய்சங்கர்

ரஷ்யா சென்றிருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யைச் சந்தித்து எல்லைப் பிரச்னை தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய - சீன எல்லைப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது. சீன ராணுவத்தின் தொடர் அத்துமீறலால் ஏராளமான இந்திய வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இரு நாட்டு வீரர்களும் தங்கள் எல்லைக்குள்தான் இருக்கின்றனர் என்று சொல்லப்பட்டதை அடுத்து, கடந்த திங்கள் அன்று லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் எல்லை தாண்டிச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனத் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், `நாங்கள் எல்லை தாண்டவில்லை’ என்று தெரிவித்த இந்திய ராணுவம், `சீன ராணுவம்தான், வானை நோக்கித் துப்பாக்கியால் சுட்டது’ என்றும் குற்றம்சாட்டியது.

இந்த நிகழ்வு, எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பாங்காங் சோ ஏரியின் தெற்குப் பகுதியில் சீன வீரர்கள் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியது.

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு ரஷ்யாவில் நடைபெற்றுவருகிறது. இதில் ராஜ்நாத் சிங்கை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு சீனா கேட்டுக் கொண்டதை அடுத்து, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சருடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செப்டம்பர் 8-ஆம் தேதி ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவுக்குச் சென்றார்.

நேற்று, கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள், பிராந்திய ஒற்றுமை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.

இதற்கிடையே, இன்று மாலை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

வாங் யி
வாங் யி

இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே லடாக் எல்லை விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்துவரும் நிலையில், இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் இன்று சந்தித்துப் பேசவிருக்கிறார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தையில் எல்லைப் பிரச்னை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் விளக்குவார் என்றும், கிழக்கு லடாக்கில் சீனா கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள அறிவுறுத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து எல்லையில் பதற்றத்தைத் தணிக்க, இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து தற்போதைய பதற்றநிலையைத் தணிக்க இன்றும் இரு அமைச்சர்களும் சந்தித்துப் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - சீனாவுக்கு இடையே எழுந்துள்ள அசாதாரண நிலையைச் சமரசப்படுத்த, இரு நாடுகளுடனும் நட்புடன் செயல்பட்டுவரும் ரஷ்யா முயன்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு