கடந்த பிப்ரவரி மாதம், 24-ம் தேதி ரஷ்யா-உக்ரைன் இடையே தொடங்கிய போர் இன்று வரை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராகப் பல நாடுகள் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்தாலும், இந்தியா பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கூறுவதோடு, இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா நேற்று பிரத்தியேகப் பேட்டியளித்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, "உக்ரைனுக்கு இந்தியா வழங்கிவரும் அனுதாபத்தையும், போரை நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டையும் பாராட்டுகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேநேரத்தில், இந்த நடுநிலைமை என்பது போரை நிறுத்த உதவாது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும். போரை நிறுத்துவதற்கான சிறந்த வழி, உக்ரைனை ஆதரிப்பதும், போரில் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் ரஷ்யாவைவிட்டு வெளியேறுவதும்தான்.
எனவே, எனது பார்வையில், இந்தியா ஒரு வெளிப்படையான குற்றவாளி. ரஷ்யாவின் குற்றத்துக்கு பலியாகும் பாதிக்கப்பட்டவரின் பக்கம் இருப்பது என்பது தார்மிக அரசியல்ரீதியான கடமை. ரஷ்யா இந்தியாவுடன் சிறப்பான உறவை வளர்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த ரஷ்யா சித்ரவதை செய்கிறது, கொலை செய்கிறது, பாலியல் வன்கொடுமை செய்கிறது. இந்த நிலையிலும் இந்தியா வரலாற்றின் எந்தப் பக்கத்தில் நிற்கும்?

மேலும், ரஷ்யா-உக்ரைன் போர் என்பது ஜனநாயக உலகுக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போர். எனவே, ஒரு பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஜனநாயகத்துக்கு ஆதரவாக நிற்பது என்பது மிக இயற்கையான தேர்வாகத்தானே இருக்கும்... ரஷ்யா வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், இந்தியா வளர்ந்துவருகிறது. எனவே, இந்தியா இனி தனது வர்த்தக நண்பர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.