Published:Updated:

ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் இந்தியா! மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா! - எதிர்காலத்தில் பாதிப்பா?

இந்தியா: ரஷ்யாவுடன் நெருக்கம்- மிரட்டும் அமெரிக்கா

பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவும், சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் இருக்க, இவை இரண்டு தரப்பிலும் இந்தியா இல்லாமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது. ஆனால், இது ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஆதரவுப் போக்கு என அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது.

ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் இந்தியா! மிரட்டிப் பார்க்கும் அமெரிக்கா! - எதிர்காலத்தில் பாதிப்பா?

பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவும், சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் இருக்க, இவை இரண்டு தரப்பிலும் இந்தியா இல்லாமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது. ஆனால், இது ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஆதரவுப் போக்கு என அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது.

Published:Updated:
இந்தியா: ரஷ்யாவுடன் நெருக்கம்- மிரட்டும் அமெரிக்கா

உக்ரைன் மீதான ரஷ்யப் போரைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பா நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், அந்த நாடுகளுடனான ரஷ்யாவின் ஏற்றுமதி, இறக்குமதி பெருமளவு பாதிக்கப்பட்டது. இருப்பினும், ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்தும் முடிவில் இல்லை. பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவும், சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் இருக்க, ரஷ்யா - உக்ரைன் என இரண்டு தரப்பிலும் இந்தியா இல்லாமல் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது. இது ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஆதரவுப் போக்கு என அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது.

ரஷ்யா உக்ரைன் போர்
ரஷ்யா உக்ரைன் போர்

அதை மெய்ப்பிக்கும்விதமாக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்து, ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது. அதைத் தொடர்ந்து, ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் அந்தத் தீர்மானத்தைத் தோல்வியடையச் செய்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து, அப்போது பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் (Ned Price), ``ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு வேறுபட்டது என்பது எங்களுக்குத் தெரியும். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பான உறவுகள் உள்ளன. ஆனால், எங்களுடனான உறவு அந்த அளவுக்கு இல்லை. நாங்கள் ரஷ்யாவுடன் கொண்டுள்ள உறவுக்கும், இந்தியா கொண்டிருக்கும் உறவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனால், பரவாயில்லை" எனத் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ்
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ்

அதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட, இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் டெனிஸ் அலிபோவ் (Denis Alipov), ``இந்தியாவுடன் நாங்கள் நெருங்கிய நட்புறவு கொண்டுள்ளோம். ஐ.நா-வில் நடுநிலையான நிலைப்பாட்டை இந்தியா வெளிப்படுத்தியது. இந்தப் பிரச்னையின் ஆழத்தை இந்தியா புரிந்துகொண்டிருக்கிறது. இதற்கு இந்தியாவுக்கு நன்றி" எனக் கூறினார். மேலும், ``உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் தடையால் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணைகளை நாங்கள் அளிப்பதில் எந்தத் தடையும் இல்லை" என அதிரடியாகக் கூறினார்.

இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் டெனிஸ் அலிபோவ்
இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் டெனிஸ் அலிபோவ்

பல நாடுகள் ரஷ்யாவுடனான வர்த்தக உறவை துண்டித்துக்கொண்டிருக்க, இந்தியாவோ ரஷ்யாவுடனான உறவை எப்போதும்போல தொடர்ந்துகொண்டிருந்தது. மேலும், இந்தியா கேட்டுக்கொண்டதன்பேரில் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பதற்கு ஏதுவாக தற்காலிகப் போர் நிறுத்தத்தையும் சில நாள்களுக்கு ரஷ்யா அறிவித்திருந்தது. அதுமட்டுமல்லாமல், உக்ரைனில் தங்கிப் படித்துவந்த இந்திய மாணவர்களின் கல்வி தடைபட்டு, போரால் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவிய நிலையில், `உக்ரைன் பல்கலைக்கழகத்திலிருந்து நாடு திரும்பும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு, கூடுதல் கட்டணம் இல்லாமலும், நுழைவுத்தேர்வு இல்லாமலும் ரஷ்ய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சேரலாம்' என ரஷ்யா அறிவித்தது. மேலும், இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யவும் முன்வருவதாக அறிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``ரஷ்யாவை எதிர்க்க இந்தியா நடுங்குகிறது" எனக் கடுமையாக விமர்சித்தார். மேலும், ``குவாட் அமைப்பில் இடம்பெற்றிருக்கும் ஜப்பானும், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ரஷ்யாவை வலுவாக எதிர்க்கின்றன. ஆனால், ரஷ்யாவை எதிர்க்க இந்தியா மட்டும் நடுங்குகிறது. ரஷ்யாவுக்கு எதிரான கூட்டணியில் இந்தியா இடம்பெறவில்லை!" எனத் தெரிவித்தார். (இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட ராணுவ கூட்டமைப்புதான் (QUAD) குவாட்).

ஜோ பைடன்
ஜோ பைடன்
Evan Vucci

இந்த நிலையில், ரஷ்யா தன்மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடையை சமாளிக்கும் முயற்சியாக, இந்தியா உள்ளிட்ட தனது நட்பு நாடுகளுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்திருக்கிறது. அதன்படி, இந்தியாவுக்கு தற்போதைய சந்தை விலையைவிட பேரல் ஒன்றுக்கு 35 டாலர் குறைவாக கச்சா எண்ணெயை விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. மேலும், டாலர் இல்லாமல் ரஷ்ய ரூபிள்- இந்திய ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவிலும் விண்ணை முட்டும் அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதால், மலிவு விலையில் கிடைக்கும் ரஷ்யாவின் உயர்தரமான கச்சா எண்ணெயை வாங்க மத்திய அரசு ஆயத்தமாகிவருகிறது.

அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஜினா ரைமண்டோ
அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஜினா ரைமண்டோ
Rodney Choice

இதற்குக் கடுமையாக அதிருப்தி தெரிவித்திருக்கும் அமெரிக்க வர்த்தகத்துறை செயலாளர் ஜினா ரைமண்டோ (Gina Raimondo), ``வரலாற்றின் சரியான பக்கத்தில் நிற்கவேண்டிய நேரம் இது. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுடன் இணைந்து, சுதந்திரம், ஜனநாயகம், இறையாண்மைக்காக உக்ரைன் மக்களுடன் நிற்க வேண்டும். ஆனால், இந்தியாவின் நடவடிக்கைகள் ஆழ்ந்த ஏமாற்றம் அளிக்கின்றன" எனக் கவலை தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்தியா வந்த அமெரிக்கத் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங் (Dalip Singh), ``சீனாவும், ரஷ்யாவும் அண்டை நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்கின்றன. இந்தியா மீது சீனா மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தினால் அப்போது இந்தியாவுக்கு உதவ ரஷ்யா வராது. இந்த எச்சரிக்கையை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்" எனச் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங்
அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங்

மேலும், ``இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்வது, அமெரிக்காவின் பொருளாதாரத் தடையின் கீழ் வரவில்லை. அதேசமயம், இந்த வர்த்தகத்தை இந்தியா உள்ளிட்ட நாடுகள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. ரஷ்யாமீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறும் நாடுகள் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ரஷ்யாவின் மத்திய வங்கியுடன் எந்த நாடும் பணப் பரிவர்த்தனையோ, வர்த்தகப் பரிவர்த்தனையோ செய்யக் கூடாது என அமெரிக்கா கேட்டுக்கொள்கிறது" என மறைமுகமாக இந்தியாவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

இந்த நிலையில், இரண்டுநாள் பயணமாக இந்தியா வந்திருந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் (Sergei Lavrov), ``பல தசாப்தங்களாக இந்தியாவுடனான எங்களின் உறவு வளர்ந்துவருகிறது. இதன் அடிப்படையில்தான் நாங்கள் அனைத்துத் துறைகளிலும் எங்கள் ஒத்துழைப்பை ஊக்குவித்துவருகிறோம். உக்ரைன் நெருக்கடியை இந்தியா முழுவதுமாக உற்று நோக்குகிறது. போருக்குப் பின்பு உக்ரைன் அமைதியான நாடாக இருக்கும் என நம்புகிறேன். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் சுதந்திரம் மற்றும் உண்மையான தேசநலன்களில் கவனம் செலுத்துதலை கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்கா மற்ற நாடுகளைத் தங்கள் அரசியலைப் பின்பற்றும்படி வற்புறுத்துகிறது. எப்படியிருப்பினும், இந்தியா மீதான அமெரிக்காவின் அழுத்தத்தால் இந்திய - ரஷ்ய உறவுகள் ஒருபோதும் பாதிக்கப்படாது" எனத் தெரிவித்தார். மேலும், ``ரஷ்யாவிடமிருந்து இந்தியா எதை வாங்க விரும்புகிறதோ அதைப் பற்றி விவாதிக்கவும், அவற்றை வழங்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்!" என உறுதியளித்திருக்கிறார்.

இந்த அரசியல் சூழ்நிலை குறித்து, சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.கனகராஜிடம் பேசினோம். ``பனிப்போர் காலகட்டத்தில் அணிசேரா நாடுகளாக இந்தியா, எகிப்து, யூகோஸ்லாவியா உள்ளிட்ட நாடுகள் அங்கம்வகித்தன. அன்றைய காலத்தில், நேரு, டிட்டோ, நாசர் போன்ற அணிசேரா நாடுகளின் தலைவர்கள் தங்களுக்காக லாப, நட்ட கணக்குகளைப் பார்க்காமல், எது சரி, தவறு என்ற விழுமியங்களைப் பார்த்து தங்களின் ஆதரவையோ, எதிர்ப்பையோ வழங்கினர். ஆனால், இன்றைய உலக நாடுகள் அனைத்துமே சரி, தவறு என்பதைத் தாண்டி தங்களின் வர்த்தக நலன், பூலோக அரசியல் நலனுக்கு எது உதவும் ஆகிய இரண்டை மட்டுமே வைத்து முடிவெடுக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா தொடங்கி தற்போது இந்தியாவும் அது போன்ற முடிவைத்தான் எடுத்துவருகிறது.

கனகராஜ்
கனகராஜ்

உலக நாடுகளின் அரசியலில் நிரந்தரமான உறவு என்ற ஒன்றே கிடையாது. இன்று மோதிக்கொள்பவர்கள் நாளை சேர்ந்துகொள்வார்கள். எல்லாமே அந்தந்த நாடுகளின் வர்த்தக, பூலோக நலன்தான். ஆக, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டலோ, நிர்பந்தமோ இந்தியாவை ஒன்றும் செய்துவிடாது. குவாட் அமைப்பிலிருந்தும்கூட இந்தியாவை அமெரிக்காவால் விலக்கிவைக்க முடியாது. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்குக் கட்டாயம் தேவை. எனவே, ரஷ்யாவுடனான உறவால் இந்தியாவுக்கு எதிர்காலத்தில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படப்போவதில்லை; இந்தியா எல்லா நாடுகளிடமும் நல்ல உறவைப் பேணிவருகிறது. இந்த விஷயத்தில் இப்போது நமக்கு எது தேவையோ அதைத்தான் நாம் பார்க்க வேண்டும்" என்றார்.