Published:Updated:

தன்னிச்சையான விசாரணை; WHO-வுக்கு 62 நாடுகள் கோரிக்கை! -கொரோனா விஷயத்தில் முதல்முறையாக இந்தியா

உலக சுகாதார அமைப்பு - WHO
உலக சுகாதார அமைப்பு - WHO

`தற்போது, கொரோனா வைரஸுக்கு எதிரான யுத்ததில் நாடு இருக்கிறது. அது முடிந்த பின்னரே வைரஸின் உருவாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படும்’ என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது.

கொரோனா வைரஸ் பரவல், உலக நாடுகளின் பொருளாதாரத்தின் வேர்களையே அசைத்துப்பார்த்திருகிறது என்றால், அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆரம்பத்தில், சுகாதார அவசரகால நிலையாக எடுத்துக்கொள்ளப்பட்டு ஊரடங்குகளை அமல்படுத்தபட, தற்போது பொருளாதாரம் குறித்த பேச்சுகள்தான் ஓடுகிறது. ஒருபக்கம் கொரோனாவுக்கு எதிரான யுத்தம், மறுபக்கம் கொரோனா சார்ந்த சர்வதேச அரசியல்.

சீனா - அமெரிக்கா
சீனா - அமெரிக்கா

உலகின் வளர்ந்த நாடுகளாக அறியப்பட்ட பல நாடுகள், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டத்தைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆரம்பம் முதலே கொரோனா வைரஸை `சீன வைரஸ்’ என்று குறிப்பிட்டுவந்தார். சீனா, இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கா, சீனாவில் இருந்துதான் இந்த வைரஸ் உருவானதாகவும், அங்கு வுஹானில் இருக்கும் வைராலஜி லேபில் இருந்து தவறுதலாக இந்த வைரஸ் பரவியிருப்பதாகவும் குற்றம் சாட்டியது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என சீனா மறுத்தது.

இதெல்லாம் பழைய கதைகள்தான் என்றாலும், கொரோனா வைரஸ் பரவலின் தொடக்கப்புள்ளி தொடர்பாக அறிந்துகொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டின. அமெரிக்கா ஒருபடி மேலே சென்று, சீனாவில் ஆய்வு நடத்தவுள்ளதாகத் தெரிவித்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து, கொரோனா வைரஸ் உருவானது தொடர்பான தன்னிச்சையான விசாரணைக்கு உலக சுகாதார அமைப்பிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

இன்று, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடங்கும் உலக சுகாதார அமைப்பின் பொதுச் சபை கூட்டத்தில், இது தொடர்பான கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 பக்க கோரிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த வரைவுக்கு, 35 நாடுகளும் ஐரோப்பிய யூனியனின் 27 உறுப்பு நாடுகளும் என மொத்தம் 62 நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இது, 194 உறுப்பு நாடுகளைக் கொண்ட உலக சுகாதார அமைப்பின் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரைவில், `கொரோனா வைரஸ் முதலில் எப்படி விலங்குக்கு வந்தது... விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு எப்படிப் பரவியது?’ உள்ளிட்ட பல விஷயங்களை உலக சுகாதார அமைப்பு பக்கச்சார்பற்ற, சுயாதீனமான, விரிவான மதிப்பீடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரைவு தொடர்பாக ஆஸ்திரேலியா திட்டமிட ஆரம்பித்தது முதலே சீனா எச்சரித்தது. எனினும், தற்போது இந்தியா உள்ளிட்ட 62 நாடுகளின் ஆதரவுடன் இந்த வரைவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா- சீனா
இந்தியா- சீனா

சர்வதேச அரங்கில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் இந்தியா ஒரு பக்கமாக நிற்பது இதுவே முதல்முறை. அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம் சாட்டிய பின்னரும் இந்தியா, கொரோனா வைரஸ் விவகாரத்தில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. `தற்போது, கொரோனா வைரஸுக்கு எதிரான யுத்தத்தில் நாடு இருக்கிறது. அது முடிந்த பின்னரே வைரஸின் உருவாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படும்’ என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது. சீனாவைத் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் அமெரிக்கா, இந்த வரைவை தற்போது வரை ஆதரிக்கவில்லை.

62 நாடுகளின் கோரிக்கை வரைவில், சீனா குறித்தோ, வுஹான் குறித்தோ எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. அதனால் அமெரிக்கா இந்த வரைவுக்கு ஆதரவளிக்கவில்லை என்றும், உலக சுகாதார அமைப்பின்மீது இருக்கும் கோபமே, அமெரிக்கா இதனை ஆதரிக்காததற்குக் காரணம் எனவுன் கூறப்படுகிறது. இந்தியா, தீவிர ஆலோசனைக்குப் பின்னரே இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், சீனாவின் க்ளோபல் டைம்ஸ் பத்திரிக்கை, `விசாரணை அறிவியல் பூர்வமாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளது. இது, சீனாவை ஆளும் கம்யூனிஸ கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னிச்சையான விசாரணை; WHO-வுக்கு 62 நாடுகள் கோரிக்கை! -கொரோனா விஷயத்தில் முதல்முறையாக இந்தியா

முன்னதாக, இந்தியா-சீனா எல்லைப் பகுதியில், கடந்த வாரங்களில் இருநாட்டு வீரர்களிடையே மோதல் நிலவியது. அதைத் தொடர்ந்து, லடாக் பகுதியில் சீனா ஹெலிகாப்டர் ஒன்றும் பறந்ததாகத் தகவல் வெளியானது. தொடர்ந்து இந்திய போர் விமானங்கள் லடாக் வான் வழியில் சுற்றியது பதற்றத்தை அதிகரித்தது. எனினும், இது சாதாரண ரோந்துப் பணிதான் என ராணுவம் இந்தப் பதற்றத்தைத் தணித்தது. சீனாவைக் குறை சொல்லும் அமெரிக்காவுக்கு இந்தியா உதவுவதும், கொரோனா வைரஸ் காரணமாக சீனாவிலிருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியா பயன்படுத்த நினைப்பதும் அந்நாட்டுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், அதனாலே இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த சீனா இதுபோன்று செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

‘கொரோனா வைரஸை அழிக்க வீதிகளில் கிருமிநாசினிகளைத் தெளிப்பதால் பயனில்லை!’ - உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார அமைப்பின் இந்தக் கூட்டத்தில், இந்த வரைவு வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஏற்கெனவே திட்டமிட்ட சில வாக்கெடுப்புகள் நடைபெற உள்ளது. குறிப்பாக, தைவானுக்கு பார்வையாளர் நிலை வழங்குவது தொடர்பாக இன்று வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இதை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரிக்கின்றன. சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்தியா இன்னும் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

அடுத்த கட்டுரைக்கு