உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ரஷ்யா, கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ம் தேதி முதல் உக்ரைன்மீது ராணுவத் தாக்குதல்களை நடத்திவருகிறது. உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை எதிர்த்து ரஷ்யா மீதும், அதிபர் புதின் மீதும் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன.
மேலும், போர் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக வாக்கெடுப்புக்கு நடத்தப்பட்டது. அதில் ரஷ்யாவுக்கு எதிராகப் பெரும்பான்மையான நாடுகள் வாக்களித்தன. ஆனால், ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனக்கு எதிரான வாக்கெடுப்பு தீர்மானத்தை வீழ்த்தியது.
பின்னர் உக்ரைன்மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சர்வதேச நீதிமன்றம் நேற்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது, ``உலக நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளின் 13-2 என்ற வாக்குகள் அடிப்படையில், உக்ரைனில் நடத்தப்பட்டுவரும் ராணுவத் தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்" என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கான வாக்கெடுப்பில் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி பெரும்பான்மைக்கு ஆதரவாக, அதாவது ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தார்.
உக்ரைன் விவகாரத்தில், பேச்சுவார்த்தை ஒன்றே போரின் முடிவுக்குத் தீர்வாக அமையும் என இந்தியா நடுநிலை வகித்துவரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி ரஷ்யாவுக்கு எதிராகத் தீர்ப்பளித்திருக்கிறார்.
எனினும், சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி என்கிற முறையில் வழக்கு விசாரணையின் அடிப்படியில்தான் தனது தீர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். இது இந்தியாவின் நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
