Published:Updated:

`மெகுல் சோக்‌ஷிக்குக் குடியுரிமை வழங்க இந்திய அதிகாரிகளே காரணம்!'- ஆன்டிகுவா பிரதமர்

மெகுல் சோக்‌ஷியை நல்லவர்போல வெளியேற அனுமதித்தது இந்திய அதிகாரிகள்தான். இந்திய அதிகாரிகளின் பேச்சை நம்பித்தான் அவருக்கு எங்கள் நாட்டில் குடியுரிமை வழங்கினோம்.

Mehul Choksi
Mehul Choksi

வங்கியில் பல ஆயிரம் கோடிகளை மோசடி செய்துவிட்டு எப்படி சட்டப்பூர்வமாகத் தப்பிப்பது என்பதற்கு உதாரணமாக இருப்பவர்களில் மெகுல் சோக்‌ஷியும் ஒருவர். பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,578 கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்‌ஷியும் இந்த மோசடியில் உடந்தை. மோசடி அம்பலமாகி சிபிஐ தேடப்போகிறது என்று தெரிந்ததுமே, கடந்த 2018 ஜனவரி 15-ல் இந்தியாவை விட்டு வெளியேறியவர், ஆன்டிகுவா & பார்படாஸ் நாட்டிற்குச் சென்று செட்டிலானார்.

Punjab National Bank
Punjab National Bank

வங்கி மோசடியாளர்கள் வழக்கமாகச்செல்லும் லண்டனுக்குச்செல்லாமல் இவர் ஆன்டிகுவா நாட்டுக்குச் சென்றதற்குக் காரணமுண்டு. அங்கு செல்லும் எவர் வேண்டுமானாலும் குறைந்த செலவில் மிக எளிதாக அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுவிடலாம். அதேபோல இவரும் அங்கு சென்றதும் முதல் வேலையாக அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றார். அப்படியும் இந்திய அரசு அவரை விசாரணைக்கு அழைக்க முயற்சி மேற்கொண்டதால், தனது இந்தியக் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட்டை ஆன்டிகுவா நாட்டிடம் ஒப்படைத்தார். இதன்மூலம் தனக்கும் இந்தியாவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்றும், தன்னை இந்தியாவுக்கு அனுப்பக்கூடாது என்றும் அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்தார்.

Vikatan

அதையும் மீறி அங்கிருந்து விசாரணைக்காக இந்தியாவுக்கு அவரை அழைத்துவர சிபிஐ முயற்சி செய்தது. ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லையென்றும், சிபிஐ அதிகாரிகள் வேண்டுமானால் ஆன்டிகுவா நாட்டிற்கு வந்து தன்னிடம் விசாரணை நடத்தலாம் என்று மெகுல் சோக்‌ஷி கூறியிருந்தார். இப்படி இழுபறியாக இருந்த சூழலில், ஆன்டிகுவா நாட்டின் பிரதமர் காஸ்டன் பிரவுன் இதுகுறித்து இந்தியாவுக்கு நம்பிக்கையளிக்கும்விதமாகக் கருத்து தெரிவித்துள்ளார். ``எங்கள் நாட்டில் அவரது முறையீடுகளுக்குப் பதிலளிக்கப்பட்டபின் இந்தியா கேட்டுக்கொண்டபடி நாடுகடத்தப்படுவார். அவரை நாடு கடத்துவது மிக எளிதில் முடியக்கூடிய ஒன்று" என்று கூறியுள்ளார்.

Antiqua PM With Indian PM Modi
Antiqua PM With Indian PM Modi

மேலும், "மெகுல் சோக்‌ஷியை நல்லவர்போல வெளியேற அனுமதித்தது இந்திய அதிகாரிகள்தான். இந்திய அதிகாரிகளின் பேச்சை நம்பித்தான் அவருக்கு எங்கள் நாட்டில் குடியுரிமை வழங்கினோம். அவர் ஒரு வஞ்சகர் என்பது இப்போதுதான் தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த நிலை ஏற்பட்டதற்கு இந்திய அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார். எனவே, விரைவில் மெகுல் சோக்‌ஷி இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்படுவார் என்று தெரிகிறது.