Published:Updated:

ரஃபேல் ஒப்பந்த விவகாரம்; விசாரிக்க பிரான்ஸ் நீதிபதி நியமனம்! -மோடி, மேக்ரான் அரசுகளுக்கு நெருக்கடி?

ரஃபேல் போர் விமானம்
ரஃபேல் போர் விமானம்

ரிலையன்ஸ் நிறுவனத்தோடு மட்டுமே ஒப்பந்தம் போடும்படி இந்தியா வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்ட் தெரிவித்தார்

இந்தியா - பிரான்ஸ் இடையே நிகழ்ந்த ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டத்தையடுத்து, இது தொடர்பான வழக்கை விசாரிக்க பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நீதிபதியான ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் (Jean François Ponert) நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, இந்திய ராணுவ விமானப் படையின் மேம்பாட்டுக்காக, பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசாங்கத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது.

ராஜ்நாத் சிங்- ரஃபேல்
ராஜ்நாத் சிங்- ரஃபேல்

முன்னதாக, மத்தியில் நடந்த முடிந்த காங்கிரஸ் ஆட்சியின்போது ஒரு ரஃபேல் போர் விமானத்தின் விலை 526 கோடி ரூபாய் என நிர்ணயக்கப்பட்டு பிரான்ஸிடமிருந்து 126 ரஃபேல் விமானங்களை வாங்க அப்போதைய பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்ட்டோடு ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், இந்தியா, பிரான்ஸ் இரு நாடுகளிலும் ஆட்சிமாற்றம் நிகழ்ந்ததால், அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது. மீண்டும், 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி - இம்மானுவேல் மேக்ரான் இடையே ரஃபேலுக்கான புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி ஒரு விமானத்தின் விலை 1,670 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு 36 ரஃபேல் விமானங்கள், மொத்தம் 59,000 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்யப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 526 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவுசெய்ததை செயல்படுத்தாமல் ஏன் கூடுதல் விலையைக் கொடுத்து தற்போது வாங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் இது பேசுபொருளானது. தொடர்ந்து ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு பாய்ந்தது.

இந்த ஒப்பந்தத்துக்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் (Dassault) ஏவியேஷன் நிறுவனம், இந்தியாவின் துணை நிறுவனமான டெஃப்ஸிஸ் (Defsys) நிறுவனத்துக்கு 8.6 கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்துள்ளது என்று பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்புத்துறை கண்டுபிடித்தது. இந்த விவகாரம் பிரான்ஸ் நாட்டின் அரசியல் களத்தில் ரஃபேல் குறித்து வெளிவந்துகொண்டிருந்த சர்ச்சைகளுக்கு மேலும் தீனி போட்டது. இந்தியாவிலும் இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கையாண்டதால், மத்திய பா.ஜ.க அரசு அவர்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு பல்வேறு வகையில் ஊழலில் ஈடுபட்டுவருவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தோடு மட்டுமே ஒப்பந்தம் போடும்படி இந்தியா வலியுறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்ட் தெரிவித்தார். அதற்கு, மறுப்பு தெரிவித்து ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனமும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும் தாமாகவே ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர் என்று அப்போது மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனும், அருண் ஜெட்லியும் கருத்து தெரிவித்தனர்.

மோடி- மேக்ரான்
மோடி- மேக்ரான்

இந்தநிலையில், முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் ரஃபேல் போர் விமான ஊழல் வழக்கை விசாரிக்க தற்போது பிரான்ஸ் நாட்டின் நீதிபதியான ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் (Jean François Ponert) புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த வழக்கை விசாரிக்க எலியன் ஹவ்லெட் (Elien Howlett) என்பவர் நியமிக்கப்பட்டு, பின்னர் அவர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஃபேல் போர் விமான சர்ச்சை நீடித்துவருவதால், இது மத்தியில் மோடி அரசுக்கும், பிரான்ஸில் இம்மானுவேல் மேக்ரான் அரசுக்கும் பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு