Published:Updated:

``இந்தியா இதில் அதர்மம் செய்யக்கூடாது!" - ஐ.நா வாக்கெடுப்பு குறித்து அம்பிகை செல்வக்குமார்

`அம்பி மிஸ்` என்று அனைவராலும் விருப்பத்துடன் அழைக்கப்படும் அம்பிகையை இங்கிலாந்து, ஹரோவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`துவண்டுகிடந்த நம் நெஞ்சங்களில் மீண்டும் நம்பிக்கை விதையை தூவியிருக்கிறார் அம்பிகை செல்வக்குமார்' - இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள், உலகம் முழுக்க இடம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ் மக்கள். அம்பிகை செல்வக்குமார், லண்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர்.

`இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்குக் காரணமான இலங்கை அரசை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என பிரிட்டிஷ் அரசு ஐ.நாவை வலியுறுத்த வேண்டும்' என்று அம்பிகை லண்டனில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஆரம்பிக்க, சர்வதேச கவனம் பெற்றார். இது தொடர்பான அவரது நான்கு கோரிக்கைகளுள் ஒன்று நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் உறுதிமொழியின் பேரிலும், தமிழ் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் தன் உண்ணாவிரதத்தை 18-வது நாள் முடித்துக்கொண்டார் அம்பிகை.

`அம்பி மிஸ்` என்று அனைவராலும் விருப்பத்துடன் அழைக்கப்படும் அம்பிகையை, இங்கிலாந்து, ஹரோவில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். சர்வதேச இன அழிப்பு தடுப்பு மற்றும் வழக்கு மையத்தின் இயக்குநர், கணக்காளர், நடனப்பள்ளி நிறுவனர், சதுரங்க விளையாட்டு வீரர் என்று பலமுகம் கொண்ட அம்பிகை, இங்கிலாந்து அரசின் நிதி மற்றும் பொருளாதாரத் துறையில் பட்ஜெட், புராஜெக்ட் சீனியர் அக்கவுன்டன்ட் உட்பட பல பொறுப்புகளை வகித்தவர்.

ஐ.நா
ஐ.நா

``பிப்ரவரி 27 அன்று லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் நான் உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடங்கியபோது, காவல்துறை அனுமதி தரவில்லை. மார்ச் 2-ம் தேதி முதல் என் வீட்டிலிருந்தபடியே, வெறும் தண்ணீர் மட்டும் அருந்தி, ஸூம் தளம் வழியாக எம் கோரிக்கையை உலக மக்களிடம் எடுத்துச் சொல்கிறேன்'' - ஆற்றல் தீர்ந்துவிடக்கூடாது என்பதால் மெலிதான குரலில் ஆரம்பித்தார் அம்பிகை.

``போர் முடிந்து 12 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இங்கிலாந்தில் லாக்டௌன் காலத்தில்'' என்று கேள்வியை முடிக்கும் முன்னரே, மங்கியிருந்த குரல் முழக்கமாக ஆரம்பிக்கிறது.

``ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆறு நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவுள்ளது. இந்நிலையில், இலங்கையில் வாழும் எம்மக்கள் இது இறுதி முயற்சி என்று உணர்ந்து வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்... புலம்பெயர் தமிழர்களும், தாய் தமிழக உறவுகளும் காப்பாற்றுவார்கள் என்று நம்பி.

ஐ.நா உயர் ஆணையாளர், முன்னாள் ஆணையாளர்கள், மனித உரிமை அமைப்புகள் என இப்போது சர்வதேச சூழலும் சாதகமாக வந்துள்ளது. இந்த முக்கியமான சூழலில், இலங்கையில் நடந்த மற்றும் இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு நீதி கேட்டே, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கையில் எடுத்தேன்.

இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு திடீரென்று போராட்டத்தில் இறங்கவில்லை நான். இப்போது நான் வைத்திருக்கும் கோரிக்கைகள் தொடர்பான முக்கியமான, கடுமையான களப்பணிகளை 2009-லிருந்து ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து செய்துள்ளேன். பிரித்தானிய குடிமகளான நான், 1997-ல் இருந்து பங்குனி 2020 வரை அரசாங்கப் பணியில் இருந்தேன். இந்தப் போராட்டம், என் தார்மிகப் பொறுப்பு. களமும் இப்போது சாதமாக இருக்கிறது.''

இலங்கை
இலங்கை

``உண்ணாவிரதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?"

``கடந்த வருட சர்வதேச மனித உரிமை தின நிகழ்வில், போராடுவதற்கு காந்தியவழி உண்ணாவிரதமே சிறந்தது என்று சர்வதேசத்தின் பிரதிநிதியாக இலங்கை விவகாரத்தில் ஈடுபட்ட நார்வே நாட்டின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சோல்கைம் குறிப்பிட்டார். அதை மனதில் பதித்துக்கொண்டேன். கடைசி தமிழன் இருக்கும்வரை, எம் இனம் விடுதலை அடையும்வரை எங்கள் போராட்டம் ஓயப்போவதில்லை. களமும், போராடும் முறையும் மட்டுமே சூழலுக்கு ஏற்ப மாறும். இது கொரோனா காலம், சூழ்நிலை சரியாகட்டும், பிறகு போராடுவோம் என்று காத்திருந்தால், ஒருநாளும் அதற்கான வாய்ப்பு அமையாது. அலை ஓய்ந்து முத்தெடுக்க இயலாது. இருக்கும் களத்தில் உன் போராட்டத்தை துவங்கு என்பதே எம் முன்னோடிகள் கற்றுத் தந்த பாடம்".

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``உலகம் முழுக்க உங்களுக்கு ஆதரவு கிடைத்துள்ளதே..."

``நார்வே உட்பட பல நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் எனக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் முதல் பலரும் என் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். எம் இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல... போரால் பாதிக்கப்பட்ட, வாழ்வாதாரத்தை தொலைத்த, இனப்படுகொலைக்கு உள்ளான 57 நாட்டு மக்களுக்காகவும் எங்கள் குரல் உரத்து ஒலிக்கும்'' என்றவர் சில விநாடிகள் குரலுக்கு ஓய்வுகொடுக்கிறார்.

``இலங்கையிலிருந்து நீங்கள் வெளியேறியபோது உங்கள் வயது 10. 43 வருடங்கள் உங்கள் மண்ணைவிட்டுப் பிரிந்து வாழ்கிறபோதும், தாயகத்தோடு உங்களை இணைத்து வைத்திருக்கும் சக்தி எது?"

``தமிழ்' என்ற மாபெரும் சக்தியே. உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த உணர்வு இருக்கும். என் தந்தை சீவரத்தினம், கணக்காளர். இலங்கையில் வசித்தபோதும் சரி, இங்கிலாந்து வந்த பின்னரும் சரி... எங்கள் வீட்டில் ஒருபோதும் எங்கள் குடும்பம் மட்டுமே வசித்ததில்லை. இலங்கையிலிருந்து படிக்க வந்த மாணவர்கள், அகதிகள் என அனைவரையும் தன் பிள்ளைகளாக அரவணைத்துக்கொண்டவர் என் அம்மா. அம்மா, அப்பா இருவரும் தேச விடுதலைத் தளத்தில், சனநாயக வழியில், காத்திரமான பங்கு வகித்தவர்கள். அவர்கள் வழியில் இப்போது நான் பயணிக்கிறேன்.

அம்பிகை செல்வக்குமார்
அம்பிகை செல்வக்குமார்

போரால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து சந்தித்து வாக்குமூலங்களை சேகரித்திருக்கிறேன். அவை, என் தாய் மண்ணின் அவலத்தை என்னை முழுமையாக அறியவைத்தன. முள்ளிவாய்க்காலின் நிறம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த மக்களின் சாட்சியங்களை எல்லாம் எடுத்த முறையில், எங்கு பனை மரம் இருந்தது, டிரக் எங்கே இருந்தது, ராணுவம் என்ன ஒளிபரப்பியது என்பது வரை சொல்வேன்.

தற்சமயம் தாயகத்தில் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் போர்க்குற்ற தடயங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. வரும் காலத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரமே இல்லாமல் செய்யும் முனைப்போடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. கேள்விகளற்று, தண்டனைகளின்றி இனப்படுகொலைகள் தொடர்கின்றன.''

``அடுத்து..?"

``இந்திய அரசாங்கம், ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46-வது கூட்டத் தொடரில் இலங்கையின் மீது நடவடிக்கை எடுக்க வாக்களிக்க வேண்டும். இனப்படுகொலை புரிந்த அரசின் பக்கம் நின்றோ, நடுநிலை வகித்தோ அது அதர்மத்திற்கு துணை போகாமல், தன் நட்பு நாடுகளையும் இணைத்து, இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்துக்கு வாக்களித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்.''

அம்பிகையின் வார்த்தைகளில் தம் இனத்தின் நீதிக்கான தீ கனன்று கொண்டிருக்கிறது.

- லண்டனிலிருந்து லாவண்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு