Published:Updated:

ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகும் இலங்கை... இந்தியா என்ன செய்ய வேண்டும்?

போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா-விடம் ஒப்புக்கொண்ட தீர்மானத்திலிருந்து விலகப்போவதாக இலங்கை அறிவித்துள்ளது. இதற்கு இந்தியாவின் எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும்?

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது நடந்தேறிய போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என ஐ.நா-விடம் ஒப்புக்கொண்ட தீர்மானத்திலிருந்து விலகப்போவதாக, இலங்கை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், காணாமல் போனவர்கள் நிலையும், போர்க்குற்றம் தொடர்பான விசாரணையும் என்னவாகும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஐ.நா
ஐ.நா

போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வா, இலங்கையின் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அப்போதே அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சில்வாவின் நியமனத்திற்கு அமெரிக்கா கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சவேந்திர சில்வாவும் அவருடைய குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழையத் தடைவிதித்துள்ளது.

இதற்கு, இலங்கை கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சர்வதேச விதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கை அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்துக்கொள்கிறது. முந்தைய அரசு செய்த வரலாற்றுத் துரோகத்தால்தான் (ஐ.நா தீர்மானங்கள்) மற்ற நாடுகள், நமது ராணுவத்தைச் சேர்ந்தவர்களைக் குறை கூறுகின்றன.

சில்வா - மகிந்த ராஜபக்சே
சில்வா - மகிந்த ராஜபக்சே

நமது ராணுவத்தினர்மீது இல்லாத குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு, அந்தத் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டது. எங்கள் அரசு, அந்தத் தீர்மானங்களிலிருந்து விலக முடிவெடுத்துள்ளது. மற்ற அனைத்துக் கட்சிகளுமே இதை ஆதரிக்கின்றனர் அல்லது மௌனம் காக்கின்றனர். இதன்மூலம் நாட்டை முன்னிலைப்படுத்தும் தேசப்பற்றுள்ளவர்கள் ஒருபுறமும் நாட்டுக்குத் துரோகம் இழைப்பவர்கள் மறுபுறமும் இருப்பதும் தெளிவாகிறது” என்றுள்ளார்.

ஐ.நா தீர்மானத்திலிருந்து விலகும் இலங்கை... இனி போர்க்குற்ற விசாரணை நடக்குமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதன்மூலம், காணாமல் போனவர்களைத் தேடுகின்ற பணி, போர்க்குற்றம் தொடர்பான விசாரணை என அனைத்துமே ஸ்தம்பித்துப்போகும் நிலை உருவாகியுள்ளது. இலங்கையின் இந்த முடிவுக்கு ஐ.நா-வும் மற்ற நாடுகளும் எவ்வாறு எதிர்வினை ஆற்றுகின்றன என்பதைப் பொறுத்துப் பார்க்க வேண்டும்.

நிலாந்தன்
நிலாந்தன்

இதுபற்றி இலங்கை எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர் நிலாந்தன் நம்மிடம் கூறுகையில், ``சர்வதேச அளவில் ஒப்புக்கொண்ட ஒரு தீர்மானத்திலிருந்து இலங்கை தன்னிச்சையாக வெளியேற முடியாது. ஜெனிவா கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிடும். எனவே, இலங்கை திடீரென இப்படியொரு அறிவிப்பை வெளியிட முடியாது. அதற்கென சில வழிமுறைகள் இருக்கின்றன. ஐ.நா கூட்டத்தில் தீர்மானத்தின்மீது இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படும்.

அமெரிக்கா, ராஜபக்சேவுக்கு ஆதரவான நாடு இல்லை. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்படுத்தினாலும், உள்நாட்டில் இது ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலையையே உருவாக்கும். தங்களின் யுத்தவெற்றியை மேற்குலக நாடுகள் தட்டிப்பறிக்கப் பார்க்கின்றன என்கிற பிரசாரத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன. ராஜபக்சேவின் அறிக்கை, சர்வதேச அரங்கைக் காட்டிலும் அடுத்துவருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரமாகவே பார்க்கப்படுகிறது” என்றார்.

``ஈழத் தமிழர்களில் விமர்சகர்கள் அளவுக்குப் படைப்பாளிகள் பெருகவில்லை!'' - நிலாந்தன்

தி.மு.க-வைச் சேர்ந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில், ``இந்தியா இந்த தீர்மானத்திலிருந்து விலகுவதை கடுமையாக எதிர்க்க வேண்டும். இந்தியாவைச் சுற்றியுள்ள எந்த நாடுகளுடனும் நமக்கு சுமுகமான உறவு இல்லை. இலங்கையிலும் இந்தியா தன்னுடைய ஆதிக்கத்தை சீனாவிடம் இழந்துவிடக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இந்த நிலையில், ஈழத் தமிழர்களின் நலன் தொடர்பாகப் பேசவும், இலங்கை ராஜாங்க ரீதியாக எதிர்கொள்ளவும் இந்தியா இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். சர்வதேச அளவில் இந்த அழுத்தத்தை உருவாக்க நாம் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், இந்தியா அதற்கு தவறிவிட்டது. சர்வதேச அளவில் ராஜதந்திர ரீதியில் செயல்பட்டு இந்தியா இலங்கைக்கு நெருக்கடியை உருவாக்குவதோடு, ஈழத் தமிழர்களின் கோரிக்கையையும் நிறைவேற்ற முடியும்” என்றார்

திருமுருகன் காந்தி
திருமுருகன் காந்தி

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி நம்மிடம் கூறுகையில், ``2014-ம் ஆண்டு ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் முற்றிலுமாக நீர்த்துப்போகச் செய்யப்பட்டுவிட்டது. மே 17 இயக்கம் 30/1 தீர்மானத்தை ஆரம்பம் முதலே ஏற்கவில்லை. போர்க்குற்றம் செய்த நாட்டுடனே சேர்ந்து போடப்பட்ட தீர்மானம் இது. இதில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றம் தொடர்பான விசாரணை எதற்குமே இலங்கை ஒத்துக்கொள்ளவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளின் முழு ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது இந்த நாடுகள் என்ன பதில் சொல்லப்போகின்றன? இலங்கை ஒப்புக்கொண்ட குறைந்தபட்ச உத்தரவாதங்களையும் ஏற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இதற்கு, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் உடந்தையாகவே உள்ளன. பிராந்திய நலன்களைக் கருத்தில்கொண்டு தமிழக சட்டமன்றம் போர்க்குற்றம் தொடர்பாக ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்த தீர்மானத்தில் வாக்களித்த அனைத்து அரசியல் கட்சிகளும் இது தொடர்பாகக் கேள்வியெழுப்ப வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு