இலங்கை மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து, நேற்றைய தினம் அந்த நாட்டின் புதிய பிரதமராக 6-வது முறையாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் இலங்கையின் பிரதமராக மிக இக்கட்டான சூழலில் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருக்கிறார். பதவியேற்ற கையோடு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரணில் விக்ரமசிங்க, ``இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். எங்களிடம் பொருளாதார செயல் திட்டம் இருக்கிறது. நான் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவேன். எங்கள் அரசாங்கத்தின் கீழ் இலங்கை - இந்தியா இடையிலான உறவு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்தியா- இலங்கையுடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும்'' என்றார்.
