Published:Updated:

கனடா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்... புறக்கணித்த இந்தியா! - என்ன காரணம்?

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

இந்தியாவில் நடைபெற்றுவரும் இந்த விவகாரம் குறித்து உலக நாடுகள் அதிகம் கருத்துகளை முன்வைக்காத நிலையில், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ``விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும்’’ என்றார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வரலாறு காணாத வகையில் ஒன்று திரண்டு இன்று பத்தாவது நாளாகத் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

விவசாய அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அரசுத்தரப்பில் ஏற்கெனவே பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தோல்வியில் முடிந்தநிலையில், 5 -ம்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

ட்ரூடோ
ட்ரூடோ

இந்தியாவில் நடைபெற்றுவரும் இந்த விவகாரம் குறித்து உலக நாடுகள் அதிகம் கருத்துகளை முன்வைக்காத நிலையில், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ``விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட கனடா என்றுமே துணைநிற்கும். இந்தியாவில் நிலவிவரும் இந்தப் போராட்டச் சூழல் மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது’’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ``கனடப் பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்துகள் தெரிவித்துவருகிறார்கள். இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்துத் தெளிவாக அறியாமல் அதில் தலையிடுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கனடாவின் கருத்துகளுக்கு, கனட தூதருக்கு நேரில் அழைப்புவிடுத்து இந்த விவகாரம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

டெல்லி:`விருதை திருப்பி ஒப்படைப்பேன்’ ; கதகதப்பான ஆடைகளுக்கு உதவி! - விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு

பின்னர், இது குறித்து கனடா நாட்டைச் சேர்ந்த ஊடகங்கள் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பியபோது, ``உலகில் நடைபெறும் எந்த ஒர் அமைதியான போராட்டத்துக்கும் கனடா அரசாங்கம் துணை நிற்கும். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று பதிலளித்தார் ட்ரூடோ.

இந்தநிலையில், நாளை (07.12.2020) கனடா தலைநகர் ஒட்டாவா நகரில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் (François-Philippe Champagne) தலைமையில் நடைபெறவிருக்கும் கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் அவர் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சில நிகழ்வுகளின் காரணத்தாலும், நேரமின்மை காரணமாகவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாது என இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

ஆனால், டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கனடப் பிரதமரின் கருத்து காரணமாகவே இந்தியா இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சில நிகழ்ச்சிகள் இருந்ததன் காரணமாகவே அவரால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதே அதிகாரபூர்வ தகவல்.

கடந்த மாதம் நடைபெற்ற இதே போன்றதொரு கொரோனா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் போராட்டம்; ஜஸ்டின் ட்ரூடோ கருத்து... கனடா தூதரை அழைத்து எதிர்ப்பைப் பதிவு செய்த இந்தியா!
அடுத்த கட்டுரைக்கு