Published:Updated:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல்... கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியா..!

ஜம்மு காஷ்மீர் - லடாக்
ஜம்மு காஷ்மீர் - லடாக் ( Maps of India )

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தேர்தல் நடத்தும் பாகிஸ்தான் அரசின் முடிவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுத் தேர்தல் நடத்த பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு தற்போது பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மன்னர் ஹரி சிங்
மன்னர் ஹரி சிங்

இந்தியா பிரிவினையின்போது ஜம்மு - காஷ்மீர் மாகாணம், இந்தியா - பாகிஸ்தான் என எந்த நாட்டுடனும் இணையாமல் சுதந்திரமாக இருந்துவந்தது. ஆனால், பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்தபோது இந்தியாவின் உதவியை நாடினார் காஷ்மீர் மன்னர் ஹரி சிங். ஜம்மு - காஷ்மீர் முழுவதுமாக இந்தியாவுடன் இணைய வேண்டும் என்கிற நிபந்தனையை ஏற்றுக்கொண்டு இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ஹரி சிங். இந்திய ராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது. அப்போதிலிருந்து சிறப்பு அந்தஸ்து கொண்ட இந்திய மாநிலமாக காஷ்மீர் இருந்துவந்தது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த ஆண்டு நீக்கியது மத்திய அரசு.

அமெரிக்கா சொன்னால், ஆக்கிரமிக்கத் தயார்! இஸ்ரேலின் புதிய சர்ச்சை

ஆனால், ஒருங்கிணைந்த ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் ’பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்திய அரசு ஒட்டுமொத்த ஜம்மு - காஷ்மீர் மீதும் தனக்குத்தான் இறையாண்மை உள்ளது என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது. இந்திய நாடாளுமன்றத்தில் 1994-ம் ஆண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ”ஒட்டுமொத்த ஜம்மு - காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, பாகிஸ்தான்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும்” என்கிறது.

தொடரும் ஊரடங்கு... மிரட்டும் கொரோனா; என்ன செய்யப்போகிறது காஷ்மீர்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகள் சுயாட்சி கொண்ட நிர்வாகப் பிரதேசமாக இருந்து வருகிறது. ஆசாத் ஜம்மு - காஷ்மீர் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தான் என இரண்டு பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கென தனி உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் உள்ளது. ஆசாத் ஜம்மு - காஷ்மீர் பகுதி 1974-ம் ஆண்டு இயற்றப்பட்ட இடைக்கால அரசியலமைப்புச் சட்டத்தின்படி நிர்வகிக்கப்படுகிறது. ஆசாத் ஜம்மு - காஷ்மீருக்குத் தனி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிர்வாக அமைப்பு உள்ளன. கில்ஜித் - பல்டிஸ்தான் பகுதிகள் கராச்சி ஒப்பந்தந்தின்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இது நேரடியாகப் பாகிஸ்தான் அரசின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

2009-ம் ஆண்டே கில்ஜித் - பல்டிஸ்தான் பகுதிகளுக்கு தேர்தல் நடந்த பாகிஸ்தான் அரசு முயன்றது. அப்போதிலிருந்தே இந்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போது மீண்டும் கில்ஜித் - பல்டிஸ்தான் பகுதிகளுக்கு பொதுத் தேர்தல் நடத்தவும், அதுவரை இடைக்கால அரசை நியமிக்கவும் பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அரசு கில்ஜித் - பல்டிஸ்தான் பகுதிக்கும் தன்னுடைய விசாரணை வரம்பை நீட்டித்திருந்தது. இதற்கும் இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்

பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா தன்னுடைய கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தன்னுடைய பதிலில், ``இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட இணைப்பு ஒப்பந்தத்தின்படி ஜம்மு - காஷ்மீர் - லடாக் முழுவதுமாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கில்ஜித் மற்றும் பல்டிஸ்தான் பகுதிகளும் அடக்கம். சட்டப்பூர்வமாக பாகிஸ்தான் அரசுக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதிகளில் எந்தவித அதிகாரமும் முகாந்திரமும் இல்லை.

இந்தியப் பகுதிகளில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்தும் தொடர் முயற்சிகளை இந்தியா முற்றிலுமாக நிராகரிக்கிறது. இந்தியா நாடாளுமன்றத்தால் 1994-ம் ஆண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலே அரசின் நிலைப்பாடு உள்ளது. பாகிஸ்தான்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பையும், அங்கு நிகழ்த்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களையும் மறைக்க முடியாது” என்றுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம், “இந்திய அரசு கடந்த ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ஐ.நா தீர்மானங்களுக்கு எதிரானது. ஒட்டுமொத்த ஜம்மு - காஷ்மீரும் சர்ச்சைக்குரிய பிரதேசமே” என்றுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு