Published:Updated:

`இந்தியாவிலிருந்து போகமாட்டோம்' எனும் ரோஹிங்யாக்களை திருப்பி அனுப்ப முடியுமா..? சட்டம் சொல்வது என்ன?

இந்தியாவில் உள்ள ரோஹிங்யா அகதிகளை மியான்மருக்கு திருப்பியனுப்ப வேண்டும் என மத்திய அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. ஆனால், சர்வதேச சட்டங்கள் என்ன சொல்கின்றன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில், ரோஹிங்யா முஸ்லிம்கள் அந்த நாட்டு ராணுவத்தால் இனப்படுகொலைக்கு உள்ளாகிவருகின்றனர். மியான்மரின் ரகைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் ரோஹிங்யா மக்கள், உலகின் மிகப்பெரிய நாடற்ற மக்கள் குழுவாக (statelessness) அறியப்படுகின்றனர்.

மியான்மரைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள், 1982-ம் ஆண்டு மியான்மர் அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் மூலம் குடியுரிமையை இழந்தனர். 2014-ம் ஆண்டு, மியான்மரில் எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் அவர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை. குடியுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமை அற்றவர்களாகத்தான் முஸ்லிம்கள் அங்கு வசித்துவருகின்றனர்.

மியான்மர்
மியான்மர்

மியான்மர், பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. கிறிஸ்துவர்கள், இந்துக்கள், முஸ்லிம்களும் மியான்மரில் வசித்துவருகின்றனர். மியான்மர் அரசியலமைப்புச் சட்டத்தில், பெரும்பான்மை பௌத்த மதத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. "ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரைச் சேர்ந்த இனக்குழு கிடையாது, பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வங்கத்திலிருந்து தேயிலை தோட்டப் பணிகளுக்காக மியான்மருக்கு வந்தவர்களே ரோஹிங்யா மக்கள்" என்று மியான்மர் அரசு சொல்கிறது.

மியான்மரில் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட ரோஹிங்யா மக்கள், இந்தியா, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர். 40,000-க்கும் அதிகமான ரோஹிங்யா அகதிகள் இந்தியா முழுவதும் வசித்துவருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரோஹிங்யா பாதுகாப்பு ஆயுதக் குழுவுக்கும் மியான்மர் ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்த ராணுவ ஒடுக்கு முறையில், நூற்றுக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். உயிர் பிழைப்பதற்காக ஏழு லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா மக்கள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர். ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளின் உதவியோடு அவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது, வங்கதேசத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யாக்கள் அகதிகளாக வசித்துவருகின்றனர். வங்கதேசத்தில் வசிப்பவர்களுக்கு இந்தியா அடிப்படைப் பொருளுதவிகளை மட்டும் செய்து கொடுத்துள்ளது.

ஆங் சான் சூகி
ஆங் சான் சூகி
ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக தொடரப்பட்ட வழக்கு..சர்வதேச நீதிமன்ற விசாரணயில் ஆங் சான் சூகி!

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்யாக்கள், மியான்மர் திரும்புவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 10 லட்சத்துக்கும் அதிகமான அகதிகளைச் சமாளிக்கக்கூடிய அளவுக்கு வங்கதேசப் பொருளாதாரமும் இல்லை. மியான்மரில் ரோஹிங்யா மக்கள் எதிர்கொண்டது, ‘இன அழிப்பு’ என ஐ,நா மன்றம் அறிவித்துள்ளது. மியான்மரில் பணிபுரிந்து, இதுகுறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை மியான்மர் அரசு சிறை வைத்துள்ளது. ரோஹிங்யா மக்களின் நிலை பற்றி விசாரிக்க வரும் சர்வதேச குழுக்களுக்கும் விசா மறுத்துவருகிறது. மியான்மரில் நடைபெற்ற இனப்படுகொலையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற மியான்மரின் ‘ஸ்டேட் கவுன்சிலர்’ ஆங் சான் சூகி, தன் ராணுவத்தைப் பாதுகாக்க சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிவருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மியான்மரிலும் சர்வதேச அரங்கிலும் தற்போதைய சூழ்நிலை இவ்வாறிருக்க, இந்தியாவிலுள்ள ரோஹிங்யாக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இந்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தில், ரோஹிங்யா முஸ்லிம்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. “ரோஹிங்யாக்கள் நேரடியாக இந்தியாவுக்குள் வருவதில்லை, வங்கதேசத்தின் வழியாக திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள்” என்பதை குடியுரிமைச் சட்டத்தில் ரோஹிங்யாக்கள் சேர்க்கப்படாததற்கான காரணமாக, அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

ரோஹிங்யா
ரோஹிங்யா

இதற்கு மத்தியில், "இந்தியாவில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை விரைவில் நாடு கடத்தப்பட வேண்டும் என்பதுதான் அரசின் அடுத்த நடவடிக்கை" என மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் பேசியிருக்கிறார். ரோஹிங்யா முஸ்லிம்களை நாடு கடத்துவதற்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ரோஹிங்யாக்களை நாடு கடத்த உச்ச நீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி, இந்திய அரசு அவ்வப்போது ரோஹிங்யாக்களை நாடுகடத்திவருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஏழு ரோஹிங்யாக்களை நாடுகடத்தி, மியான்மர் ராணுவத்திடம் இந்திய அரசு ஒப்படைத்தது. அதனைத் தடுக்க வேண்டும் எனத் தொடுக்கப்பட்டிருந்த அவசர வழக்கையும் விசாரிக்க அப்போது உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ரோஹிங்யாக்களை நாடுகடத்த வேண்டும் என்கிற அரசின் கொள்கை முடிவில் தலையிட வேண்டாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கு ஒரு தீர்வு எட்டப்படவில்லை. கடந்த மாதம், ஒரு ரோஹிங்யா தம்பதியை நாடுகடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. அவர்கள், மனுக்கள் விசாரிக்கப்படும் வரை தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஐ.நா
ஐ.நா

இதற்கிடையே, தற்போது மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்கின் பேச்சு வந்திருக்கிறது. சர்வதேச சட்டங்களில் ‘Non-refoulment’ என்பது அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி. ‘Non-refoulment’ என்றால், திரும்பிச் செல்ல மறுக்கும் உரிமை என்று பொருள்படும். இனக்கலவரம், இனப்படுகொலை போன்ற காரணங்களால் ஒருவர் சொந்த நாட்டைவிட்டு மற்ற நாடுகளுக்கு இடம்பெயர நேர்கிறது. அவ்வாறு இடம்பெயர்ந்த ஒருவர், தன்னுடைய சொந்த நாட்டில் அச்சுறுத்தல் அல்லது உயிருக்கு ஆபத்தை எதிர்கொண்டால், திரும்பிச் செல்ல மறுக்கும் உரிமை அவருக்கு உள்ளது. அவரின் விருப்பத்தை மீறி எந்த நாடும் அவரை சொந்த நாட்டிற்கு நாடு கடத்தமுடியாது. திரும்பிச் செல்வது என்பது ஒருவர் தாமாக முன்வந்து எடுக்கக்கூடிய முடிவு என்று ஐ.நா சட்டங்கள் தெரிவிக்கின்றன.

மியான்மரில் நடந்த ரோஹிங்யா மக்களின் இன அழிப்பு தொடர்பான வழக்கை, சர்வதேச நிதிமன்றம் விசாரித்து வருகிறது. 2017 ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு வெளியேறிய ரோஹிங்யாக்கள், மியான்மர் திரும்புவது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது. இவற்றில் எந்தத் தீர்வும் எட்டப்படாத சூழ்நிலையில், இந்தியாவில் உள்ள ரோஹிங்யாக்களை நாடுகடத்த வேண்டும் என்கிற அவசரம் இந்திய அரசுக்கு ஏன் வந்துள்ளது என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

ரோஹிங்யா
ரோஹிங்யா
`மனித நேயத்தை உறுதிபடுத்துங்கள்!'- ரோஹிங்யா தம்பதியைக் காப்பாற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்றம்

சீனாவின் அச்சுறுத்தலால் திபெத்திலிருந்து இடம்பெயர்ந்த அகதிகள், 60 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்துவருகின்றனர். திபெத்தியர்களின் நாடுகடந்த அரசு, இந்தியாவின் தரம்சாலாவில்தான் இயங்கிவருகிறது.

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'Non-refoulment' விதியின் படி, மியான்மரில் ரோஹிங்யாக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது உறுதிசெய்யப்படும் வரை திரும்பிச் செல்ல மறுக்கும் உரிமை ரோஹிங்யாக்களுக்கும் அவர்களைப் பாதுகாக்கவேண்டிய கடமை இந்திய அரசுக்கும் உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு