Published:Updated:

வாஷிங்டன் வன்முறை... போராட்டக் களத்தில் தென்பட்ட இந்திய தேசியக்கொடி? #ViralVideo

வாஷிங்டன் - இந்திய தேசியக்கொடி
வாஷிங்டன் - இந்திய தேசியக்கொடி ( Twitter )

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் வெற்றிபெற்றதை அந்நாட்டின் நாடாளுமன்றம் அதிகாரபூர்வ சான்றிதழ் வழங்கி அங்கீகரித்திருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை, தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தரப்பு ஏற்கவில்லை. `எலெக்டோரல் காலேஜ்’ எனப்படும் தேர்வாளர்களின் வாக்குகளை வென்று பெரும்பான்மை அடிப்படையில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான அதிகாரபூர்வச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வாஷிங்டனிலுள்ள `Capitol Hill' என்றழைக்கப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தது.

வாஷிங்டன் வன்முறை
வாஷிங்டன் வன்முறை

முன்னதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்பாகக் கூடிய ட்ரம்ப் ஆதரவாளர்கள், கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தின் உள்ளே புகுந்து அங்கிருந்த பொருள்களைச் சூறையாடினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் வெடித்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவம் `அமெரிக்க வரலாற்றின் கறுப்புப் பக்கங்கள்’ எனப் பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தச் சம்பவம் குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்துக் வெளியே ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க தேசியக் கொடி, ட்ரம்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கொடிகளைக் கையில் ஏந்தியடி போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் இந்திய தேசியக்கொடியையும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிடித்தபடி நிற்கிறார்.

பத்திரிகையாளர் அலிஜாண்ட்ரோ ஆல்வரெஸ் (Alejandro Alvarez) பகிர்ந்திருக்கும் வீடியோவில் இந்திய தேசியக்கொடியைப் பிடித்தபடி ஒருவர் நிற்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 52 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு