Published:Updated:

`இனவெறியை அனுபவித்திருந்தால் வலி தெரியும்'- இங்கிலாந்து பிரதமரை தெறிக்கவிட்ட இந்திய வம்சாவளி எம்.பி

Tanmanjeet Singh Dhesi
Tanmanjeet Singh Dhesi

அரசியல் சூழ்நிலைகளால் தகித்துக்கொண்டிருக்கும் போரிஸ் ஜான்சனை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி-யின் பேச்சு மேலும் உஷ்ணமாக்கியிருக்கிறது.

பிரெக்ஸிட் விவகாரத்தில் நிலவும் இழுபறியின் விளைவாக, இரண்டாண்டுகளாய் நடந்த போராட்டத்திற்குப் பிறகு பதவி விலகினார், தெரசா மே. அவருக்கு அடுத்தபடியாக, அந்நாட்டு அமைச்சர்களால் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டவர்தான் போரிஸ் ஜான்சன். பிரிட்டனின் சர்ச்சை நாயகன் என அழைக்கப்படும் இவர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் பிரிட்டன் வெளியேறுவதற்கான பணிகளை மேற்கொண்டுவந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டதால், ஒப்பந்தம் இல்லாமலேயே பிரிட்டன் வெளியேறுவதற்கு முயற்சி எடுத்தார், ஜான்சன். அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் மசோதாவை தாக்கல் செய்தன. இந்த மசோதாவுக்கு 327 பேர் ஆதரவும், 299 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததால், மசோதா மேலவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

boris johnson
boris johnson

அதேபோல், பொதுத்தேர்தல் நடத்துவதற்கான மசோதாவிலும் ஜான்சனுக்கு தோல்வி ஏற்பட்டது. இதைவிட ஒருபடி மேலே போய், ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்த்த எம்.பி பிலிப் லீ என்பவர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்குத் தாவினார். ``கன்சர்வேட்டிவ் கட்சி முன்புபோல் இல்லை. அரசியல் சூழ்ச்சிகளும் பொய்களும் அந்தக் கட்சியில் நிறைந்துள்ளன. பிரெக்ஸிட் விவகாரத்தில், கன்சர்வேட்டிவ் கட்சியின் நிலைப்பாடு மக்களுக்கு ஆபத்தானது'' இதுதான் தன்னுடைய விலகலுக்குக் காரணம் என பிலிப் லீ தெரிவித்தார். இவரின் கட்சித் தாவலால் போரிஸ் ஜான்சன் தனது பெரும்பான்மையை இழந்துள்ளார்.

இந்த மாதிரியான அரசியல் சூழ்நிலைகளால் தகித்துக்கொண்டிருக்கும் போரிஸ் ஜான்சனை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி-யின் பேச்சு, மேலும் உஷ்ணமாக்கியிருக்கிறது. ‘முஸ்லிம் பெண்களின் புர்கா அணிந்த முகங்கள், தபால் பெட்டிகளைப் போல இருக்கின்றன அல்லது வங்கியைக் கொள்ளையடிக்க வருபவர்கள் போல் உள்ளன’ என வழக்கம்போல கடந்த வருடம் செய்தித்தாள் ஒன்றுக்கு ஜான்சன் பேட்டியளித்தார். இந்தப் பேச்சு சர்ச்சையாகிப் போனது. ஜான்சனின் `இனவெறி' தொடர்பான இந்த சர்ச்சைப் பேச்சை நேற்றைய கேள்விநேரத்தில் எதிர்த்துப் பேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் தொழிலாளர் கட்சி எம்.பி-யுமான தன்மன்ஜீத் சிங் தேசி,

``மிஸ்டர் சபாநாயகர், நான் தலைப்பாகை அணிய முடிவுசெய்தால் அல்லது நீங்கள் சிலுவையை அணிய முடிவுசெய்தால் அல்லது அந்தப் பெண், ஹிஜாப் அல்லது புர்கா அணிய முடிவுசெய்தால், இந்த சபை உறுப்பினர்கள் எங்கள் தோற்றத்தைப் பற்றி தரக்குறைவான கருத்துகளை வெளியிடுவதற்கான அனுமதி அளிப்பதாக அர்த்தமா?

Tanmanjeet Singh Dhesi
Tanmanjeet Singh Dhesi

எங்களைப்போன்று நாடு கடந்து வந்தவர்களைப் பொறுத்தவரை, `டவல் ஹெட் அல்லது தலிபான் போன்ற பெயர்களாலும் மூன்றாம் நிலத்திலிருந்து வந்தவர்கள்' எனப் பலர் அழைப்பதையும் சிறு வயதிலிருந்தே எதிர்கொண்டுவந்திருக்கிறோம். நீங்கள் எப்போதாவது இனவெறி அல்லது பாகுபாட்டை அனுபவித்திருந்தால், இந்தப் பிளவுபடுத்தும் பிரதமரால் தனிமைப்படுத்தப்பட்ட முஸ்லிம் பெண்கள் உணர்ந்த வேதனையையும் வலியையும் நீங்கள் முழுமையாக உணரலாம். ஏற்கெனவே பாதிக்கப்பட்டு வேதனையையும் வலியையும் தாங்கிக்கொண்டு இருக்கும் முஸ்லிம் பெண்களை நாம் பாராட்டாமல், `வங்கிக் கொள்ளையர்கள் மற்றும் லெட்டர்பாக்ஸைப் போல தோற்றமளிக்கிறார்' என இனவெறியாகப் பேசுகிறோம்.

போரிஸ் என்னும் புதிய ரட்சகர்!

மோசடி மற்றும் துடைத்தெறியப்படும் விசாரணைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதற்குப் பதிலாக, பிரதமர் தனது கேவலமான மற்றும் இனவெறி கருத்துகளுக்கு எப்போது மன்னிப்பு கேட்பார்? வெறுக்கத்தக்க வகையிலான குற்றங்கள் அதிகரிப்புக்கு வழிவகுப்பது என்னவோ இனவெறி கருத்துகள்தான். தனது கட்சிக்குள்ளேயே இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துவருவதால், கன்சர்வேடிவ் கட்சிக்குள் நிலவும் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான பயம், வெறுப்புகுறித்து விசாரணைக்கு பிரதமர் எப்போது உத்தரவிடுவார்?" என ஆவேசமாகப் பேசி, ஜான்சனைப் பார்த்து அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினார். தேசி பேசி முடித்ததும் நாடாளுமன்றத்தில் இருந்த ஒட்டுமொத்த எம்.பி-களும் அவருக்கு கைதட்டிப் பாராட்டினர். அவர் பேச்சுகுறித்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

Tanmanjeet Singh Dhesi
Tanmanjeet Singh Dhesi
போரிஸ் ஜான்சனின் `இந்தியப் பாசம்' - இங்கிலாந்து அமைச்சரவையில் கோலோச்சும் இந்திய வம்சாவளியினர்!

பஞ்சாப்பை பூர்வீகமாகக்கொண்ட தேசி குடும்பத்துடன் இங்கிலாந்தில் செட்டிலாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. தேசிக்கு பூர்வீகம் இந்தியாவாக இருந்தாலும் இங்கிலாந்திலேயே பிறந்துவளர்ந்தவர். பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருக்கும் தேசி, 2017ல்தான் எம்.பி-யாகப் பதவியேற்றார். அதற்கு முன், கிரேவ்ஷாம் பகுதியின் மேயராகவும் இருந்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு