Published:Updated:

‘`என் வாழ்நாளிலேயே இது ஸ்பெஷலான நாள்’’

லியோ வரத்கர்
லியோ வரத்கர்

அயர்லாந்து பிரதமர் நெகிழ்ச்சி

சுந்தர் பிச்சை, இந்திரா நூயி என பன்னாட்டு நிறுவனங்களின் உச்சமான பதவிகளை அலங்கரித்த இந்தியர்கள் ஏராளம். ஆனால், அவர்களுக்குக் கிடைத்த புகழ் வெளிச்சம், அரசியலில் ஜொலித்த இந்திய வம்சாவளியினருக்குக் கிடைக்கவில்லை என்பதுதான் யதார்த்தம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், ஐரோப்பிய நாடான அயர்லாந்தின் பிரதமராக உயர்ந்துள்ள செய்தி, பெரியளவில் ஊடகங்களில் வெளிவரவில்லை. அந்தச் சாதனை மனிதரின் பெயர், லியோ வரத்கர்.

மகாராஷ்டிர மாநிலம் சிந்துடுர்க் மாவட்டத்தில் உள்ள வரத் என்கிற கொங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் வரத்கர். பணிநிமித்தமாக லண்டனுக்குச் சென்ற அவர், ஐரீஸ் நாட்டைச் சேர்ந்த மிரியம் என்கிற பெண்ணைக் காதலித்து மணந்தார். அதன் பிறகு, அசோக் வரத்கர் குடும்பம் அயர்லாந்துக்குக் குடிபெயர்ந்தது. அயர்லாந்து தலைநகர் டப்ளினில் லியோ வரத்கர் பிறந்தார். தந்தையைப்போலவே லியோவும் டாக்டர். தன் 20-வது வயதில் டாக்டருக்குப் படித்துக்கொண்டிருக்கும்போதே தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் லியோவுக்கு உண்டு. அயர்லாந்தில், நம் ஊரில் நடப்பது போன்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், முதல் தேர்தல் அவருக்கு தோல்வியையே தந்தது.

டாக்டர் படிப்பை முடித்த பிறகு 2007-ம் ஆண்டு அயர்லாந்தின் பிரபலமான ‘ஃபின் கயால்’ என்ற கட்சியில் லியோ தன்னை இணைத்துக்கொண்டார். அதற்குப் பிறகு, அரசியல் வாழ்க்கையில் அவர் தோல்வியையே சந்திக்கவில்லை. தொட்டதெல்லாம் வெற்றிதான்.

லியோ வரத்கர்
லியோ வரத்கர்

2017-ம் ஆண்டு அயர்லாந்து பிரதமராக இருந்த என்டா கென்னி பதவி விலக, கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றியதுடன் அயர்லாந்து பிரதமரும் ஆனார் லியோ. அப்போது, லியோவின் வயது 38 மட்டுமே. அயர்லாந்தின் அரசியல் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆனதும் அதுவே முதன்முறை. இளம் வயதில் ஒரு நாட்டுக்கே பிரதமரானாலும், லியோ சாந்த சொரூபமானவர். அயர்லாந்தைப் பொறுத்தவரை, தன் பாலின உறவுக்குத் தடையில்லை. 2015-ம் ஆண்டே தன்னை ‘கே’ என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார் லியோ. இந்தியாவுக்கு பலமுறை வந்தபோதிலும், இதுவரை அவரின் தந்தை பிறந்த ஊரைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தந்தை பிறந்த கிராமத்துக்கு இப்போதுதான் முதன்முறையாக குடும்பத்துடன் விசிட் அடித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 28-ம் தேதி, லியோ குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் கோவா வந்து இறங்கினர். அயர்லாந்து பிரதமரின் வருகை குறித்து இந்திய அரசுக்குத் தகவல் கிடைத்ததும், தடபுடலாக வரவேற்புக்கும் பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், ‘இது என் தனிப்பட்ட சுற்றுப்பயணம். அதனால், எனக்கு பாதுகாப்பு எதுவும் வேண்டாம்’ என்று அன்புடன் மறுத்துவிட்டார்் லியோ. எனினும், சற்று தொலைவில் மஃப்டியில் இருந்தபடி போலீஸ் அதிகாரிகள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.

வரத் கிராமத்தில் வசித்துவரும் லியோவின் சகோதரியும் ஒடிசி கலைஞருமான சுபைதா வீட்டில் லியோ தங்கினார். ‘நம் ஊரைச் சேர்ந்தவரின் மகன் அயர்லாந்து பிரதமரா?!’ என்று மகாராஷ்டிர மக்கள் அசந்துபோயினர். அவர் வருகையை ஒட்டுமொத்த வரத் கிராமமுமே கோலாகலமாகக் கொண்டாடியது. கிராமத்தைச் சுற்றிப்பார்த்த லியோவும் அந்த மக்களுடன் எளிதாகவே மிங்கிளாகிவிட்டார். உறவினர்களைத் தேடித் தேடிச் சென்று பேசினார். அந்த மக்கள் லியோவை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடாத குறைதான், அந்தளவுக்கு நெக்குருகவைத்துவிட்டனர்.

லியோ வரத்கர்
லியோ வரத்கர்

டிசம்பர் 30-ம் தேதி, வரத் கிராமத்தில் உள்ள ஆலயத்துக்குச் சென்று லியோ பிரார்த்தனை செய்தார். கோயில்களில் லியோ பெயரில் அர்ச்சனைகளும் நடைபெற்றன. கொங்கணி பாணியில் வறுத்த மீன் உள்ளிட்ட இந்திய உணவு வகைகளை ருசித்த லியோ, ‘`என் வாழ்நாளிலேயே இது ஸ்பெஷலான நாள்’’ என்று நெகிழ்ந்தார்.

தந்தை மண்ணின் நினைவுகளுடன் அயர்லாந்துக்குக் கிளம்பிய லியோ, ‘`மீண்டும் ஒருமுறை இந்தியா வருவேன். அது அரசுமுறைப் பயணமாக இருக்கும்’’ என்று கூறிச் சென்றுள்ளார்.

வெல்கம்!

அடுத்த கட்டுரைக்கு