Published:Updated:

`அவர்கள் எங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், ஆனால்..!’ - இரானின் நடவடிக்கையை விவரிக்கும் ட்ரம்ப்

ட்ரம்ப்
ட்ரம்ப் ( AP )

இராக்கில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது இரான் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இரான் - அமெரிக்கா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ள நிலையில், நேற்று முன்தினம் இராக்கில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. சரமாரியாக 15 ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டன. இதனால் அமெரிக்காவுக்குப் பலத்த அடி கொடுக்கப்பட்டுள்ளதாக இரான் தெரிவித்தது, மேலும், இந்தத் தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாகவும் இரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இரான் ஏவுகணை தாக்குதல்
இரான் ஏவுகணை தாக்குதல்

ஆனால் அவை உண்மையில்லை, இரான் நடத்திய தாக்குதலில் ஒரு அமெரிக்க வீரர் கூட உயிரிழக்கவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரான் நடத்திய தாக்குதல் தொடர்பாக நேற்று, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது ட்ரம்ப் இதைக் கூறியுள்ளார். ``இராக்கில் நடந்த தாக்குதலில் ஒரு அமெரிக்க வீரருக்குக் கூட பாதிப்பு ஏற்படவில்லை என்ற மகிழ்ச்சியான செய்தியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள், இராக் வீரர்கள் என யாரும் உயிரிழக்கவில்லை. விமானத் தளத்தில் சாதாரண சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது.

`ட்ரம்ப் சொன்னபடியே செய்தோம்!’- இரானின் முக்கியத்  தலைவரைக் கொன்ற அமெரிக்கா

நம் சிறந்த அமெரிக்கப் படை அனைத்துக்கும் தயாராக இருந்தது. நம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சிறந்த பலன்களைத் தந்துள்ளது. ராணுவ சீருடையில் தைரியமாகக் களத்தில் நிற்கும் நம் நாட்டு வீரர்களுக்கு நான் சல்யூட் செய்கிறேன். 1979-ம் ஆண்டு முதல், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அதற்கு அருகில் உள்ள மற்ற நாடுகளும் இரானின் அபாயகரமான நடவடிக்கையைத் தொடர்ந்து பொறுத்துக்கொண்டு வருகின்றன. அந்தப் பொறுமை தற்போது நிறைவுபெற்றுவிட்டது. தீவிரவாதிகளுக்கு உதவுவதில் இரான் முதல் இடத்தில் உள்ளது மற்றும் அவர்கள் வைத்துள்ள அணு ஆயுதங்கள் மொத்த உலகையும் அச்சுறுத்தி வருகிறது. ஆனால், நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

ஒரு இரக்கமற்ற தீவிரவாதி அமெரிக்க உயிர்களை அச்சுறுத்துவதைத் தடுக்க கடந்த வாரம் நாங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்தோம். என்னுடைய வழிகாட்டுதலின்படி அமெரிக்க ராணுவம், உலகின் அதிபயங்கர தீவிரவாதியான காசிம் சுலைமானியைக் கொன்றது. உலகில் நடந்த பல்வேறு மோசமான தாக்குதல்களுக்கு சுலைமானி காரணமாக இருந்தார். அவர் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்து அதன் மூலம் சாதாரண மக்களை அச்சுறுத்தி வந்தார். இரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் போர் ஏற்பட்டதற்கு சுலைமானியே காரணம். சமீபத்தில் அமெரிக்கப்படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்டதும் சுலைமானியால்தான்.

`நேற்று செய்ததை முன்னரே செய்திருக்க வேண்டும்!’- காசிம் சுலைமானி கொல்லப்பட்டது தொடர்பாக ட்ரம்ப்

காசிம் சுலைமானியின் இரு கைகளும் அமெரிக்கா மற்றும் இராக் வீரர்களின் ரத்தத்தால் நனைந்திருந்தது. அவர், கடந்த சில மாதங்களாகவே அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். அதை முறியடிக்கவே சுலைமானி குறிவைக்கப்பட்டு பாக்தாத் தாக்குதல் நடத்தப்பட்டது. சுலைமானியைக் கொன்றதன் மூலம் உலகில் உள்ள அனைத்து பயங்கரவாதிகளுக்கும் நாங்கள் சக்திவாய்ந்த செய்தி அனுப்பியுள்ளோம். தற்போது இரான், அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதற்கு அவர்கள் மீது கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்படும். இரான் தங்களது நடத்தையை மாற்றிக்கொள்ளும்வரை இது அமலில் இருக்கும்.

காசிம் சுலைமானி
காசிம் சுலைமானி
AP

சமீப மாதங்களில் மட்டும் இரான் சர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பல்களைக் கைப்பற்றியுள்ளது. சவுதி அரேபியா மீது தூண்டுதலற்ற தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், அமெரிக்காவின் இரண்டு ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளது. இரானுடன் முட்டாள்தனமான அணுசக்தி ஒப்பந்தம் 2013-ம் ஆண்டு கையொப்பமிடப்பட்டது. அதன் பிறகுதான் எங்களுடன் இரானின் விரோதப்போக்கு கணிசமாக அதிகரித்தது. அணுசக்திக்காக நாங்கள் 150 பில்லியன் டாலர்கள் வழங்கினோம். ஆனால், அவர்கள் அமெரிக்காவுக்கு நன்றி என கூறுவதற்குப் பதிலாக அமெரிக்காவுக்கு மரணம் என கோஷமிட்டனர். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளில் உண்மையில் இதுதான் நடந்தது.

பின்னர் இரான் ஒரு பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டது. நாங்கள் அளித்த நிதியைக்கொண்டு ஏமன், சிரியா, லெபனான். ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளை நரகமாக்கியது. நேற்று முன் தினம் கூட, இராக்கில் உள்ள எங்கள் அமெரிக்கப் படை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இரான் தனது அணுசக்தி மூலம் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். எங்களின் இந்த யதார்த்தத்தை இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இரானுடன் அவர்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டும். உலகைப் பாதுகாப்பானதாகவும் அமைதியானதாகவும் மாற்ற இரான் விஷயத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்
AP

இறுதியாக இரான் தலைவர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் உங்கள் நாட்டு மக்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்பதை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். அதற்கு நீங்கள் தகுதியானவர்கள். உங்கள் நாட்டின் செழிப்பு, உலக நாடுகளுடன் இணக்கம் மற்றும் அனைவருடன் இணைந்து அமைதியாக வாழ்வதற்கு இரானுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது” என ட்ரம்ப் பேசியுள்ளார்.

சுலைமானி இறப்பு தொடர்பாகப் பேசியுள்ள இரான் அதிபர் ஹுசைன் ரௌஹானி, ``இராக் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் அமெரிக்கப் படைகளை உதைத்து வெளியேற்றுவதே, எங்களின் இறுதி இலக்கு. அதுவே சுலைமானி மரணத்துக்கு நாங்கள் கொடுக்கும் சிறந்த பதிலடியாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு