Published:Updated:

`ஃப்ரியா இருந்தா வாங்களேன் ஃப்ளைட்ல ரவுண்ட் போகலாம்!’: ட்ரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு சுவாரஸ்யம்

கிம் ஜாங் உன் - ட்ரம்ப்
News
கிம் ஜாங் உன் - ட்ரம்ப் ( AP )

அமெரிக்காவும், தனது அணு ஆயுத எல்லைக்குள்தான் இருக்கிறது என்றும், அதற்கான பொத்தான் தனது மேசையில்தான் இருக்கிறது என்றும் கிம் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பும், வட கொரியா அதிபர் கிம்மும் இரண்டாவது முறை பேச்சுவார்த்தைக்காக வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்தபோது, தனது `ஏர் ஃபோர்ஸ் ஒன்` விமானத்தில் கிம்மை வட கொரியாவுக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறியதாகவும், அதை கிம் மறுத்ததாகவும் பிபிசி-யின் `ட்ரம்ப் டேக்ஸ் ஆன் த வேர்ல்ட்’ ஆவண நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வட கொரியா, அமெரிக்க அதிபர்கள் ஒருவரை ஒருவர் அச்சுறுத்தும்விதமாகப் பேசிக்கொண்டும், சில சமயங்களில் போர் மூளுமோ என்ற சந்தேகத்தைப் பிற நாடுகளுக்குக் கொடுத்துக்கொண்டும் இருந்தனர்.

முன்னாள் அதிபர் ட்ரம்ப்
முன்னாள் அதிபர் ட்ரம்ப்
AP

அதன் உச்சகட்டமாக ட்ரம்ப்பும், கிம் ஜாங் உன்னும் ஒருவரையொருவர் `பைத்தியம்’ என்றுகூடச் சொல்லிக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல் மொத்த அமெரிக்காவும் தனது அணு ஆயுத எல்லைக்குள்தான் இருக்கிறது என்றும், அதற்கான பொத்தான் தனது மேசையில்தான் இருக்கிறது என்றும் கிம் வெளிப்படையாகப் பேசியிருந்தார்.ட்ரம்ப்பும் வட கொரியா இந்த உலகம் கண்டிராத ஒரு தாக்குதலைச் சந்திக்கும் என்று தெரிவித்திருந்தார் அதுமட்டுமல்லாமல் வட கொரியா மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்திருந்தார். இந்தச் சூழலில்தான் எதிர்பாராதவிதமாக ட்ரம்ப் - கிம் சந்திப்பு நடைபெற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கிம் - ட்ரம்ப் சந்திப்புகள்

இவர்களின் முதல் சந்திப்பு சிங்கப்பூரில் 2018-ம் ஆண்டில் நடைபெற்றது. அதன் பிறகு இரண்டாவது சந்திப்பு வியட்நாமின் ஹனோயில் நடைபெற்றது. இருப்பினும், இந்தச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. வடகொரியா அணு ஆயுத சோதனையைக் கைவிட வேண்டும் என்று கோரிய அமெரிக்காவின் கூற்றை வட கொரியா நிராகரித்தது. தொடர்ந்து தனது ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொண்டது. இருப்பினும், வட கொரிய அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதல் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் விளங்கினார்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்
AP

அதன் பிறகு 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் ட்ரம்ப் தென் கொரியாவுக்கு வந்திருந்தபோது கிம்மை ஏதோ தனது நண்பரை டீக்கடைக்கு அழைப்பதுபோல, `உங்களைப் பார்த்துவிட்டுச் செல்லட்டுமா?’ என ட்விட்டரில் கேட்டார். அதற்கு கிம்மும் அவரை வட-தென் கொரிய எல்லைப் பகுதியில் சந்தித்தார். தென் கொரிய எல்லைப் பகுதியில் நின்றுகொண்டிருந்த ட்ரம்ப்பை முன்னே நடந்து வட கொரிய எல்லைக்குள் கிம் அழைத்துச் சென்றதையும், ட்ரம்ப், கிம் இருவரும் சகஜமாகப் பேசி கைக்குலுக்கியதும் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது. இருவரும் நெருங்கிய நண்பர்களைப்போலத்தான் ட்ரம்பும் பேசினார். அது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகவும் கருதப்பட்டது. மேலும், இந்தச் சந்திப்பு குறித்து அப்போது வட கொரிய அரசு ஊடகம்கூட பெரிதாகச் செய்தி வெளியிட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரயிலில் வந்த கிம்!

வியட்நாமில் நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிந்திருந்தாலும், தற்போது அது குறித்து ஒரு சுவாரஸ்யத் தகவல் வெளியாகியிருக்கிறது. ட்ரம்ப், கிம்மை தனது விமானத்தில் `டிராப்` செய்யட்டுமா என்று கேட்டதுதான் அந்த சுவாரஸ்யச் செய்தி.

ட்ரம்ப் அவ்வாறு கேட்டதற்கு மற்றொரு காரணமும் உண்டு. வட கொரிய அதிபர் கிம் பேச்சுவார்த்தை நடந்த வியட்நாமுக்கு ரயிலில் வந்ததுதான் அந்தக் காரணம்.

முதல் சந்திப்பின்போது சிங்கப்பூருக்குச் சீனாவின் விமானத்தில் சென்றிருந்தார் கிம். ஆனால், ட்ரம்ப்புடனான இரண்டாம் சந்திப்புக்கு வட கொரியாவிலிருந்து ரயிலில் இரண்டு நாள்களாக 2,800 மைல்கள் பயணித்து சீனா வழியாக வியட்நாம் வந்து சேர்ந்தார் கிம். பாதுகாப்புக் காரணங்களுக்காக கிம் ரயிலில் பயணம் மேற்கொள்கிறார் என்றும் கூறப்பட்டது. இந்தநிலையில்தான் `நீங்கள் விரும்பினால் உங்களை இரண்டே மணி நேரத்தில் வட கொரியாவில் விட்டுவிடுகிறேன்’ என்று ட்ரம்ப் கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு கிம் மறுத்துவிட்டார் என்பது வேறு கதை. ஆனால், கிம்மை தனது ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் பயணிக்க ட்ரம்ப் அழைத்தது வெளியுறவுக் கொள்கைகளில் அனுபவம் வாய்ந்த அமெரிக்க அதிகாரிகளையே ஆடிப் போகச்செய்ததாகவும் பிபிசி குறிப்பிட்டிருக்கிறது.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்

ஒருவேளை ட்ரம்ப்பின் அழைப்பை கிம் ஏற்றிருந்தால், அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ விமானத்தில், வட கொரிய அதிபருடனும் அவருடன் வந்தவர்களுடனும் அந்த விமானம் வடகொரிய வான் எல்லைக்குள் நுழைந்திருக்கும். அது பல்வேறு பாதுகாப்பு கேள்விகளையும் எழுப்பியிருந்திருக்கும். ட்ரம்ப் – கிம் சந்திப்பே ஓர் ஆச்சரியமிக்க நிகழ்வாக இருக்கும்பட்சத்தில் இருவருக்குமான அந்த நட்பும், ட்ரம்ப் இவ்வாறு கோரியதும் ட்ரம்புடன் இருந்த அதிகாரிகளுக்கே ஆச்சர்யத்தை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது