அலசல்
சமூகம்
Published:Updated:

அமெரிக்க அதிபர் தேர்தல் க்ளைமாக்ஸ்... சில சுவாரஸ்யக் காட்சிகள்!

ஜோ பைடன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோ பைடன்

முன்னெப்போதும் இல்லாத வகையில், 100 மில்லியனுக்கும் அதிகமானோர் தபால் வாக்குகளைப் பதிவுசெய்தனர்.

உலகின் அனைத்து ஊடகங்களும் அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருந்த சூழலில், அமெரிக்காவின் 46-வது அதிபராகத் தேர்வாகியிருக்கிறார் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன். துணை அதிபராகத் தேர்வுசெய்யப் பட்டிருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், அமெரிக்காவின் `முதல் பெண் துணை அதிபர்’, `கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் பெண் துணை அதிபர்’ எனப் பல `முதல்’ சாதனைகளுக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். தேர்தல் குறித்த செய்தித்துளிகள் சில இங்கே...

* அமெரிக்க அதிபர் தேர்தலில், இதுவரை இல்லாத அளவு 148 மில்லியன் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இவற்றில், 75 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். அதிபர் வேட்பாளர் ஒருவர் பெற்றிருக்கும் அதிகபட்ச வாக்குகள் இதுதான். அதேபோல், ட்ரம்ப்புக்கு 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. இது 2008-ல் ஒபாமா பெற்ற வாக்குகளைவிட அதிகம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் க்ளைமாக்ஸ்...  சில சுவாரஸ்யக் காட்சிகள்!

* முன்னெப்போதும் இல்லாத வகையில், 100 மில்லியனுக்கும் அதிகமானோர் தபால் வாக்குகளைப் பதிவுசெய்தனர். இந்தத் தபால் வாக்குகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவே தொடக்கம் முதல் ட்ரம்ப் கூறிவருகிறார்.

* 2016, 2020 என இரண்டு முறையுமே, தனது இறுதிப் பிரசாரக் கூட்டத்தை ட்ரம்ப் நடத்திய மிச்சிகன் மாகாணத்தில், கடந்த தேர்தலில் அவர் வென்ற கென்ட் கவுன்ட்டி உட்பட 42 இடங்களில், ஜோ பைடன் வென்றிருக்கிறார். அதேநேரம், 2016-ல் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன் வென்ற ஏழு இடங்களை ட்ரம்ப் கைப்பற்றியிருக்கிறார்.

* ஜனநாயகக் கட்சியின் முந்தைய அதிபரான பராக் ஒபாமாவுடன் துணை அதிபராக எட்டு ஆண்டுகள் பணியாற்றிய ஜோ பைடன், தனது மூன்றாவது முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்கு முன்பாக 1988, 2008 என இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

* குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் ஜார்ஜியா மாகாணத்தை, இந்தமுறை வென்றெடுத்திருக்கிறார் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன். இதற்கு முன்பு 1992-ல் ஜனநாயகக் கட்சியின் பில் கிளின்டன் வெற்றிபெற்றார். கடந்த 30 ஆண்டுகளில் இது இரண்டாவது முறை.

* நவம்பர் 8-ம் தேதி நிலவரப்படி, `அரிஸோனா, பென்சில்வேனியா உள்ளிட்ட 10 மாகாணங்களில் தேர்தலில் முறைகேடு’, `வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளோடு ட்ரம்ப் தரப்பு தாக்கல் செய்த அத்தனை வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.

* தேர்தலில் ஜோ பைடன் வென்றதாக அமெரிக்க ஊடகங்கள் நவம்பர் 7-ம் தேதி அறிவித்தன. சொந்த ஊரான டெலாவரின் வில்மிங்டனில் ஜோ பைடன் பேசுகையில், ‘`ஒன்றிணைந்த அமெரிக்காவைக் கட்டமைக்க வேண்டிய நேரமிது. ட்ரம்ப் அதிபராக வேண்டுமென வாக்களித்த 70 மில்லியன் பேருக்கும் சேர்த்து, அமெரிக்கர்கள் அனைவருக்குமான அதிபராகப் பணியாற்றுவேன்’’ என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் க்ளைமாக்ஸ்...  சில சுவாரஸ்யக் காட்சிகள்!

* அவருக்கு முன்னதாகப் பேசிய கமலா ஹாரிஸ், ‘‘துணை அதிபராகப் பதவியேற்க இருக்கும் முதல் பெண்ணாக நான் இருக்கலாம். ஆனால், கடைசிப் பெண் அல்ல. இன்று டி.வி-யில் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சிறுமிக்கும் இது புதிய வாய்ப்புகளை அளிக்கும் நாடு என்பது புரியும்’’ என்றார்.

* வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட பிறகு, நவம்பர் 8-ம் தேதி டெலாவரிலுள்ள செயின்ட் ஜோசப் சர்ச்சுக்கு தன் மகள், பேரன் ஆகியோருடன் ஜோ பைடன் சென்றார். அதேநேரம், வாஷிங்டன் புறநகரிலுள்ள தனது கோல்ஃப் கிரவுண்டில் கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்தார் ட்ரம்ப்.

* ஜோ பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ள ட்ரம்ப் மறுத்துவரும் நிலையில், தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு அவரின் மருமகனும், ஆலோசகருமான ஜேர்டு குஷ்னர், மனைவி மெலனியா ஆகியோர் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

* கடந்த 2013-ல் துணை அதிபராக இந்தியச் சுற்றுப்பயணம் வந்த ஜோ பைடன், மும்பை நிகழ்ச்சியில் பேசுகையில், ``1972-ல் நான் செனட்டராகத் தேர்வு செய்யப்பட்டபோது, `மும்பையிலிருந்து பைடன்’ என்ற பெயருடன் எனக்கு ஒரு கடிதம் வந்தது. மும்பையில் ஐந்து பைடன்கள் இருக்கிறார்கள். ஐந்து தலைமுறைகளுக்கு முன்னர் என் தாத்தா கிழக்கிந்திய கம்பெனியில் வேலை செய்தார். பணி ஓய்வுக்குப் பின்னர் அவர் இந்தியப் பெண் ஒருவரை மணந்துகொண்டார். எனக்கு வந்த அந்தக் கடிதம் குறித்து விசாரிக்காமல் விட்டதற்காக இப்போதுவரை வருத்தப்படுகிறேன்’’ என்று கூறியிருந்தார். ஆனால், பைடனின் உறவினர் என இந்தியாவில் இதுவரை யாரும் உரிமை கோரவில்லை.

இனி என்ன நடக்கும்?

* அமெரிக்காவில் தேர்தல் விதிமுறைகள், மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும். ஆனால், டிசம்பர் 8-ம் தேதிக்குள் முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுவான விதி. ட்ரம்ப், தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத நிலையில், டிசம்பர் 8-ம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

* தேர்வுசெய்யப்பட்ட மாகாணங்களின் பிரதிநிதிகள், டிசம்பர் 14-ம் தேதி அதிபரைத் தேர்வு செய்வதற்காக வாக்குச்சீட்டு முறையில் வாக்களிப்பார்கள். அந்த வாக்குகள் எண்ணப்பட்டு, அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு டிசம்பர் 23-ம் தேதிக்குள் முடிவுகள் அளிக்கப்படும்.

* பிரதிநிதிகள் அவை மற்றும் செனட் அவையின் கூட்டுக் கூட்டம் ஜனவரி 6-ம் தேதி கூட்டப்பட்டு, நாடு முழுவதுமிருந்து அனுப்பப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். அவற்றில், பெரும்பான்மைக்குத் தேவையான 270 வாக்குகளை ஒருவர் பெறும்பட்சத்தில், செனட் அவையின் தற்போதைய தலைவரான துணை அதிபர் மைக் பென்ஸ், தேர்தலில் வெற்றிபெற்றவரை அறிவிப்பார். அமெரிக்க அதிபர், துணை அதிபர் ஆகியோர் ஜனவரி 20-ல் பதவியேற்பார்கள்.